சினிமாவிமர்சனம்

சைக்கோ: கிடைக்கப்பெறா அன்பின் அதீத வன்முறை

திரை விமர்சனம் - MOVIE REVIEW - PSYCHO

திரைப்படங்களை பற்றி பேசவோ எழுதவோ செய்யும் போது, பொதுவான குற்றச்சாட்டு ஒன்று பல்வேறு சந்தர்பங்களில் வைக்கப்படுகிறது, அப்படி வைக்கப்படும் குற்றச்சாட்டுகளில் முதன்மையானது இயக்குநரே இந்த அளவு யோசிச்சிருக்க மாட்டாருப்பா, இவனுக பயரங்கரமா யோசிக்கிறாங்க என்பது தான் அது, சரி விஷயத்துக்கு வருவோம், சைக்கோ படம் வெளியாவதற்கு முன்பாக, படத்தின் மீதான கவனப்படுத்துதல் என்ற விளம்பர நோக்கத்திற்காக, இயக்குநர் மிஷ்கின் பல்வேறு இணைய கணொளி தளங்களில் நேர்காணல்கள் கொடுத்திருந்தார் அல்லது கொடுத்துக்கொண்டிருக்கிறார்.        (movie review)

அப்படியான நேர்காணல்களில் மிஷ்கின் மிக மிக தெளிவாக குறிப்பிட்டு விட்டார், என்னுடைய திரைப்படங்களில் என்னுடைய பங்களிப்பு என்பது ஐம்பது சதவீதம் மட்டுமே மீதி ஐம்பது சதவீதத்தை பார்வையாளர்கள் யோசிக்க வேண்டுமென விட்டுவிடுகிறேன், காரணம் பார்வையாளனும் அப்படியான பங்களிப்பாளனாக மாறும் போது தான் அந்த படைப்பு முழுமையடைகிறது என சொல்லியிருக்கிறார், அவரின் வார்த்தைகளின்படி திரைப்படத்தை பார்க்கையில், படத்தின் உள்ளீடாக அவர் வெளிப்படுத்த எத்தனிக்கும் விஷயங்கள் பிரம்மிக்க வைக்கின்றன, ஆனால் இது போன்றேல்லாம் படம் பார்க்கும் போது யோசிக்கவே மாட்டேன்.

வாழைபழத்தை உரித்து கொடுத்தால் மட்டும் பத்தாது, அதை ஊட்டியும் விட வேண்டும், முடிந்தால் அதை கூலாக அரைத்து வாயில் ஊற்றினால், சிரமமில்லாமல் அது என்னுடைய வயிற்றை சென்றடைய ஏதுவாக இருக்கும் என யோசிப்பவர்களுக்கு, இது உகந்த திரைப்படம் அல்ல, தயவுசெய்து அப்படியானவர்கள் சைக்கோ திரையிடப்பட்டிருக்கும் திரையரங்கு பக்கம் தப்பிதவறி போய்விடாதீர்கள்.
(movie review)

சைக்கோ திரைப்படம் முழுக்க முழுக்க தொடர் கொலையின் குற்றப்பின்னனியை மிக நுணுக்கமாய் ஆராயும் திரைப்படம், இந்த தளத்தில் இந்த படம் இருக்கப்போகிறது என்பதை படத்தின் பெயரும், படம் வெளியாவதற்கு முன்னர் வெளியிடப்பட்ட முன்னொட்டங்களின் வழியே மிகத்தெளிவாய் வெளிப்படுத்தி விட்டார்கள், அதுவும் போக இது கண்டிப்பாக வயதுவந்தவர்களுக்கான படம் என்பதையும், விளம்பரங்களில் மட்டுமல்ல, எல்லாவிதமான நேர்காணல்களிலும் மிஷ்கின் மட்டுமல்ல, படத்தில் நடித்திருப்பவர்களும் அழுத்தம்திருத்தமாக சொல்லிவிட்டார்கள், அதனால் திரைப்படத்தை பார்க்க போகையில் மிக மிக கண்டிப்பாக 18வயது கீழ் இருப்பவர்களை அழைத்து செல்லாதீர்கள்.
(movie review)

திரைப்படம் நேற்று வெளியானபிறகு இணையத்தில் வந்த கணொளி விமர்சனங்களில் பொதுவான ஒரு குற்றச்சாட்டு வைக்கப்பட்டு கொண்டே இருந்தது & இருக்கிறது, அந்த குற்றச்சாட்டு, திரைப்படத்தில் பெண்கள் வரிசையாக கொலையாகி கொண்டே இருக்கிறார்கள், ஆனால் அவர்களின் பின்னனி குறித்து நமக்கு எதுவும் சொல்லப்படுவதில்லை.

அதனால் படம் பார்க்கும் நமக்கும், பார்வையாளர்களுக்கும் அந்த கொலைகள், எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்த தவறுகிறது என்பது தான் அந்த குற்றச்சாட்டு, சரி இப்பொழுது என்னிடம் இந்த குற்றச்சாட்டு சம்பந்தமாக ஒரு கேள்வியிருக்கிறது, அந்த கேள்வி ஒரு மனிதன் சக மனிதனை கொல்கிறான், திரைப்படத்தின் காட்சிகளின்படி ஒரு ஆண் பல பெண்களை கொலை செய்கிறான்.

ஒரு மனிதன் சக மனிதனை மிகக்கொடுரமாக கொலை செய்வதே உண்மையில் ஏப்பேர்ப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய விஷயம் அல்லது தாக்கத்தை ஏற்படுத்த வேண்டிய விஷயம், ஆனால் கொல்லப்படுவனுடைய பின்னனி தெரிந்தால் தான், அந்த கொலை என்னை பாதிக்கும் என்று சொன்னால் உண்மையில் நாமெல்லாம் யார்?, அப்படியானால் டெல்லியில் ஓடும் பேருந்தில் மிக கொடுரமாக தாக்கப்பட்டு இறந்த போன பெண்ணை பற்றிய செய்தியை கூட, அந்த பெண்ணின் பின்னனியை தெரிந்து கொண்ட பிறகு தான் பொங்கினேன் என்று சொன்னால், கண்டிப்பாக சைக்கோ என்பவன் உண்மையில் வெளியில் எங்கோ இல்லை.

மேலே சொன்ன விஷயத்தை தான் சைக்கோ திரைப்படம் அழுத்தம் திருத்தமாக பேசுகிறது, அதை தாண்டி, பெண்ணை, பெண்ணின் உடலை வெள்ளித்திரையில், எப்படிப்பட்ட மனநிலையில் என்னவாக, எப்படி பார்க்க வேண்டும் என இந்த சமூகம், குறிப்பாக ஆண் சமூகம் ஆசைப்படுகிறோதா, இதற்கு முன்னர் பெண்ணை, பெண்ணின் உடலை அ(ச)தை போல் திரையில் காட்டப்படும் போதெல்லாம் எப்படி சிலாகித்து, கொண்டாடி பார்த்திருக்கிறோமோ, அப்படித்தான் மிஷ்கினும் இந்த திரைப்படத்தில் காட்டியிருக்கிறார்.

ஆனால் அது மிஷ்கினின் தனிப்பட்ட பாணியில் இருப்பது தான் இங்கே குறிப்பிட வேண்டிய விஷயம், இந்த ஒரு விஷயத்திற்காகவே மிஷ்கினை எவ்வளவு பாராட்டினாலும் தகும். மிஷ்கினை மிகச்சரியாய் இளையாராஜா புரிந்துகொண்டிருக்கிறாரா அல்லது இளைராஜாவை மிகச்சரியாய் மிஷ்கின் புரிந்து கொண்டிருக்கிறாரா என தெரியவில்லை, சைக்கோ திரைப்படத்தை பொறுத்தவரை இரண்டு பேரையும் வேறுபடுத்தி பார்க்கவே முடியவில்லை.

இரண்டு பேரும் சேர்ந்து திரைக்குள் அதகளம் செய்திருக்கிறார்கள். பார்வையாளன் கண் முன்பு விரியும் திரைப்படத்தின் காட்சிகளில் எந்தெந்த இடத்தில் எல்லாம், இசையின்றி மெளனமாகவே கடக்க வேண்டும் என்பது ஒரு இசையமைபாளனுக்கு தெரிந்திருக்க வேண்டும், கண்டிப்பாகவும், உறுதியாகவும் இன்றைய நிலையில் சந்தேகமேயில்லாமல் தமிழில் அப்படியான ஒரே ஒரு இசைமைபாளர் இசைஞானி மட்டுமே, இது ஒரு மிக மிக நுணுக்கமான தொடர் கொலைகளின் குற்றப்பின்னனியை ஆழமாக ஆராயும் ஒரு திரைப்படம், என்னளவில் இந்த திரைப்படத்தை தமிழில் வெளிவந்த வேறெந்த திரைப்படத்துடனும் ஒப்பிட்டு பேசவே முடியாது. அதையும் தாண்டி நம்மை இருக்கையின் நுனிக்கு கொண்டு வரும் ஒரு குற்றவிசாரணை திரைப்படத்தை பற்றி பேசுகையில், எதையாது வெளிப்படுத்தி, அதுவே திரைப்படம் பார்க்கப்போகும் பார்வையாளனுக்கு படம் பார்க்கும் அனுபவத்தை சிதைத்துவிடும் என்பதால் இத்துடன் நிறுத்திக்கொள்கிறேன்.

கடைசியாக :
இந்த படத்தை மிகவும் கொடுரமான காட்சிகளாக இருக்கிறது பார்க்கவே முடியவில்லை என்று சொல்பவர்களில் பெரும்பாலானோர், சில வருடங்களுக்கு வெளியான பைனல் டிஸ்டினேசன் (Final Destination 3) எனும் ஹாலிவுட் திரைப்பட வரிசையில் மூன்றாவதாக வந்த திரைப்படத்தை முப்பரிமாணத்தில் வாவ் என வாயை பிளந்து ரசித்தவர்கள் தான், மதுரையில் ஒரு திரையரங்கில் சென்று இந்த திரைப்படத்தை பார்த்துக்கொண்டிருந்த சமயத்தில், படத்தில் ஒரு காட்சியில் ஒருவன் விபத்தில் சிக்குவான், அப்பொழுது அவனுடைய விழி பிதுங்கி கண்ணின் விழியுருண்டை மட்டும் உருண்டு ரோட்டில் வந்து விழ, அப்பொழுது அவ்வழியே கடக்கும் ஒரு வாகனம் அதன் மீதேறி, அது சிதைந்து நம் முப்பரிமாண கண்ணாடியில் வந்து விழும், இந்த காட்சியை வயது வித்தியாசம் இல்லாமல் மொத்த திரையரங்கும் ஆர்பரித்தது, அதன் பின்னும் இப்படியான காட்சிகளுடன் அந்த திரைப்படத்தின் சில பாகங்கள் வந்து அதனையும் குடும்பத்துடன் சென்று சிலாகித்தவர்கள் தான் அதிகம்.

பைனல் டிஸ்டினேசன் (Final Destination ) போன்ற திரைப்படங்கள் மனிதன் துடிதுடித்து சாவதை கொண்டடுபவை, ஆனால் சைக்கோ மாதிரியான மிஷ்கினின் திரைப்படங்கள் வெளிப்படுத்தும் விஷயங்களே வேறு, இந்த வேறுபாட்டை புரிந்துகொண்டு பார்க்கும் போது தான் மிஷ்கின் திரைமொழியின் வீச்சு எப்படிப்பட்டது என்பதை புரிந்துகொள்ள முடியும், இதையெல்லாம் தாண்டி தற்போதைய சூழலின் அரசியல், சாதி, மதத்தின் பின்னாலிருந்து எட்டிப்பார்க்கும் மனித மன குரூர பக்கங்களையும் முகத்திலடித்து வெளிப்படுத்தியிருக்கிறது சைக்கோ திரைப்படம்… மகிழ்ச்சி

எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு: 9171925916 & 9538992211

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat