கட்டுரைகள்மதுரை
Trending

கலப்படம் இல்லாத செக்கு எண்ணெய்; கலக்கும் மதுரை மீனா குமாரி

கலப்படம் இல்லாத பொருள் வேண்டும் என்றால், அது எந்தக் கடையில் கிடைக்கும்? இன்றைக்கு அத்தனையிலும் கலப்படம் நிறைந்து வழிகிறது. இதில் நாம் உண்ணும் உணவு பொருட்களில்தான் அதிகப்படியாக நடைபெறுகிறது. இதை எப்படி இனங் கண்டு தவிர்ப்பது என்று கேட்டால் அது இயலாது. உண்மைகளை விட போலிகள் தத்ரூபமாக இருக்கிறது. மணம், நிறம் என எந்தவிதப் பாகுபாடு இன்றி ஒன்றாகவேத் தென்படும். இந்தக் கலப்பட உணவுப் பொருட்கள்தான் நமது உடல் ஆரோக்கியத்தை மொத்தமாக கொன்று தின்று விடுகின்றன என்கிறார் டாக்டர்.எஸ்.மீனாகுமாரி.

மதுரையை சொந்த ஊராகக் கொண்ட இவர் பயோ டெக்னாலஜியில் பி.ஹச்.டி முடித்து, உதவி பேராசிரியராக வெள்ளைசாமி நாடார் கல்லூரி, பெரம்பலூர் தனலெட்சுமி சீனிவாசன் கல்லூரி, தஞ்சாவூர் மருதுபாண்டியன் கல்லூரி என 11 ஆண்டுகள் கல்லூரியில் பணியாற்றி அதை தூக்கி எறிந்துவிட்டு, மதுரை பாத்திமா கல்லூரி பின்புறம் பாரதிதாசன் தெருவில் கடந்த 2 ஆண்டுகளாக உழவன் அக்ரோ ஆர்கானிக் எனும் அங்காடியை நடத்தி வருகிறார். இங்கு 100 சதவீதம் இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட சிறுதானியங்கள், பருப்புகள், 34 வகை அரிசிகள், கருப்பட்டி, நாட்டு சர்க்கரை, வெல்லம் மற்றும் எண்ணெய் என 100 வித ஆர்கானிக் பொருட்கள் கிடைக்கும்.

இதுகுறித்து மீனா குமாரி நம்மிடம் பகிர்கையில், புற்றுநோயால் இறந்த என் அம்மாவின் மரணத்திற்கு என்னக் காரணம் என்ற கேள்விக்கு கிடைத்த விடை உணவு பழக்க முறை மாற்றம் என்பதே, நான் இத்துறைக்குள் நுழைய மிக முக்கிய காரணம். பூச்சிக் கொல்லி மருந்துகள் அதிகம் பயன்படுத்திய உணவுப் பொருட்களை உட்கொண்டதே. எனவே அது இல்லாது இயற்கை விவசாயத்தில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பொருட்கள் மீது ஆர்வம் வந்தது. நாளடைவில் இது நம்மோடு நின்றுவிடாது பலருக்கும் பயன்பட வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் உழவன் அக்ரோ விற்பனை அங்காடி.

கொள்முதல்:
எங்களிடம் உள்ள சிறுதானிய பயிர்கள் அனைத்தும் மலையூர் எனும் கிராமத்தை தத்தெடுத்து அங்கு விளையும் தானியங்களை வாங்கிக் கொள்கின்றோம். அரிசியை பொறுத்தவரையில் மதுரையைச் சுற்றியுள்ள விவசாயிகளிடம் நேரடியாகச் சென்று வாங்கிக் கொள்கின்றோம். வியாபாரிகளை தவிரிக்கின்றோம். இடைத் தரகர்கள் அற்ற நிலையில் இயற்கை சார்ந்து விவசாயம் செய்யும் விவசாயிகளிடம் நேரடித் தொடர்பு கொண்டு பெறுகின்றோம். எனவே, இயற்கை சாகுபடி விவசாயிகள் எங்களை தொடர்பு கொள்ளலாம்.

போலியை எப்படிக் கண்டுபிடிப்பது ?
பார்ப்பதற்கு நமக்கு நிச்சயமாகத் தெரியாது. முதலில் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்னவென்றால் இயற்கை சார்ந்த எந்த ஒரு உணவுப் பொருளும் பள பளப்பாக இருக்காது. சுமாராகத்தான் இருக்கும். சுவை அதிகமாக இருக்கும். சமைக்கும்போது இயற்கை சார்ந்த உணவு பொருளுக்கும், கெமிக்கல் கலந்த உணவுப் பொருளுக்கும் வித்தியாசங்கள் தெரியும். அதையும் மீறி நாம் தெரிந்து கொள்ள வேண்டுமெனில் அமிலக்காரத் தன்மையை வைத்து கண்டுபிடிக்கலாம். எடுத்துக்காட்டாக கடைகளில் நீங்கள் வாங்கும் இயற்கை அரிசியை தண்ணீரில் லேசாகக் கரைத்த பின்பு அந்த தண்ணீரை அமிலக்காரநிலை (Vக்ஷி பேப்பர்) வைத்து பார்க்கும்போது அதில் காரத் தன்மை இருந்தால் அதில் பூச்சி மருந்து கலந்திருப்பதை தெரிந்து கொள்ளலாம்.

எண்ணெய் செக் நிறுவ காரணம் ?
எண்ணெய்யில் கலப்படும் செய்வதுபோல் நான் வேறெதிலும் கண்டதில்லை. இங்குள்ள பல செக்கில் எண்ணெய்‡ஐ எப்படி ரூ.100க்கும், ரூ.140க்கும் கொடுக்க முடியும் ? இங்கிருந்துதான் எனக்கான கேள்வி துவங்கியது. நான் திருச்சியிலிருந்துதான் இயற்கை எள் கிலோ ரூ.82க்கு வாங்குகின்றேன். 3 கிலோ எள்‡க்கு 1 கிலோ எண்ணெய் கிடைக்கும். அத்துடன் வெல்லம் அல்லது கருப்பட்டி, ரூ.25 கூலி, 3 யூனிட் மின்சாரக் கட்டணம் என்று வைத்தாVல் அடக்கமே ரூ.240 வந்து விடும். இப்படியிருக்க இவர்களால் எப்படி சரிபாதி விலைக்கு விற்பனை செய்ய முடிகிறது ?

எப்படி கலப்படம் செய்யப்படுகிறது ?
எள்-ல் இருந்து எண்ணெய் எடுப்பதாக வைத்துக் கொள்வோம். அதனுடன் வெல்லம் அல்லது கருப்பட்டி சேர்க்க வேண்டும். இதற்கு மாற்றாக பானி எனும் கழிவுப் பொருள் (சர்க்கரை ஆலையின் கழிவு) அது கிலோ ரூ.2 முதல் ரூ.3 வரைதான். இதுவே கருப்பட்டி என்றால் கிலோ ரூ.100 ஆகும். மற்றொன்று மூன்று கிலோ எள்-ல் ஒரு கிலோ எண்ணெய் கிடைக்கும்.

ஆனால் கலப்படம் செய்பவர்கள் இந்த எள் எண்ணெய்யுடன் கலப்பட ஆயிலை ஊற்றி அதனுடன் எச­ன்ஸ் சேர்த்து விடுகின்றனர். இப்படி செய்வதால் மட்டுமே குறைவான விலையில் தர முடியும் அன்றி இயற்கையான முறையில் நிச்சயம் முடியாது. இது எள்-ல் மட்டுமல்ல அனைத்து வகையான எண்ணெய்யிலும் கலப்படம் செய்யப்படுகிறது. சுத்தமான எண்ணெய் ஒரு கிலோ ரூ.240க் கீழ் கொடுக்க இயலாது.

இரும்பு செக்கு, மரச் செக்கு வேறுபாடு ?
மரச் செக்கில் 40 சதவீதம் எண்ணெய் எடுக்க முடியும் என்றால், இரும்புச் செக்கில் 80 சதம் வரை எடுக்கலாம். ஏனென்றால் இரும்புச் செக்கில் சுழற்சியின் வேகம் அதிகம். இதனால் சூடு அதிகரித்து எண்ணெய் சத்துக்கள் குறைந்து விடும். மரச் செக் ஒரு நிமிடத்திற்கு 12 முறை முட்டுமே சுழலும். (ஒரு நிமிடம் யீ 12 ஆர்பிஎம் ) அந்த காலத்தில் மாடு கட்டி ஓட்டிய அதே முறை சுழற்சி என்பதால் இவற்றில் சத்துக்கள் சிதையாது முழுமையாகக் கிடைக்கும்.

என்னென்ன எண்ணெய் ?
தற்போது நல்லெண்ணெய், தேங்காய், கடலெண்ணெய் கொடுக்கின்றோம். விரைவில் விளக்கெண்ணெய் உள்பட அனைத்து எண்ணெய்களும் கிடைக்க திட்டமிட்டுள்ளோம். வாடிக்கையாளர்கள் அவர்களே எள், கடலை கொண்டுவந்து எங்களிடம் நேரடியாக பார்த்து 45 நிமிடத்தில் எண்ணெய் எடுத்துச் செல்லலாம். இதற்கு கட்டணமாக கிலோக்கு ரூ.25 நிர்ணயித்துள்ளோம். புண்ணாக்கு வேண்டாம் எனும் பட்சத்தில் இக்கட்டணமும் வாங்குவதில்லை.

புண்ணாக்கு:
எங்களது புண்ணாக்கில் 50 சதவீதம் எண்ணெய் சத்து இருப்பதால் இது மாடுகளின் தீவனத்திற்கு மிகவும் ஏற்றது. பால் சுரக்கும் அளவு நிச்சயமாக அதிகரிக்கும். எங்கள் வாடிக்கை யாளர்கள் பலரும் உங்கள் புண்ணாக்கால் இப்பொழுது பால் அதிகமாக கிடைக்கிறது என்று மகிழ்வுடன் கூறுகின்றனர். எள் புண்ணாக்கு சில்லரை விலையாக கிலோ ரூ.27க்கும், மொத்தமாக கிலோ ரூ.24க்கும் கொடுக்கின்றோம். இதுவே நாட்டு மாடு வளர்ப்பபோருக்கு கிலோ ரூ.20க்கு கொடுக்க தயாராக உள்ளோம். கடலை புண்ணாக்கு கிலோ ரூ.40.

தற்போது புண்ணாக்கிலும் கலப்படம் வந்துவிட்டது. ஒரு மூடை ரூ.1,200 மட்டுமே. இந்த புண்ணாக்கு மாடுகளுக்கு பலவீனத்தை மட்டுமின்றி நோயும் உண்டாக்கும். இதனை மாடு வளர்ப்பவர்கள் முழுமையாகத் தவிர்க்க வேண்டும். தற்போது ஒரு வாரத்திற்கு எங்களால் 500 கிலோ புண்ணாக்கு கொடுக்க முடியும்.

இன்றைக்கு விற்பனை என்பது பணம் சம்பாரிக்கவும், கலப்படம் நிறைந்ததாகவும் மாறிவிட்டது. இந்நிலை முழுமையாக மாற வேண்டும். முதன் முதலாக இந்த துறைக்கு வரும் பொழுது ஏதோ தெரியும் என்ற நிலை மாறி இன்றைக்கு எல்லாமும் தெரியும் என்பதற்கு முக்கிய காரணம் திருச்சி ஜமால் முகமது கல்லூரிதான். இக்கல்லூரி வாயிலாகத்தான் காளான் குறித்து ஆராய்ச்சி செய்யும் சந்தர்ப்பம் கிடைத்தது. அன்றைய தினத்தில் இக்கல்லூரி முதல்வர், நிர்வாகத்தினர் என முழு ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் எனது நட்சத்திர நன்றிகளை இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன் என்று, தனது பணியை தொடர்ந்தார் டாக்டர் எஸ்.மீனாகுமாரி.

கல்லூரி படிப்பு முடிந்த கையோடு பேராசிரியர் பணி, உயர்வான சம்பளம் என அனைத்தும் இருந்தும், அதனைத் துறந்து இயற்கை சார்ந்த உணவுப் பொருட்களை மட்டுமே பொதுமக்களுக்கு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தின் அடிப்படையில் பல்வேறு பிரச்சனைகளைக் கடந்து தொடர்ந்து உழவன் இயற்கை அங்காடியை நடத்தி வரும் மீனாகுமாரியின் வெற்றிக்கு முழுக் காரணமான அவரது கணவர் முருகேசனைச் சார்ந்தது. நம் உடலை கெடுக்கும் உணவுப் பொருட்களுக்கு கொடுக்கும் பணத்தை விடுத்து இதுபோன்ற இயற்கை உணவுப் பொருட்களை வாங்கி ஆதரிப்பதுடன் ஆரோக்கிய வாழ்வை வாழ்வோம்.

Cell: 86080 79541

எழுத்து: மு.இரமேஷ்குமார்
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.06.2017

 

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

Leave a Reply

error: Copy Right Hello Madurai !!
Open chat