கட்டுரைகள்செய்திகள்வரலாறு
Trending

அழகர் கால் பதித்த ஊர் தேனூர் ; சித்திரைத் திருவிழாவின் உண்மை வரலாறு

மீனாட்சி திருக்கல்யாணம், அழகர் வைகையாற்றில் இறங்குதல் இரண்டையும் ஒன்றாக்கி மதுரையில் கொண்டாடப்படும் மாபெரும் சித்திரை திருவிழாவிற்கு முக்கிய காரணம் வைணவ, சைவ ஒற்றுமையை பலப்படுத்தவே அன்றி வேறொன்றும் இல்லை என்பதே உண்மை. ஹரியும் – சிவனும் ஒன்று என்பதனை உலகிற்கு வலுவாக பறை சாற்றும் வைபவம் சித்திரைத் திருவிழா. மீனாட்சி, சொக்கர் திருக்கல்யாணத்தை காண வரும் அழகர். அவர் வந்து சேரும் முன்பே திருமணம் முடிந்துவிடுவதால் கோவம் கொண்டு வைகையாற்றில் இறங்கி அழகர் மலையில் சாந்தம் அடைந்தார். இதன் இடையே நிகழும் பல்வேறு நிகழ்ச்சிகள் மதுரை குலுங்க குலுங்க அரங்கேறும். நமக்குத் தெரிந்த சித்திரைத் திருவிழா இதுதான்.

ஆனால், அழகரின் கதை வேறு, மீனாட்சி திருக்கல்யாணம் வேறு என்பது வரலாற்று உண்மை. நமது மதுரையின் சித்திரை மாத நாயகன் அழகரின் சொந்த ஊர் எதுவென்று தெரியுமா ? அது தேனூர். சமயநல்லூர் அருகே உள்ள இந்த ஊர் ஆன்மிக மார்க்கத்தில் பல அறிய பெருமைகளையும், அழகரின் வரலாற்றையும் தாங்கி உள்ளது. சித்திரை திருவிழாவிற்கு தேனூரில் மட்டும்தான் கொடியேற்றப்படும். அதன் பின்புதான் அனைத்து மண்டபத்திலும் கொடியேற்றுவது வழக்கம்.


அழகர் முதன் முதலாக எழுந்தருளிய இடம்

இப்படி தேனூரில் நடைபெற்ற சிறப்பு மிக்க திருவிழாவினை மன்னர் திருமலை நாயக்கர் 1953 ஆம் ஆண்டில் மதுரைக்கு மாற்றப்பட்டு கொண்டாடப்படுகின்றது என்ற உண்மை பலருக்கும் தெரியாத ஒன்று. அழகர் எழுந்தருளல், மண்டுக முனிவருக்கு சாப விமோட்­னம் அளித்தல், ஆற்றில் இறங்குதல் என அத்தனை நிகழ்ச்சியும் 13 நாள் விழாவாக தேனூரில் நடைபெற்றது. அதற்கு மாற்றாகத்தான் இன்றைக்கும் தெப்பக்குளம் அருகேயுள்ள தேனூர் மண்டபத்தில் நிகழ்த்தப்படுகிறது. இந்த கல்மண்டபத்தை அன்றைய திருமலை நாயக்க மன்னரால் கட்டப்பட்டதே.

இது அத்தனையும் தேனூர் தேர்வண்கோமான் என்ற அரசனின் தலைமை இடம் என்று சங்ககால கல்வெட்டுகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இப்போது வைகை ஆற்றில் அழகர் எழுந்தருளும் நாளில் அருள்மிகு வீரராகவப் பெருமாள் சென்று அழகரை எதிர் கொண்டு அழைத்து வரவேற்றுக் கொள்வதுபோல் தேனூரில் அழகர் எழுந்தருளிய போது குருவித்துறை அருள்மிகு சித்த ரதவல்லப் பெருமாள் தேனூர் சென்று அழகரை எதிர் கொண்டு அழைத்து வரவேற்பார்.


சிதைந்து கிடக்கும் சிவன் மண்டபம்

அக்காலத்தில் தேனூர் பகுதியில் மண்டுக மகரிசி (சுபதஸ்) என்ற முனிவர் வாழ்ந்துவந்தார். அவருக்கு மோட்சம் கொடுக்கவே அழகர் தேனூருக்கு வருகை புரிந்தார். அதனால் அனைத்து மக்களும் தேனூரை காசிக்கு இணையாக ஒரு மோட்ச பூமியாக கருதுகின்றனர். எனவே இந்த தேனூரை சுந்தர்ராஜன் பூமி என்றும் காசிக்கு இணையான சக்தி பீடம் என்றும் கூறுகின்றனர்.

இதை எல்லாவற்றையும் விட தேனூருக்கு இன்னொரு சிறப்பும் உண்டு. இங்குள்ள அத்தனை மண்டப தாரர்களும் அழகர் பெருமாளுக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் நேர்மாறாக அழகர் பெருமான் தேனூருக்கு வரி செலுத்திதான் தேனூர் மண்டக படியில் எழுந்தருள்வார். இந்நிகழ்வு அன்று முதல் இன்று வரை நடக்கிறது.


சுயம்பு சிவன் ஆலயம்

கள்ளழகர், மீனாட்சி திருக்கல்யாண திருவிழா ஒன்றானக் காரணம் ?
தமிழகத்தில் நாயக்கர் ஆட்சிக்காலத்தில் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் கோவிலில் பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார். அவர் கொண்டு வந்த சீர்திருத்தங்களில் குறிப்பிடத்தக்கது மாசி மாதத்தில் நடைபெற்ற கள்ளழகர் திருவிழாவையும், மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தையும் சித்திரை மாதத்திற்கு மாற்றி அமைத்ததாகவும் மாசி மாதம் அறுவடை என்பதால் தேர் இழுப்பதற்கு ஆட்கள் வருவதில்லை. சித்திரை மாதம் அறுவடை முடிந்து விடுவதால், தேர் இழுப்பதற்கு வசதியாக இருக்கும் என்பதற்காகத்தான் விழா மாற்றப்பட்டது என்ற கருத்து கூறப்பட்டது. மேலும் சைவ. வைணவ சமயத்திற்குள் நிகழ்ந்த போராட்டங்களை அமைதிப்படுத்தும் பொருட்டு இரு சமய விழாக்களை ஒன்றிணைத்து ஒரே விழாக்களை ஒன்றிணைத்து ஒரே விழாவாக மாற்றினார் என்ற கருத்தும் உண்டு.


சுந்தரவள்ளி அம்மன் கோவில்

சிதைந்த நிலையில் கள்ளழகர் கோவில்:
கள்ளழகரின் வரலாறு மற்றும் பழமையை காலம் காலமாகத் தாங்கியிருக்கும் தேனூரை நாம் சென்று பார்வையிட்டோம். அன்றைய காலத்தில் பெரும் கோலாகலமாகக் கொண்டாடிய இடங்கள், மண்டபங்கள் என அனைத்தும் சிதைந்து அதன் சுவடுகள் அழிந்து வருவதைக் கண்டு கண் கலங்கினோம். அழகர் முதன் முதலாக எழுந்தருளிய இடம் முற்றிலுமாக இடிந்து ஆக்கிரமிக்கப்பட்டு அவலமாக காட்சியளித்தது. இன்னும் சில காலங்களில் இந்த இடம் இருந்த சுவடே இல்லாமல் போய்விடக்கூடும்.

இதுகுறித்து இவ்வூரைச் சேர்ந்த முத்தையா (57) நம்மிடம் கூறுகையில், இந்த இடத்தில்தான் அழகர் எழுந்தருளியதாக எனது முன்னோர்கள் கூறியுள்ளனர். ஆனால் நான் சிறு வயதிலிருக்கும் போது நான்கு சுவர் மட்டுமே இருக்கும். உள்ளே எந்தச் சிலையும் இருக்காது. இதனை சுற்றிச் சுற்றி விளையாடுவோம். திருமலை நாயக்கர் மன்னர்தான் இதனை மாற்றிய தாக கூறுகின்றனர். இங்கு கொடிக்கால், ராம கரும்பு, குடலங் கத்திரிக்காய் பயிரிட்டு இதனை அழகர் கோவிலுக்கு கொடுப்பது வழக்கம்.


முத்தையா, சுப்பிரமணியம்

இதேபோன்று இவ்வூரைச் சேர்ந்த சுப்பிரமணியம் (70) கூறுகையில், 1960ல் நான் இங்கு குடியேறினேன். அப்பொழுதே இந்த கோவில் இடிந்த நிலையில் இருந்தது. இங்குதான் அழகர் முதன் முதலில் இறங்கினார். இங்கிருந்து புறப்பட்டதாகவும், அருகிலுள்ள வைகை ஆற்றில் இறங்கியதாகவும் என்னிடம் கூறுவர்.  இங்கு கதிர்கால மண்டபம் உள்ளது. அது முற்றிலுமாக இடிந்துவிட்டது.

மதுரையில் மீனாட்சி திருமணம் நிகழ்ச்சி நடைபெற்ற அதே சமயத்தில் தேனூரில் அழகர் விழா நடைபெற்றது. அப்பொழுது திருமலை நாயக்க மன்னர் ஆனை, சேனைகளுடன் மேளம் முழுங்க இங்கு வருவது வழக்கம். அந்த சமயத்தில் மீனாட்சி தேர் இழுப்பதற்கு ஆட்கள் பற்றாக்குறையாக இருந்ததாவும், அதனை நிவர்த்தி செய்ய இங்குள்ள பெரியவர்களிடம் மன்னர் கேட்டுக் கொண்டதன் பேரில் இந்த திருவிழா மதுரைக்கு மாற்றப்பட்டது.


கார்த்திகை குமரன்

மேலும் இதற்கு மாற்றாக வண்டியூரில் ஒரு மண்டபம் கட்டி அதற்கு தேவஸ்தானத்திலிருந்து காணிக்கைத் தர வேண்டும் என்று அன்றைக்கு தேனூர் சார்பில் கேட்டுக் கொள்ளப்பட்டது. அதற்கு மன்னர் ஒப்புக் கொண்டதாகவும். அதன் படிதான் இன்றைக்கு நிகழ்ச்சிகள் தேனூர் மண்டபத்தில் நிகழ்வதாக தெரிவித்தார். மண்டுக முனிவருக்கு மோட்சம் கொடுத்த திருப்பார் கடலும் இங்குதான் உள்ளது என்றார்.

இதுகுறித்து இவ்வூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் கார்த்திகை குமரன் கூறியது, இது எனது சொந்த ஊர் என்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி. புராணங்கள் தாங்கிய இந்த ஊரை நான் மிகவும் மதிக்கின்றேன். என்னால் இயன்றவற்றை இவ்வூரின் நன்மைக்காக தொடர்ந்து செய்து வருகின்றேன். தேனூர் மண்டபத்தை புதுப்பிக்கும் முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளோம்.


திருப்பாற்கடல் அழகுமலையான் கோவில்

திருவிழா நாளில் இங்கிருந்து அரிசி, பருப்புகள், காய்கறிகள் கொண்டு செல்லப்பட்டு சமைக்கப்பட்டு உணவு வழங்கப்படுவது வழக்கம். தேனூரிலிருந்து செல்பவர்களுக்கு உணவு வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்தினால் ஏற்படுத்தப்பட்ட இந்த வழக்கம் இன்றுவரையில் உள்ளது. தற்போது குடும்பத்திற்கு ஒரு கரை என்ற அடிப்படையில் ஒரு அடுக்கு இலையுடன் மண் பானையில் 5 விதமான சோறுகள் வழங்கப்படுகிறது. இங்கு 2,500 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். 6,700க்கும் மேற்ப்பட்ட ஓட்டுள்ளது. மன்னர் காலத்தில் இங்கு 20க்கும் மேற்பட்ட கோவில்கள் நிறுவப்பட்டன. அதில் பெரும்பாலும் சிதைந்த நிலையில் இன்றுள்ளது.

இதேபோன்று கல்லால் ஆன கிணறுடன் கூடிய பிரம்மாண்ட சிவன் கோவில் ஒன்று இங்குள்ளது. சித்தர்கள் வந்து செல்லும் இடமான இவ் ஆலயம் பராமரிப்பின்றி அழிந்து வருகிறது. மூன்று போகம் விளைந்த ஊர் தோனூர். அழகர் கோவில் மூன்று ஊர்களுக்கான குலுமத் தொட்டிகள் உள்ளது. தேனூர் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்வதற்கு முன்பாக நான்கு மூட்டை நெல்லை அழகர் கோயிலில் சென்று சேர்க்கின்றனர். இந்த நெல்லை தேனூர் விவசாயிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து கோட்டை கட்டி அழகர் கோயிலுக்கு கொண்டு செல்வது வழக்கம். இன்றும் அங்குள்ள குலுமத் தொட்டியில் தேனூர் நெல்‡தான் முதலில் நிறையும்.


மண்டுக முனிவருக்கு மோட்சம் கொடுத்த திருப்பாற்கடல்

எங்கள் ஊரில் அன்றைய தினம் பலரும் செருப்பு அணிந்து வரமாட்டார்கள். பசுமாடு போட்டு உழுதல் கூடாது. பீடி, சிகரெட், மது விற்பனை இதுவரைக் கிடையாது. அழகர் கோவிலில் உள்ள அத்தனை தெய்வங்களும் இங்கும் உண்டு. அதில் ஒன்றான சுந்தரவள்ளி அம்மன் கோவில் இங்கு உள்ளது. இந்த அம்மன் விவசாயத்திற்காக மண்ணை ஏர்கழப்பைக் கொண்டு உழும் பொழுது தோன்றினார். இந்த கோவில் தேனூரின் முக்கிய அம்சமாகும். இக்கோவிலில் சக்தி கிரகம் எடுப்பவர்கள் கோவிலின் எதிர்புறத்தில் சமாதி செய்யப்படுவது வழக்கம். இதேபோல் அக்கால மன்னரால் நிறுவப்பட்ட மிகப்பெரிய சுயம்பு கோவில் ஒன்று உள்ளது. சமீபத்தில் காலபைரவர் சிலை ஒன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளது என்றார்.

அழகரின் தொன்மையான வரலாற்றுச் சின்னமான தேனூரில் உள்ள முக்கிய அடையாளங்கள் இன்று கொஞ்சம், கொஞ்சமாக சிதைந்து அழிந்து வருகின்றது என்பது உண்மை. இங்குதான் அழகர் எழுந்தருளினார், இங்குதான் இறங்கினார், இங்கிருந்த மண்டபம் ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டது. இதுதான் கல்லால் ஆன கிணற்றுச் சிவன் மண்டபம் என்று நம்மிடம் காட்டிய அத்தனையும் சுய அடையாளத்தை இழந்து புதுப்பிக்க வழியின்றி சாய்ந்து கிடந்தது.

தேனூர் அரசு பள்ளி

ஒரு வரலாறு அழிக்கப்படுவதும், ஒரு அடையாளம் அழிவதும் மிகப்பெரிய துயரமாகும். இன்றைக்கு நமக்கு கிடைத்திருக்கும் அத்தனை பழமையும் நமது கலாச்சாரத்தின் முகமாகும். அந்த முகங்களை நாம் கண்டு கொள்ளாது அழிவுக்கு வழி வகை செய்வது எந்த வகையில் ஞாயம் ? என்கின்றனர் இங்குள்ள வரலாற்று விரிவுரையாளர்களும், பொதுமக்களும்.

இங்கு வீழ்ந்து கிடக்கும் ஒவ்வொரு கல்லும் பல நூறு ஆண்டுகளின் வரலாற்றினைச் சொல்லக் கூடியவைகள். எனவே இதனை அரசு அதிகாரிகள் கவனத்தில் எடுத்துக் கொண்டு இருட்டடிக்கப்பட்டு வரும் தேனூரின் வரலாற்று ஆலயங்கள், மண்டபங்கைப் புதுப்பித்து வழிபாடு செய்தால் நமது முன்னோர்களின் தெய்வீகத் தன்மையை நாமனைவரும் நிச்சயம் கண்டுணர முடியும் என்பதே இங்கிருப்போரின் கோரிக்கை. பழமை புதுப்பிக்கப்படுமா ? பறக்கணிக்கப்படுமா ?

தேனூர் சிறப்புக்கள்:

டாக்டர் பி.ஆறுமுகம்

1. சித்திரை திருவிழா அன்று திருமதலிருஞ்சோலை புறபபட்டு வரும் கள்ளழகர் மதுரை வைகை ஆற்றில் ஒவ்வொரு ஆண்டும் எழுந்தருளி இருக்கிறார். இந்நிகழ்ச்சி மதுரையை தலைநகராக கொண்டு ஆட்சி செய்த திருமலைநாயக்கர் தனது ஆட்சி காலத்தில்தான் இந்நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். நாயக்கர் ஆட்சிக்கு முன்பு, திருமாலிருஞ் சோலையிலிருந்து புறப்பட்டு வரும் கள்ளழகர் சமயநல்லூரக்கு அருகில் உள்ள தேனூர் ஆற்றில்தான் எழுந்தருளி இருக்கிறார்.

2. தேனூர் ஆற்றில் கள்ளழகர் எழுந்தருளிய காலத்தில் விழாவின் தொடக்கமாக கொடியேற்றம் தேனூருக்கு அருகில் உள்ள கொடிமங்கலத்தில் நடைபெற்றிருக்கிறது. ஆனால், இன்று அந்த கொடியேற்ற நிகழ்ச்சி மதுரை வைகை ஆற்றில் எழுப்பப்பட்டிருக்கின்ற தேனூர் மண்டபத்தில் நிகழ்த்தப்படுகிறது.

3. சித்திரை திருவிழா அன்று தேனூர் மண்டபத்தில் நடத்தப்படும் சாப விமோசன நிகழ்ச்சிக்கு தேனூரை சேர்ந்த தல்லாடி என்பவர்தான் தவளை, நண்டு, கொக்கு பிடித்துக் கொண்டு வர வேண்டும் என்ற மரபிருந்தது.

4. தேனூரில் புனிதமாக கொள்ளப்படும் ஐந்து வகையான தீர்த்தங்கள் உண்டு. இந்த ஐந்து வகையான தீர்த்தங்கள் அழகர்மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு இந்த தீர்த்தத்தை கள்ளழகருக்கு அபிஷேகம் செய்த பின்னர்தான் விழ தொடக்கம் பெறுகிறது.

5. தமிழகத்தில் பரவலாக வெற்றிலைக் கொடிக்கால் செய்யப்பட்டு வந்தாலும் தேனூர் மக்கள் இக்கொடிக்கால் விவசாயத்தை வித்தியாசமாக செய்கின்றனர். இவர்கள் தங்களது கொடிக்கால் விவசாயத்தில் கள்ளழகருக்கு என்று தனியாக வெற்றிலையை பயிரிடுகின்றனர். அவ்வெற்றிலைக்கு அழகர் வெற்றிலை என்றே பெயரிட்டு அழைகின்றனர். அவ்வெற்றிலையை பறித்து அழகர் கோயிலில் ஒப்படைத்து விடுகின்றனர்.

6. தேனூர் விவசாயிகள் நெல்லை அறுவடை செய்வதற்கு முன்பாக நான்கு மூட்டை நெல்லை அழகர் கோயிலில சென்று சேர்க்கின்றனர். இந்த நெல்லை கோட்டை கட்டி அழகர் கோயிலுக்கு இது ஒவ்வொரு ஆண்டும் தை மாதம் கொண்டு செல்வது வழக்கம்.

7. தேனூர் மக்களின் வாழ்க்கையும் பண்பாடும் கள்ளழகரை மையப்படுத்தியே நடைபெறுகிறது. தவறு செய்யும் மக்களைப் பார்த்து அழகுமலையான் கேட்பான் என்று சொன்னவுடன் தவறு செய்தவர்களும், தவறு செய்ய எண்ணுபவர்களும் தங்களை திருத்தி கொள்கின்றனர்.

8. தேனூர் மக்களுடைய கள்ளழகர் உறவை உற்று நோக்குகின்ற போது மன்னர் திருமலை நாயக்கர் ஆட்சிக்கு முன்பு திருமாலிருஞ்சோலையிலிருந்து புறப்பட்டு வரும் கள்ளழகர் தேனூர் ஆற்றிலேயே எழுந்தருளியிருக்கிறார். மன்னர் பல விழாக்களை மாற்றி அமைத்த போது அகர் ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சியையும் மாற்றி அமைத்து இருக்கிறார். அவ்வாறு மாற்றி அமைத்த போது இவ்விழா தேனூரோடு தொடர்புடையது என்பதனை வெளிப்படுத்துவதற்காக பல தொடர்புகளை வைத்திருக்கிறார் என்ற முடிவுக்கு வரலாம்.

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.05.2017
எழுத்து: மு.இரமேஷ்குமார்

ஹலோ மாத இதழில் அட்டைப்படத்துடன் சிறப்புக்கட்டுரையாக பிரசுரம் செய்யப்பட்டது என்பது கூடுதல் தகவல். எங்களது குழுவினருக்கு தேனூர் குறித்த அரிய பல தகவல்களை வழங்கி இவ்வூரைச் சேர்ந்த கார்த்திகை குமரன் மற்றும் டாக்டர்.பி.ஆறுமுகம் ஆகியோருக்கு எங்களது நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat