கட்டுரைகள்

ஊர் உறங்க ஊதும் விசில்; நாகமலைப்புதுக்கோட்டை மக்கள் நலச்சங்கம்

இன்றைக்கு பாதுகாப்பு என்பது நம் வீட்டுக்குள்ளும் இல்லை என்பதே உண்மை. பக்கத்து வீட்டில் கழுத்தறுத்து களவாடிச் சென்றால் மறுநாள் காலையோ அல்லது பூட்டிய வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசிய பின்புதான் தெரிகிறது கொலையுண்டு கிடப்பது. நமது பாதுகாப்பின்மைக்கு எப்போதும் காவல்துறை மீது மட்டுமே குற்றம் சுமத்துதல் நியாயமற்றது. அவர்களுக்கு நம்மால் ஆன முழு ஒத்துழைப்பை வழங்கினால் மட்டுமே நாம் வசிக்கும் இடங்களில் நிகழும் கொலை, கொள்ளை, மோசடி ஆகிய குற்றங்களை தடுக்க முடியும் என்பதை நாம் அனைவரும் முதலில் உணர வேண்டும்.

அப்படி நாகமலைபுதுக்கோட்டையில் அமைந்துள்ள தங்களது என்.ஜி.ஜி.ஓ. காலனி மீதும், அங்கு வசிக்கும் மக்கள் மீதும் அக்கறை கொண்ட மக்கள் நலச் சங்கம் ஊர் தூங்க ஊதும் விசில்களை உருவாக்கியுள்ளது. அப்பணியை ஒவ்வொரு இரவும் செய்து வருபவர்கள் எஸ்.ஆர்.ராஜசேகரன், பி.பாண்டியராஜன், எம்.ராஜேந்திரன். இவர்கள் அப்படி என்னதான் செய்கிறார்கள் என்று தெரிந்துகொள்ள தொடர்ந்து வாசியுங்கள்…

மதுரை நாகமலைபுதுக்கோட்டை திருவள்ளுவர் தெருவில் அமைந்துள்ளது மக்கள் நலச் சங்கம். இதன் தலைவர் ஓய்வுபெற்ற பேராசிரியர் கந்தன் (74), செயலாளராக ஜெயராஜ் நாடார் மேல்நிலைப் பள்ளி முன்னாள் தலைமை ஆசிரியரும், பேராசிரியருமான ஏ.பாலசந்திரன் (60). பொருளாளராக ஓய்வு பெற்ற மின்வாரிய பொறியாளர் (80) டி.ஜெயராமன் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.

மக்கள் நலச்சங்கம் குழுவினர்கள்

இவர்களுக்கு அடுத்த கட்ட நிலையில் துணைத் தலைவர்களாக பி.வின்சென்ட், ஆர்.எம்.தங்கையா, இணைச் செயலாளர்களாக என்.இளங்கோவன், கே.பாலசுப்பிரமணியன், டி.ஜபருல்லா, செக்கியூரிட்டி சர்விஸ் ஒருங்கிணைப்பாளராக எஸ்.சிவசுப்பிரமணியன் மற்றும் சட்ட ஆலோசகர்களாக பி.சந்தானம், ஆர்.ராமகிருஷ்ணன் உள்பட உறுப்பினர்கள் பலர் இதில் உள்ளனர்.

இந்த மக்கள் நலச் சங்கம் துவங்குவதற்கு முக்கிய காரணம் இப்பகுதியில் அன்றைக்கு நகை பறிப்பு, வீடு புகுந்து திருடுதல் ஆகியவை அதிகமாக இருந்ததே. அதைக் கட்டுப்படுத்தவும், இக்காலனியில் உள்ள அத்தியாவசிய பிரச்னைகளை சரிசெய்யவும் காவல்துறை உதவியுடன் 1993 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது என்றார் இச்சங்கத்தின் தலைவர் பேராசிரியர் கந்தன்.

எங்கள் சங்கத்தின் கீழ் என்.ஜி.ஜி.ஓ. காலனியின் நான்கு பகுதிகளையும் ( கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு) பாதுகாக்க 11க்கும் மேற்பட்ட செக்கியூரிட்டிகள் பணிபுரிந்தனர். ஆனால், இன்றைக்கு 3 நபர்கள் மட்டுமே உள்ளனர். முன்பிருந்த சமூக பார்வை இன்றைக்கு முற்றிலுமாக மங்கிவிட்டது என்பதற்கு இதுவே சாட்சி.

இன்றைக்கு இப்பகுதியில் சுமார் 2000க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. அவர்களின் பாதுகாப்பிற்கு எங்களால் இயன்ற முயற்சியாக செக்கியூரிட்டி பிரிவில் வடக்கு மற்றும் மேற்கு பகுதியை ராஜசேகரனும், கிழக்கு பகுதியை ரஜேந்திரனும், தெற்கு பகுதியை பாண்டியராஜனும் இரவு 7.45 மணி முதல் அதிகாலை 5.30 மணி வரை தெருத் தெருவாக சென்று விசில் ஊதிக் கொண்டு விடிய, விடிய காவல் காக்கின்றனர்.

மக்கள் நலச்சங்கம் குழுவினர்கள்

இவர்களுக்கு நாங்கள் வழங்கும் சம்பளம் மாதம் ரூ.4,000 மட்டுமே. பாதுகாப்பிற்கென மாதம் ஒரு முறை ஒரு வீட்டிற்கு ரூ.40 வசூல் செய்கின்றோம். 2,000 வீடுகள் உள்ள இக்காலனியில் 700 வீடுகளிலிருந்து மட்டுமே இத்தொகையினை வழங்குகின்றனர். அவ்வாறு அளிக்கும் அத்தனை குடும்பங்களுக்கும் எங்களது சங்கம் சார்பில் மிகுந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம். அவர்கள் வழங்கும் தொகையை வைத்துதான் செக்கியூரிட்டிகளுக்கு தேவையானவற்றை நாங்கள் வழங்குகின்றோம்.

இது தவிர வசூல் செய்யும் பணத்திலிருந்து இவர்களுக்கு 8 சதவீதம் இன்சென்டிவ், மார்கழி மாதத்தில் இங்கிருக்கும் கோவிலுக்கு வரும் பெண்களின் பாதுகாப்பிற்காக கூடுதலாக ரூ.300ம், ஒரு ஆண்டுக்கு ஒரு செட் சீருடை, குளிர் காலத்தில் கம்பளிப் போர்வை ஆகியவை வழங்கப்படுகிறது. மேலும் கூடுதலாக மேலக்குயில் குடி ரோட்டில் அமைந்துள்ள எஸ்பிஓஏ பள்ளியில் 5000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இங்கு, காலை வேலையில் அரசு பஸ், பள்ளி பஸ், வேன், ஆட்டோ என 400க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்லும் பரபரப்பான இப்பகுதி குறுகிய சாலையாகும்.

எனவே, பொதுமக்கள், படிக்கும் மாணவர்களின் பாதுகாப்பை கருதி காலை 7.30 மணியிலிருந்து 9.30 மணி வரை அப்பகுதில் மூன்று முக்கிய வளைவுகளில் இம் மூவரும் ட்டிராபிக் கண்ரோலராக செயல்படுகின்றனர். இதனால் இன்று வரை வாகன விபத்து முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. இதற்கென அப்பள்ளி சார்பில் ஒரு நபருக்கு ஒரு நாள் வீதம் ரூ.70 மூன்று நபர்களுக்கு ( பள்ளி இயங்கும் நாட்களுக்கு மட்டும்) வழங்கப்படுகிறது.

இது போக தீபாவளி பண்டிகையில் வீடுகளில் வசூலிக்கும் தொகையை போனசாக நாங்கள் அவர்களுக்கே சமமாக பிரித்துக் கொடுக்கின்றோம். கூடுதலாக பொங்கல் பண்டிகை இனாமும் வழங்குகின்றோம். இவர்கள் மாதம் இருமுறை மட்டுமே விடுப்பு எடுக்க அனுமதி என்று கூறினார் கந்தன். இரவு முழுவதும் விசில் ஊதும் செக்கியூரிட்டிகளிடம் இதுகுறித்து நாம் கேட்கையில், நாங்கள் அனைவரும் 50 வயதைக் கடந்தவர்கள்.

எஸ்.பி.ஓ.ஏ. பள்ளி பேருந்துக்கு பயண வழிகாட்டிகள்

கிட்டதட்ட 8 வருசமா நாங்க இங்க வேலை பார்க்கிறோம். முன்பு எங்களுடன் 8 பேர் இருந்தனர் ஆனால் இன்றைக்கு நாங்கள் மூவர் மட்டுமே உள்ளோம். காரணம் சம்பளக்குறைவு ஒன்றே. ஏடிஎம் வாட்ச்மென் வேலைக்கே நல்ல சம்பளம் கொடுக்குறாங்கணு நிறைய பேர் போய்ட்டாங்க. ஆனா இது எங்க ஊர்… எங்க மக்கள்… அவுங்கள பாதுகாப்பது எங்களுடைய கடமை. இதை ஒரு சமூகப் பணியாதான் நாங்க செய்றோம். வெறும் பணத்துக்காக இல்லைங்க.

மேலக்குயில்குடி ரோட்டில் காலையில அவரச அவசரமா வேலைக்கு, ஸ்கூல்லுக்குனு பைக், கார், ஆட்டோ, பஸ் என குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த பாதையில வேகமாதான் வருவாங்க. அவுங்கள நாங்கதான் பார்த்து பார்த்து நிப்பாட்டி சரியான முறையில வழி நடத்துறோம். எங்களுக்கு அவுங்களும் முழு ஒத்துழைப்பு கொடுக்குறாங்க.

இது எங்களுக்கு பெரிய மனநிறைவை கொடுக்குது. எஸ்பிஓஏ பள்ளியில கொடுக்கிற தொகையை விட அந்த குழந்தைகள் மகிழ்ச்சியோடு பாதுகாப்புடன் எங்களைக் கடந்து செல்வதுதான் பெரிய மகிழ்ச்சி. அதுக்காகவே நாங்க மூனுபேரும் அங்கு சரியான நேரத்துக்கு வந்துருவோம்.

அதுபோக ராத்திரியில இந்த காலனியை கண்காணிச்சுகிட்டே இருப்போம். எங்களுக்கு சந்தேகமான நபர் யாராவது இருந்தா உடனே யார் ? என்ன ? என்று விசாரிப்போம். பல தடவை திருடர்களை விரட்டி பிடிச்சுருக்கோம். அதுல பலத்த காயம் அடைஞ்சுருக்கோம். எங்களால முடிந்த அளவு பாதுகாப்பு கொடுக்கின்றோம். இங்கு வசிக்கும் எல்லோருமே எங்களை அவுங்க குடும்பத்தில் ஒருத்தராதான் பார்க்குறாங்க. நாங்களும் உரிமையா எங்க வீடுபோலதான் அவங்களுக்கான பாதுகாப்பை வழங்குகின் றோம் என்று புன்னகையுடன் கூறினர் மூவரும்.

இதுமட்டுமில்லாது இச்சங்கம் சார்பில் ஜவகர் மெயின் தெருவில் 4 சிசி டிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. இங்கு ஏதாவது திருட்டோ, செயின் பறிப்போ நடந்தால் காவல்துறையினர் உனடியாக சங்க கட்டிட அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள சிசி டிவி‡க்கான மானிட்டரில் அதைக் கண்காணித்து திருடர்களை பிடித்து விடுகின்றனர்.

ஆனால் இந்த ஒரு இடத்தில் மட்டும் சிசி டிவி பொருத்தப்பட்டுள்ளது. மேலும் நான்கு இடங்களில் பொருத்த தயாராகவுள்ளோம். அதன்படி, வெள்ளைச்சாமி கல்லூரி எதிர்புறம், மேலக்குயில் குடி ரோடு ஆர்.சி.சர்ச், சதாசிவம் மெயின் ரோட்டின் முடிவில் சிஎஸ்ஐ சர்ச் மற்றும் ராஜேந்திர பிரசாத் தெரு.

இந்த நான்கு பகுதியிலும் சிசி டிவி கேமரா பொருத்திவிட்டால் இப்பகுதி முழுவதும் முற்றிலும் பாதுகாப்படும். பொதுமக்கள் எவ்வித பயமும் இன்றி வசிக்கலாம். ஆனால், சிசி டிவிக்கான மானிட்டரை எங்கு வைப்பது ? அதற்கான இடத்தை யார் கொடுப்பார்கள் ? என்பது தான் எங்களுக்கு இன்று வரை விடை தெரியாத கேள்வியாகவே உள்ளது. பல காரணங்கள் கூறி எல்லோரும் இதிலிருந்து நழுவுகின்றனர். மற்றவர்களின் பாதுகாப்பை விட தங்களின் சுய நலமே முக்கியமாகிவிட்டது என்று, இன்று வரை இத்திட்டம் வெறும் கனவாகவே உள்ளது என கவலையுடன் தெரிவித்தனர் இச்சங்கத்தினர்.

இதைப் படித்த பிறகு எங்களுக்கு அப்பகுதியில் மானிட்டர் வைக்க இடம் அளித்தால் உடனடியாக சிசி டிவி கேமரா பொருத்திவிடுவோம். மேலும், சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இப்பகுதி இளைஞர்கள் அல்லது நடுத்தர வயதினர் எங்களுடன் இணைந்து செயல்பட வந்தால் நாங்கள் வரவேற்கின்றோம். இரவு பாதுகாப்பில் இப்பகுதி இளைஞர்கள் விரும்பி இணைந்து செயல்பட்டால் அதற்கு தேவையான எல்லா வசதிகளும் செய்து கொடுக்க தயாராக இருக்கின்றோம் என ஏக்கத்துடன் கூறுகின்றனர் இவர்கள்.

அரசு பணி, கை நிறைய சம்பளம், பணி ஓய்வு, 60 வயது என எல்லாவற்றையும் கடந்து சமூகம் குறித்தும், தாங்கள் வசிக்கும் பகுதி மக்களின் நலன் கருதியும் மக்கள் நலச் சங்கத்தை விட்டுவிடாது நடத்தி வரும் இவர்களுக்கு இப்போது தேவை தன்னநலமற்ற தங்களைப் போன்று சமூகத் தொண்டு புரிய முன்வரும் நபர்கள் மட்டுமே.

இரவு முழுவதும் இங்குள்ளவர்கள் கவலையின்றி தூங்குவதற்கு 7.45 மணிக்கு ஆரம்பிக்கும் விசில் சப்தம் நள்ளிரவு 12.30, 1.30, 3.00 அதிகாலை 5.00 மணி வரை அடித்துக் கொண்டே இருப்பவர்களின் வயதும் 50தை தாண்டியது. தினம் தினம் உறக்கத்தை தொலைத்து இவர்கள் சம்பாதிக்கும் தொகை மிக மிகக் குறைவு.

ஊர் உறங்க ஊதும் விசில்கள்

இவர்களால் எங்களுக்கு பாதுகாப்பு ஒன்றுமில்லை, தேவையுமில்லை என்று அலட்சியப்படுத்துபவர்களின் வீட்டு வாசல்களுக்கும் சென்று உங்கள் பாதுகாப்பிற்கும் நாங்கள் இருக்கின்றோம் என்று விசில் ஊதும் இவர்களின் விழிகளுக்கு முன்னால் நிறையபேர் சமூக விழிப்பின்றி தூங்கிக் கொண்டிருக்கும் சுயநலமானவர்கள் என்பதை விட நாம் வேறு என்ன பெரிதாகச் சொல்லி விட முடியும். மதுரையில் எந்தப் பகுதியில் நீங்கள் வசிப்பவராக இருந்தாலும் சரி, இப்படி பட்டவர்களின் விசில் சப்தம்தான் உங்கள் நிம்மதியான உறக்கத்திற்கும் ஊதப்படுகிறது என்பதை ஒரு நிமிடம் சமூக சிந்தனையுடன் விழித்துப்பாருங்கள்…!!!

Hello: 9442027345, 98948 90922

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.03.2017
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat