கதைபடைப்புகள்

சிறகடித்து

முகிலன் அதிகாலையிலேயே எழுந்து அவசர அவசரமாக தயாராகிக்கொண்டிருந்தான்.

அம்மா வீடுலாம் சுத்தம் பண்ணிட்டயா

பண்ணிட்டேன் டா

டிபன் என்ன பண்ணிருக்க ஸ்பெஷல் லா இருக்கணுமா

அதுலாம் பண்ணிட்டேன் டா……. இட்லி பொங்கல் தோசை பூரி கேசரி……..

வரவங்களுக்கு கொடுக்கிறதுக்கு கிபிட் பாக்ஸ் எல்லாம் ரெடி பண்ணிட்டயா

ஆச்சு முகில்….. நீ கொஞ்சம் டென்சன் ஆகாம இரு

அப்பா எங்க

மாடில ஏதோ சுத்தம் பண்ணிட்டு இருக்கார்

நான் தான் ராத்திரிக்கே எல்லாம் பண்ணிட்டேனே இவர் என்ன பண்ணறார் அங்க….. அப்பா…. அப்பா…..

ஏன்டா கத்துற…. உனக்கு உதவி பண்ணத்தான் அவர் மேல போனாரு

நீ என்னமா…. நா ராத்திரி தான் எல்லாம் அழகு படுத்தி வச்சேன்…. இவர் அங்க போய் ஏதாவது மாதிருவாரு…. அப்பா…..

இந்த வந்துட்டேன்டா…..

மேல எதையும் மாத்திட்டங்களா….. நா கஷ்டபட்டு அழகு படுத்தினேன்….

இல்லடா…. அதுலாம் நா தொடவே இல்ல…. ராத்திரிக்கு மேல ஒழுங்கு படுத்திட்டு அங்க இருந்த குப்பையை அள்ளாம விட்டுட்ட அத தான் அள்ளிட்டு இருந்தேன்….

சரி சரி நீங்க போய் குளிச்சு கிளம்புங்க….. நீ என்னமா வேடிக்கை பாத்துட்டு இருக்க போய் கிளம்பு……

முகிலனுக்கு 25 வயது…… கணிப்பொறியியல் படிப்பு….. பெரிய ஐ. டி கம்பெனியில் நல்ல சம்பளத்துடன் வேலை……

அம்மா அப்பா ரெண்டு பேருமே அரசு வேலை…… நல்ல செழிப்பான வாழ்க்கை……

அவர்களுக்கு இருந்த வசதிக்கு நகரத்தில் நவீனமாக வாழ முடியும். ஆனால் அந்த கிராமத்தில் பரம்பரை வீடு இருந்ததால் அங்கேயே தங்கி விட்டனர்……

அவர்கள் அங்கே தங்கியதற்கு அதுமட்டும் காரணம் இல்லை….

முகிலன் ஒரு இயற்கை விரும்பி….. அந்த கிராமத்து பசுமை, அழகிய சூழல், தூய்மையான காற்று, வயல் வரப்பு என எதுவும் அவனை அங்கிருந்து பிரிந்து செல்ல விடுவதில்லை…… அதோடு மட்டுமில்லாமல் அவன் வளர்க்கும் செல்ல பிராணிகள்……

இயற்கை மட்டும் அல்லாமல் வாயில்லா ஜீவன்கள் மீதும் அவனுக்கு கொள்ளை பிரியம்…..

நாய், பூனை, மீன், புறா, கிளி, லவ் பேர்ட்ஸ், முயல், கோழி, சேவல் இன்னும் என்ன என்ன வளக்க முடியுமோ எல்லாமே வளர்த்து வந்தான்…. ஆடு மாடு அவர்கள் பரம்பரையாக வளர்த்துவந்தவைதான்… அவற்றிற்கு தனி கொட்டில் இருந்தது…..

இவற்றையெல்லாம் வளர்க்க அவனுக்கு அந்த பரம்பரை வீடு போல் நகரத்தில் வேறு வீடு கிடைக்குமா…….

ஆடு மாடுகளுக்கென தனி கொட்டில்கள் கோழி சேவல் சுற்றி திரிய வீட்டை சுற்றி தோட்டம் வீட்டு வரவேற்பறை ஹால் என அழகு படுத்திக்கொண்டிருந்த மீன் தொட்டிகள் புறாக்கள் கிளிகள் முயல்கள் குருவிகள் லவ் பேர்ட்ஸ் என கூடுகள் அமைக்கப்பட்ட அகன்று பரந்திருந்த மொட்டை மாடி வீடு முழுக்க சுற்றி திரியும் நாய் செல்லமாய் வளர்க்கும் பூனை…..

இவற்றை பராமரிக்கவே சில வேலையாட்களையும் வேலைக்கு வைத்திருந்தான்……. எல்லாவற்றிற்கும் உணவு பராமரிப்பு வேலையாள் சம்பளம் என்றே அவனுக்கு மாதம் ஐம்பதாயிரத்திற்கும் மேல் செலவாகி கொண்டிருந்தன…… ஆடு மாடு பால் விற்பனை ஆரம்பத்திலேயே அவர்கள் செய்துகொண்டிருந்ததால் அதில் மட்டும் அவர்களுக்கு சிறிது வருவாய் இருந்தது…..

இந்த வரவு செலவு கணக்குகளெல்லாம் அவன் பார்ப்பதில்லை, எல்லாம் அவன் அப்பா தான்…. மாதம் ஒரு தொகையை தன் சம்பளத்தில் இருந்து அப்பாவிடம் கொடுப்பதோடு சரி……..

முகில் செய்வதெல்லாம் தினமும் வேலை முடிந்து வந்து எல்லாவற்றிடமும் பாசமாக பேசுவது உணவு வைப்பது தண்ணீர் வைப்பது அவற்றை தொட்டு தடவி கொடுப்பது என தன் பொன்னான நேரங்களை அவற்றுடன் செலவழிப்பது மட்டுமே….. அதில் தான் அவனுக்கு மிக பெரிய மகிழ்ச்சி இருந்தது….

அதுவும் இந்த ஊரடங்கில் அவனுக்கு அவைகளுடன் செலவழிக்க அதிக நேரம் இருந்தது…….

வாயில்லா ஜீவன்கள் மேல் அவன் கொண்டிருந்த அன்புதான் அவனை அந்த ஊரடங்கில் அப்படியொரு செயல் செய்ய தூண்டியது……

அந்த கிராமத்துக்கு அருகில் இருந்த மலை பகுதியில் இருந்த சில குரங்குகளுக்கு தினமும் உணவளித்து வந்தான்

பத்திரிக்கைகள் தொலைக்காட்சிகள் என அனைத்தும் அவனை புகழ்ந்து கொண்டிருந்தன

இதை அறிந்த அவனது கல்லூரி முதல்வர் அவனை அழைத்திருந்தார்….

அவன் வீட்டுக்கு வருவதாகவும் கூறியிருந்தார்……

அதற்க்கு தான் காலையில் இருந்து தடபுடலாக தயாராகி கொண்டிருந்தான் முகில்…..

என்னதான் ஒரே ஊரில் இருந்திருந்தாலும் இதுவரை அவர் அவன் வீட்டுக்கெல்லாம் வந்தது இல்லை………

தான் குரங்குகளுக்கு உணவு அளித்ததை அறிந்ததினால்தான் அவர் அவனை சந்திக்க வருகிறார் அவரிடம் தான் வளர்க்கும் செல்ல பிராணிகளையெல்லாம் காட்டினால் அவர் எவ்வளவு பெருமைப்படுவார் என்றெல்லாம் எண்ணி வியந்துகொண்டிருந்தான் அவன்.

ராஜ கோபாலன், அவன் கல்லூரி முதல்வர் அவன் வீட்டுக்கு வந்தார்.

வரவேற்புகள் முடிந்து சிறிது குளிர்பானம் பருகினர் வீடு முழுக்க சுற்றி காண்பித்தான் பின் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்தனர்.

எப்போ இருந்து முகிலன் இதுலாம் வளக்குற

விவரம் தெரிஞ்சதுல இருந்தே வளக்கிறேன் சார் ஒன்னு ஒன்னா வளக்க ஆரம்பிச்சு இப்போ இவ்ளோ இருக்கு என்றான்

இப்போ உரண்டங்கு காரணமாத்தான் நீ இதுலாம் செய்றன்னு நினைச்சேன் உனக்கு இவைகள் மேல அவ்ளோ பிரியமா

ஆமா சார் இதுல ஏதாது ஒன்னு உடம்புக்கு சரி இல்லனாலும் முகிலன் சாப்பிடவே மாட்டான் என்றார் அவன் அப்பா

விலங்குகள் பறவைகள் மேல இவ்ளோ பிரியம் வச்சுருக்க நீ அதுங்க மனச புரிஞ்சுக்கலையேபா

என்ன சார் சொல்ரீங்க என்றான் முகிலன்

விலங்குகள் பறவைகள் எல்லாம் சுதந்திரமா சுற்றி திரிய வேண்டியவை அதை இப்படி கூட்டுக்குள்ள அடைச்சு வச்சுருக்கியேப்பா

அய்யயோ நீங்க தப்பா புரிஞ்சுக்கிட்டேங்க சார் இதுல ஒரு புறாவை பறக்க விட்டா கூட அது முகிலன்கிட்டயே திரும்பி வந்துரும் அதுங்களுக்கு அவன்கிட்ட அவ்ளோ பிரியமா இருக்குங்க என்றாள் அம்மா

அது நம்ம அறியாமைங்க விலங்குகள் பறவைகள் எப்போதுமே நாம பாதுகாக்குறதா நினைச்சுகிட்டு அப்புடி பண்ணிக்கிட்டு இருக்கோம்

இயற்கையாகவே அதுங்களுக்கு சுதந்திரமா சுற்றி திரிய உணவு தேட தன்னை தானே பராமரித்து கொள்ள தெரியும்…..

குரங்குகள் பிற விலங்குகள் வாழக்கூடிய காடுகள் மலைகளில் நாம நுழைந்தோம் அதுங்க உணவை நாம அழித்தோம் நம்ம உணவை அதுங்களுக்கு பிரியமா வழங்குறதா நினைச்சு அதுங்களுடைய உணவு தேடல்ங்கிற மரபை அதுங்கள மறக்க வச்சோம் கால போக்குல அதுங்களுக்கு நாம சாப்பிடறத சாப்பிட்டு பழகி சில நேரங்கள்ல நம்மட்ட பிடிங்கி சாப்பிட கத்துக்கிட்டு அதுங்க சந்ததிக்கும் அதையே சொல்லிகுடுத்துருச்சுங்க விளைவு இந்த மாதிரி ஊரடங்கு நேரத்தில தானா தேடி சாப்பிட தெரியாம மனிதர்களை எதிர்பார்த்து பட்டினி கிடக்குங்க.

நாம வளக்குற நாய் எங்க கொண்டுபோய் விட்டாலும் நமக்கிடையே வந்துருனு நாம நினைச்சுகிட்டு இருக்கோம் ஆனா ஆரம்பித்துல இருந்தே வீட்டு சுழல வளந்த ஒரு நாயால திடிர்னு வெளியுலத்தில வாழ முடியாது மற்ற நாய்களுடன் உணவு இருப்பிட போராட்டங்கள்ல ஈடுபட முடியாது மற்ற தெரு நாய்களை விட அந்த நாய் சோம்பேறியாகவும் தைரியமற்றதாகவும் மனிதனால் வளக்கப்பட்டிருக்கும் எனவே மொத இருந்த இடத்துலயே நல்லாத்தான் சாப்பாடு கிடைச்சுச்சுனு திரும்பி நம்மகிட்டயே வந்துரும், இப்பிடித்தான் நாம அதுங்களுக்கு நல்லது செய்றதா நினைச்சு செஞ்சுகிட்டு இருக்கோம்

இந்த ஊரடங்கு நாட்களில் வீட்டுக்குளேயே இருக்க நமக்கு எப்டி கஷ்டமா இருக்கோ அப்பிடித்தான் அதுங்களுக்கும் இந்த கூடு…… விலங்குகளை கொல்றது எவ்ளோ தப்போ அது போலவே இப்படி அடைச்சு வைக்கிறதும் அதுங்களுக்கு நாம செய்ற ஒருவகை துரோகம்….. ஆனா அதை நாம அன்புன்னு நினைச்சுகிட்டு இருக்கோம் என்று கூறி முடித்தார் …..

அப்போதுதான் முகிலனுக்கு இதுநாள் வரை தான் எவ்ளோ பெரிய அறியாமையில் இருந்திருக்கிறோம்னு தெரிந்தது.

ரொம்ப நன்றி சார் என்று ராஜகோபாலனிடம் விடை பெற்ற முகிலன் சிறிதும் தாமதிக்காமல் மாடிக்கு சென்று தனது புறாக்கள் ஒவ்வொன்றாக திறந்து விட்டான்…….

இதுநாள் வரை அவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த ஊரடங்கு முடிந்த மகிழ்ச்சியில் அவை சிறகடித்து பறந்தன…………

Spread the love

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat