கட்டுரைகள்செய்திகள்மதுரைவரலாறு

ஜெய்ஹிந்த்புரம் வீரமாகாளியம்மன் திருவிழா

ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவிலின் முன்னால் நிழற்படக் கருவியுடன் நின்று கொண்டிருக்கிறேன். ஆனால் என் மனம் அந்தத் திருவிழாச் சூழலில் இருந்து விலகி முப்பத்தைந்து வருடங்கள் பின்னோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது. இப்போது நடக்கும் திருவிழா அந்த நாட்களில் நடந்ததைப் போல கொண்டாட்டங்களைக் கொண்டிருக்கவில்லை மாறாக நவீன வடிவம் பெற்று விட்டது. முன்பெல்லாம் பாடல்கள் பழைய இசைத்தட்டுகளின் மூலமாக ஒலி பரப்பப்படும் அதை ஒலிபரப்பு பவரை ரேடியோ செட்டுக்காரர் என்று நாங்கள் அழைப்போம்.

இசைத் தகட்டை கருவியில் பொருத்திவிட்டு கீழே உள்ள விசையைச் சுழற்றுவார் அந்த ரேடியோ செட்டுக்காரர். இசைத்தகடு வேக மெடுத்துச் சுழல ஆரம்பித்ததும் குண்டூசி ஒன்றை அந்த கிராமபோன் பெட்டியின் தலைப்பகுதிக்குள் பொருத்துவார். சுழலும் இசைத் தகட்டில் அந்தக் குண்டூசி தனது பயணத்தைத் துவங்கும் ‘விநாய கனே வெல் வினையை வேரறுக்க வல்லான் ‘ என்று சீர்காழி கோவிந்தராஜன் தனது கணீர் குரலெடுத்துப் பாடத் துவங்குவார். சிறுவர்க ளாகிய நாங்கள் அந்த கிராமபோன் பெட்டியில் இருந்து வரும் பாடலை வாயைப் பிளந்த படி வியப்பு நீங்காமல் கேட்டுக் கொண்டிருப்போம்.

ஒரு இசைத்தகட்டின் ஒருபக்கம் முழுவதுமாக சுழன்று முடிக்கும் போது ஒரு பாடல் நிறைவடைந்திருக்கும். சில பாடல்களின் இசைக்கும் நேரம் கூடுதலாக இருந்தால் இசைத்தகட்டின் இரண்டு பக்கமும் பதிவாகியி ருக்கும் இப்போதும் ‘பச்சைக்கிளி முத்துச்சரம் முல்லைக்கொடி யாரோ’ என்ற அந்த இரண்டு பக்கப் பாடலை எங்காவது கேட்க நேர்ந்தால் எனக்கு வீரகாளியம்மன் கோவில் திருவிழாவின் கிராமபோன் பெட்டி தருகிற அனுபவம் நெஞ்சில் நிறைகிறது என்பதே உண்மை.

ஜெய்ஹிந்த்புரம் பகுதியின் குறுகலான சந்துகள் எங்கும் வெளிச்சம் பரவிக்கிடக்கும். திருவிழா இரவுகள் தனித்துவமானவை. அது தொலைக்காட்சிப் பெட்டிகளுக்கு முந்திய யுகம் திருவிழாவை முன்னிட்டு ஒரு நாள் இரவு முழுவதும் பிலிம் பெட்டி மூலமாக மூன்று திரைப்படங்களைத் திரையிடுவார்கள்.

அதில் ஒரு எம்ஜிஆர் படமும், சிவாஜி படமும் கண்டிப்பாக இடம் பிடிக்கும். கோவில் அமைந்திருக்கும் இரண்டாவது மெயின் வீதியின் நடுவில் திரை கட்டப்பட்டிருக்கும். திரைக்கு முன்னும் பின்னுமாக இரண்டு பக்கங்களிலும் ஜனங்கள் திரண்டு இடம் பிடிக்க அலை மோதிக் கொண்டிருப்பார்கள்.

திரைக்குப் பின்னால் இடம் கிடைத்தவர்களுக்கு ஏற்படும் ஒரு பெரிய சங்கடம் என்னவென்றால் படம் இடவலதாக மாறித் தெரியும் ஆயிரத்தில் ஒருவன் எம்ஜிஆர் திரையின் முன்புறம் வலது கையாலும், திரையின் பின்புறம் இடக் கையாலும் வாள் சுழற்றிக் கொண்டிருப்பார். எம்ஜிஆர் மற்றும் சிவாஜி இரசிகர்கள் திரையில் அவர்கள் தோன்றியதும் மணலை வாரி வானில் வீசுவார்கள். கொஞ்ச நேரம் அந்த இடமே புழுதி மண்டலமாகி விடும். படம் முடிந்து காலை அனைவரும் தலையில் மணற் புழுதியாக வீடு திரும்பும் காட்சி இன்றும் என் கண்களின் பின்னே நிற்கிறது.

வழக்கமான பால் குடம், பறவைக் காவடி, அக்கினிச்சட்டி வைபவங்கள் எல்லாம் முடிந்த பின்னர் மஞ்சத் தண்ணி வைபவம் முன்பு நடைபெறும். இளம் பெண்கள் வாலிபர்கள் மீது மஞ்சள் கரைத்த நீரை ஊற்றுவது என்பதே அது அந்த வைபவம் பல விசித்திரமான காதல் கதைகளைத் தன்னுள்ளே கொண்டது. இன்று மஞ்சள் தண்ணீர் தெளிப்பது பலருக்கும் தெரியாமல் போய்விட்டது.

முக்கியமான நிகழ்வு ஒன்றை உங்களிடம் பகிர்ந்தே ஆக வேண்டும் அது ‘வள்ளி திருமணம் ‘ எனும் நள்ளிரவு நாடகம். அதென்ன நள்ளிரவு வி­சயம் இருக்கிறது. இரவு ஒன்பது மணிக்கு நாடகம் துவங்கும் போது ஆண்கள், பெண்கள் கூட்டம் அலை மோதிக் கொண்டிருக்கும் ‘காயாத கானகத்தே… நின்றுலாவும் நற் காரிகையே !’என்று மிகச் சூதானமாக நாடகம் துவங்கி கதைக்குள் பயணித்துக் கொண்டிருக்கும். இரவு பன்னிரண்டு மணி கடக்கும் போது பெரும்பாலான பெண்கள் வீட்டிற்குத் திரும்பியிருப்பார்கள்.

சட்டென்று நாடகத்தின் தொனி மாறி இரட்டை அர்த்த வசனங்கள் பின்னிப் பெடலேடுக்கும் இளசுகளும், பெருசுகளும் மணலில் உருண்டு …உருண்டு சிரித்துக் கொண்டிருப்பார்கள். விடியற்காலை நான்கு மணி வரை ஒரே அதகளம் தான். திடீரென்று சுதாரிப்பு வந்தவர்களாக நாடகக்காரர்கள் கதைக்குள் மீண்டும் நுழைவார்கள் அவ்வளவு தான்…

அரைமணி நேரத்திற்குள் வள்ளிக்கு முருகனைத் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். நாடகம் முடிந்து பல நாட்கள் அந்த இரட்டை அர்த்த வசனங்களை டீக்கடையில் அள்ளி வீசிக் கொண்டிருப்பார்கள் ஜெயஹிந்த்புர வாசிகள்! முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திருவிழாக் கூட்டத்திற்குள் சுற்றி அலைந்த போதும் இன்றும் அந்த அனுபவம் அலுக்காத ஒன்றாய் இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் முழுமையாய் திருவிழாவை அனுபவித்த உணர்வு மட்டும் கிடைப்பதேயில்லை. அது இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் கிடைக்காது என்றே தோன்றுகிறது ! அது தான் திருவிழாவின் சிறப்பு என நான் நினைக்கிறேன்!!

எழுத்து, நிழற்படம்: இரா.குணா அமுதன்
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.05.2017

 

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat