விவசாய கட்டுரைகள்
Trending

இலாபம் தரும் வேளாண்மை நுணுக்கங்கள் மற்றும் ஊடுபயிர் சாகுபடிகள்

இயற்கை விவசாயத்தில் ஊடுபயிர் சாகுபடி என்பது ஒரு அங்கமாகும். எல்லா விவசாயிகளும் ஒரே பயிரை மட்டும் நம்பியிராமல் அதனுடன் மற்றொரு பயிரையும் சேர்த்து சாகுபடி செய்தோம் என்றால் கொஞ்சம் அதிகமாக வருமானம் எடுக்க முடியும் அதாவது மானாவாரி பகுதியில் விவசாயிகள் சோளத்தை மட்டும் பயிர் செய்தீர்கள் என்றால் குறைந்த லாபம் மட்டும் பெற முடியும். ஒருவேளை மழை பொய்த்து விட்டது என்றால் சோளப்பயிர் நமக்கு நஷ்டத்தை தந்து விடும். எனவே அந்த சோளப்பயிர் நடுவே வேறு ஏதேனும்  ஊடுபயிர் போட்டு இருந்தால் அதன் மூலம் நமக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது. குறிப்பாக ஊடுபயிர் மூலம் 40 லிருந்து 60% கூடுதலாக லாபம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது

ஊடுபயிரின் அவசியம் மற்றும் நமக்கு கிடைக்கும் நன்மைகள்:

முதன்மை பயிருக்கு பாதுகாப்பு அரணாகவும், நோய் பூச்சித் தாக்குதலை தடுத்தும் விடுகிறது. மண் வளம் பெருகி, நுண்கிருமிகள் மூலம் மண்ணிற்கு தேவையான அங்ககச் சத்தை அதிகரிக்க செய்துவிடுகிறது. ஒரு இலை தாவரகளான சோளம், கம்பு, மக்காச்சோளம் போன்ற பயர்களில் இரு இலை தாவரமான பாசிப்பயிறு, தட்டபயிறு, நிலக்கடலை, உளுந்து போன்றவற்றை ஊடுபயிராக பயிரிடலாம்.

மானாவாரி நிலங்களில் பயிரிடப்படும் பயிர்கள் இலைகளின் மூலம் தான் 80% தங்களுக்குத் தேவையான உணவு உற்பத்தியை சூரிய ஒளியின் மூலம் எடுத்துக்கொள்கின்றன. சூரிய ஒளி இலைகளில் அதிக அளவு இருந்தால் உணவு உற்பத்தி கூடவோ குறையவோ வாய்ப்பு இருக்கிறது.

ஆகவே இந்த சூரிய ஒளியை சற்று குறைக்கும் விதத்தில் நாம் ஊடு பயிர் செய்தால் நிச்சயம் நமக்கு லாபம் கிடைக்கும். விவசாயிகளின் மந்திரம் எப்படி இருக்க வேண்டும் என்றால் “ஒரு மடங்கு நிலம், இருமடங்கு உற்பத்தி, மூன்று மடங்கு லாபம்” என்ற விதத்தில் அமைய வேண்டும்

குறைவில்லா லாபம் தரும் ஊடுபயிர் சாகுபடி:

விவசாயி குறைவில்லா வருவாய் பெற ஒரு முக்கிய பயிர்,அதனுடன் ஊடுபயிர், வரப்பு பயிர், சால் பயிர் சாகுபடி என அனைத்தையும் ஒருங்கிணைத்து செய்தால் அதிக லாபம் பெற முடியும்.  தற்பொழுது மானாவாரி நிலங்கள் விவசாயிகள் கீழ்க்கண்ட முறைகளை கடைபிடிக்கிறார்கள் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் நிலக்கடலையில் நான்கு அல்லது 6வரிசைக்கு ஒரு வரிசை ஆமணக்கு பயிர் செய்கிறர்கள்.

இதனால் நிலக்கடலையில் வரக்கூடிய அனைத்து பூச்சிகளும் முதலில் ஆமணக்கு பயிரை தாக்குகிறது. அதனால் நிலக்கடலை எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.நமக்கு ஆமணக்கில் இருந்து ஒரு லாபம் அதே சமயத்தில் ஆமணக்கு பயிரில் இருந்து  மற்றொரு லாபம் கிடைக்கிறது. இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் நிலத்திற்கு தேவையான அங்ககச் சத்துக்கள் எல்லாம் நன்கு கிடைக்கிறது.

முதன்மை பயிருக்கு அருகில் பயிறு வகைகளான தட்ட பயிறு, உளுந்து காராமணி, பாசிப் பயிறு, மொச்சை, அவரை போன்றவற்றை போடுவதால் அவற்றின் மூலம் நமக்கு மகசூலும், அறுவடைக்கு பின்பு அதன் கழிவுகள் மண்ணிற்கு உரமாகிறது. எடுத்துக்காட்டாக பருத்தியில் ஊடுபயிராக என்ன என்ன பயிர் போடலாம் என்றால் கண்டிப்பாக பயறு வகையான உளுந்து /பாசிப்பயறு தட்டைப்பயறு, வெண்டை கொத்தவரங்காய், அவரை போன்ற 80 முதல் 85 நாட்கள் வயது உடைய பயிரை பயிரிடலாம்.

வரப்பு பயிராக பருத்தி வயலைச் சுற்றி சூரியகாந்தி பயிர் செய்யலாம் . இந்த சூரியகாந்தி பயிர் பருத்திக்கு பாதுகாப்பு அரணாக விளங்கும். அதே சமயம் சூரியகாந்தி வயலைச் சுற்றி சோளம், கம்பு போன்றவற்றை வரப்புப் பயிராகவும் ஊடுபயிராகவும் சாகுபடி செய்யலாம். தென்னையில் ஊடுபயிராக இஞ்சி, வாழை, கோக்கோ, முருங்கை, பயறு வகைகள், காய்கறிகள் போன்றவற்றை சாகுபடி செய்து அதன் மூலம் நாம் அதிக லாபம் பெறலாம்.

தென்னைகேற்ற ஊடுபயிர்:

பொள்ளாச்சி விவசாயிகள் தென்னை மரத்தில் மிளகு கொடிகளை ஏற்றி விடுகிறார்கள். இதன் மூலம் தென்னையில் வரும் வருமானத்தை விட மிளகில் அதிக லாபத்தை பெற்று விடுகிறார்கள்.  தென்னையில் புத்திசாலித்தனமாக லாபம் தரும் மிளகினை ஊடுபயிர் செய்வதால் நல்ல லாபம் பெற்று வருகின்றனர்.

வாழை சாகுபடி ஊடுபயிர்:

வாழை சாகுபடிக்கு ஆடிப்பட்டம் மிகச்சிறந்ததாகும். தென்மேற்கு பருவமழை தொடங்க இருப்பதால், தற்போது நடவு செய்யும் பயிரின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். பொதுவாக தென்னையில் ஏதோ ஊடுபயிர் இருக்க வேண்டும். அது தென்னை வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

இலைவாழை, மஞ்சள், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், கருணைக்கிழங்கு, பைனாப்பிள், பாக்கு மற்றும் கறிப்பலா போன்றவை தென்னையின் சிறந்த ஊடுபயிர்களாகும். இலைவாழை பயிரிடும் போது தோப்புகளுக்கு இயற்கையாகவே குளிர்ந்த சூழ்நிலை கிடைக்கிறது.

ரகங்கள் இலைவாழைக்கு, பூவன், கற்பூரவள்ளி, மொந்தன் வாழை ரகங்கள் சிறந்ததாகும். திசு வாழை அல்லது கிழங்கு மூலம் நடவு பயிரிடலாம். ஒரு ஏக்கர் தோப்பில், 4.5 அடிக்கு, 4.5 அடி இடைவெளியில் இரண்டாயிரத்து, 150 வாழைக்கன்றுகள் வரை நடவு செய்யலாம். தார்வாழையை விட, இலைவாழை சாகுபடி எளிதாகும். இவற்றில் மரத்துக்கு முட்டுக்கொடுக்கும் வேலை மற்றும் திருட்டு பயம் இருக்காது. காற்று, மழையால் ஏற்படும் பாதிப்புகளும் மிக குறைவு.

கரும்கேற்ற ஊடுபயிர்:

கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் தங்கள் கரும்பு பயிரில் ஊடுபயிராக உளுந்து, பச்சைப்பயறு போன்ற பயறு வகைகளையும், சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு போன்ற பசுந்தாள் உர பயிர்களையும் ஊடுபயிராக சாகுபடி செய்து மண் வளத்தை அதிகரித்து உபரி வருமானம் பெறலாம்.

இந்த ஊடுபயிர் சாகுபடி மூலம் கரும்பு பயிர் இளங்குருத்து புழு தாக்குதலில் இருந்து பாதுகாப்பதுடன் செடிகள் வளர்வதையும் கட்டுப்படுத்துகிறது. கரும்பு பயிரில் ஊடு பயிர் செய்யும் போது,  குறுகிய வயதுடைய கிளைகள் இல்லாத மேலோட்டமான வேர்களைக் கொண்ட உளுந்து, பச்சைப்பயறு,  சணப்பை, தக்கைப்பூண்டு போன்ற பயிர்களை கரும்பு நடவு செய்த பின்பு கரும்பு பார்களுக்கிடையே ஒரு வரிசையிலோ அல்லது இரு வரிசையிலோ நடவு செய்ய வேண்டும்.

மணற்பாங்கான நிலத்திற்கு சணப்பையும், களிமண் நிலத்திற்கு தக்கைப்பூண்டும் ஊடுபயிர் விதைப்பு செய்ய வேண்டும். சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை 45-50 நாட்களில் பூக்கும் தருணத்தில் மடக்கி உழுது விடுவதால் நிலத்தில் அங்ககப் பொருட்கள் அதிகமாகி உற்பத்தித் திறன் அதிகரிக்கிறது.எனவே கரும்பு நடவு செய்யும் விவசாயிகள் உளுந்து, பாசிப்பயறு போன்ற ஊடுபயிர்களை சாகுபடி செய்து உபரி வருமானம் பெறுவதோடு, சணப்பை மற்றும் தக்கைப்பூண்டு பயிர்களை பயிரிடுவதால் மண் வளத்தைப் பெருக்கி பயன் அடையலாம்.

கரும்பு வயலில் ஏக்கருக்கு 4 கிலோ உளுந்து அல்லது பாசிப்பயறு அல்லது சோயா மொச்சை 6 கிலோ கரும்பு நட்ட 3-ம் நாள் ஊடுபயிராக விதைக்கலாம். நீடித்த நவீன கரும்பு சாகுபடியில் அதிக இடைவெளியில் இருப்பதால் ஊடுபயிராக காய்கறிகள் பயறுவகைகள், வெள்ளரி, தர்பூசணி, பசுந்தாள் உர பயிர்களை பயிர் செய்யலாம். மேலும் ஊடுபயிர் செய்வதால் அதிக லாபம், களை கட்டுப்பாடு, மண் வளம் பெருக்க முடியும்.

பருத்திக்கேற்ற ஊடுபயிர்:

பருத்தி விவசாயிகள் ஊடுபயிர் சாகுபடி செய்வதன் மூலம் கணிசமான லாபம் பெறலாம். பருத்தி நடவு 6 வரிசைக்கும் ஒரு வரிசை தட்டப்பயறு  நடவு செய்ய வேண்டும். அல்லது மக்காச்சோளம் இதேபோல நடவு செய்யலாம். மேலும் ஊடுபயிராக வரப்பு ஓரங்களில் வெண்டை அல்லது ஆமணக்கு பயிரிடலாம்.

பருத்தி பயிரில் தட்டப்பயறு ஊடுபயிராக சாகுபடி செய்வதால் பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகி அசுவுனியை பிடித்து உண்ணும். பருத்தியை தாக்கும் காய்ப்புழு முதலில் சூரியகாந்தி பயிரையே தாக்குவதால் கட்டுப்படுத்துதல் இலகுவாகிறது. மேலும் சூரியகாந்தியின் மகரந்த்தினை பருத்தியின் சூழின் உன்னியாக கண்ணாடி இலைப்பூச்சி அதிகம் விரும்பி உண்ணும். இவ்வாறு சாறு உறிஞ்சும் பூச்சிகளையும், காய்ப்புழுக்களின் இளம் பூச்சிகளையும் உண்ணும்.

மக்காச்சோளம் ஊடுபயிர்:

மக்காச்சோளம் ஊடுபயிராக விதைப்பதால் அதன் மகரந்தத்தை உண்டு, பொறிவண்டு இனப்பெருக்கம் அதிகமாகிறது  மேலும் இது பருத்தியை தாக்கும் வெண்டை ஊடுபயிராக பயிரிடுவதால், பருத்தியினை தாக்கும் காய்ப்புழுக்கள் அதிகமாக வெண்டைப் பயிரையே விரும்பி உண்பதால் அதன் தாக்குதல் வெண்டைப் பயிரில் அதிகமாக இருக்கும். இதனை கட்டுப்படுத்துதல் 6 வரிசைக்கு ஒரு வரிசை பயிரிட்டு புழுக்களை கவர்ந்து அழிக்க வேண்டும்.

வரப்பு ஒரங்களில் ஆமணக்கு பயிரிடுவதால் பருத்தியினை தாக்கும் புகையிலை புழு (புரோடினியா) தாக்குதல் பருத்தி பயிருக்கு குறைகிறது. மேலே குறிப்பிட்டுள்ள ஊடு பயிர்களை தினந்தோறும் கண்காணித்து முட்டை குவியல் புழுக்களை கையால் பொறுக்கி அழிக்கவும். மேலும் பருத்தியை தாக்கும் அனைத்து காய்ப்புழுக்களையும் ஒருங்கிணைந்த முறையில் கட்டுப்படுத்தலாம்.

இப்படி நாம் முதன்மை பயிருடன் ஊடுபயிராக சாகுபடி செய்வதால் மிகுந்த நன்மை கிடைக்கும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருப்பீர்கள் ஆகவே இந்த மானாவாரி சமயத்தில் கண்டிப்பாக ஊடுபயிரை பயன்படுத்துங்கள். உண்மையாகவே உங்களது வருமானத்தை ஊடுபயிர் சாகுபடி இரட்டிப்பாக்கும் என்பதில் ஐயமில்லை.

கட்டுரை ஆக்கம்:
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
என்.மதுபாலன்

ஓய்வுபெற்ற வேளாண்துறை உதவி இயக்குனர்,
அலைபேசி எண்: 9751506521
தர்மபுரி மாவட்டம்
…………………………………………………………………………….
Spread the love

Hello Madurai

Hello Madurai Website it's Local Content Update Site. Hello Madurai Owner Mr.M.Ramesh Kumar.   Another One Hello Madurai  App Google Play Store Available. This Site and App Content... News, Medical, Religions, Agri, Women, Extras… Hello Madurai Monthly Magazine Print Copy Releasing Date  01.03.2017.  It's Approved Central Government License. Running Three Year's Complete. Hello Madurai Amazing Magazine in Madurai. 52 Multi color Page. Unfortunately  Printing Stop (Corona Time) 01.04.2020. Now Going On Online  Service. It is likely to be a printing format again in the future. Soon the day for that. Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com Thanking You !!

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat