கட்டுரைகள்
Trending

டைரியின் டைரி செல்வா – Hello FM 106.4

உலகமே உருண்டு எழும் முகநூலின் சொந்தக்காரர் யார் என்று கேட்டால் நம் வீட்டுக் குட்டிக் குழந்தையும் சொல்லிவிடும் மார்க் என்று. ஆனால் அதேப் பெயருடைய மார்க்கோனி யார் என்றால் ? சட்டென பெரியவர்களால் கூடச் சொல்லவிட முடியாது. யார் இவரை மறந்தால் என்ன ? காற்று உள்ள வரை இவர் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் வேறு யாருமல்ல வானொலியைக் கண்டுபிடித்தவர். வானொலிக்கு அந்த காலத்தில் இருந்த மதிப்பே தனி என்று பலரும் சொல்வதைக் கேட்டிருப்போம். இன்றைக்கும் அப்படிதான்… தனது காந்தக் குரலால் மதுரையில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் இரும்பு மனங்களை ஈர்த்து வருகிறார் ஹலோ எஃப்எம் 106.4 பண்பலை டைரியின் நிகழ்ச்சி தொகுப்பாளினி செல்வா..

இது ஹலோ எஃப்எம் 106.4… டைரி… நான் உங்கள் செல்வா… இப்படித்தான் ஆரம்பிக்கும் இரவு 9 மணி முதல் 11 மணி வரை இந்நிகழ்ச்சி. கிட்டதட்ட எந்த வேலையாக இருந்தாலும் சரி, தங்களது காதுகளை செல்வாவிடம் கொடுத்து, கண் மயங்கி, கதைக்குள் நுழைந்து, பாடலில் கசிந்து, குரலில் கரைந்து, பின்னிரவில் அதன் நினைவிலேயே தூங்கியவர்கள் பலருண்டு. இந்த அனுபவம் இந்நிகழ்ச்சியை கேட்பவர்களுக்கு மட்டும் கிட்டும் அதிசயம். பலரது வாழ்வின் பக்கங்களில் ஏற்பட்டிருக்கும் நிகழ்வினை மிக நேர்த்தியாக தனது அழகிய தமிழ் உச்சரிப்பால் அதனை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் செல்வா-வின் பக்கத்தை நாம் சொல்லப் போகின்றோம் என்பது நிலவுக்கு வெள்ளையடிப்பதுபோல்…

பல ரசிகர்களில் ஒருவராக நாங்களும் செல்வா-ஐ சந்திக்கச் சென்றோம். மதுரை திருப்பாலையில் உள்ள அவரது வீட்டின் முன்பு வாகனத்தை நிறுத்திவிட்டு நட்சத்திர எதிர்பார்ப்புகளுடன் கேட்டைத் திறப்பதற்குள் நம் கண் முன் செல்வா. வாங்க.. வாங்க.. என்று அந்தக் காந்தக் குரல் அழைக்க நாங்கள் குழந்தைகளாகப் பின்னேச் சென்றோம். தெளிந்த நீரோடையைப் போன்ற அக்குரலுக்கு இணையாக அவர் மனமும். அது ஓய்வு நேரம் என்பதால் வீட்டிலிருந்து அவரது கணவர் காளீஸ்வரன், மகன் சுந்தர், மகள் சுவாதி மீனா, என ஒவ்வொருவராக அடுத்தடுத்து அன்புடன் வரவேற்றனர்.

செல்வா-வின் ஓய்வு நேரத்தை நாம் விழுங்கிவிட்டோம் என்ற சிறு வருத்தம் இருப்பினும்… நேரலையில் அவருடைய டைரியை புரட்டிப் பார்க்கப் போகின்றோம் என்ற மிகப்பெரிய மகிழ்வுடன் சில உரையாடல், தேனீர் இடைவெளிக்குப் பிறகு துவங்கினோம். வழக்கம் போல்… வணக்கம் உங்கள் பெயர் என்ன என்று நாம் ஆரம்பிக்க… இதன் பிறகு நீங்கள் வாசிக்கப் போவது செல்வா-வின் டைரி…

எனது பெயர் செல்வ கீதா.. தூத்துக்குடி மாவட்டத்தின் முறப்பநாடு எனும் இயற்கை எழில் சூழ்ந்த தாமிரபரணி பாயும் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். பயின்றது பாளையங்கோட்டை சென்னை இக்னே´யஸ் கான்வென்ட் பள்ளி, சாரதா கல்லூரி. படிப்பு முடித்தக் கையோடு 21 வயதில் திருமணம். அம்மா சரஸ்வதி, அப்பா சண்முகம், உடன் பிறந்தவர்கள் என்னுடன் சேர்த்து ஐந்துபேர். நான்தான் கடைக்குட்டி.

வானொலி ஆசை ?
சிறுவயதிலிருந்தே வானொலி மீது எனக்கு விருப்பம் உண்டு. எனது அண்ணன் சந்திரசேகர் இலங்கை வானொலியின் தீவிர ரசிகர். அப்போது எனக்கு வயது 12 இருக்கும். அன்றைக்கு எனது பிறந்தநாள். என் அண்ணன் வானொலியை வழக்கம்போல் கேட்டுக் கொண்டிருக்க பிறந்தநாள் வாழ்த்து நிகழ்ச்சியில் எனது பெயர் முதலாவதாக வாசிக்கப்பட்டது. “முறப்பநாடைச் சேர்ந்த 12 வயது சிறுமி செல்வி செல்வகீதா தனது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார்” என்று அறிவிப்பாளர் சொன்னவுடன் எனது பெயர் வானொலியில் வந்துவிட்டது என்ற மகிழ்ச்சி பிறந்தநாளை விஞ்சியது. முதன் முதலாக வானொலி மீது எனக்கு ஈர்ப்பு ஏற்ப்படுத்தியது அந்நிகழ்வுதான்.

அன்று முதல் அதிகளவில் வானொலி கேட்க ஆரம்பித்தேன். நான் பயின்ற பள்ளியின் எதிர்ப்புறத்தில் வானொலி நிலையம் அமைந்திருந்தது. ஒவ்வொரு முறையும் அதைக் கடக்கும்போதும் அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்தது. அடுத்தாக கல்லூரி குவிஸ் நிகழ்ச்சிக்காக அகில இந்திய வானொலியில் குரல் பதிவு நடைபெற்றது. 1994ஆம் ஆண்டு முதன் முதலாக அங்கு நுழைந்ததும் அறை முழுவதும் குளிரூட்டப்பட்டிருந்தது. இதுதான் என்னை மிகவும் கவர்ந்தது. இதற்குள் வேலை செய்தால் எப்படி இருக்கும். எப்பொழுதும் ஜில்-னு என்று அறியாத பருவத்தில் இதன் மீதான ஆசை.

திருமண வாழ்வில் திருப்பம்:
கல்லூரி வாழ்வு முடிந்தவுடன் கல்யாண வாழ்வுக் கதவு திறந்தது. ஒரு கிராமத்திலிருந்து நகரத்திற்கு அதாவது மதுரைக்கு வரும்பொழுது ஏதுமறியாத பெண். அப்பொழுது எனது கணவர் வெளிநாட்டில் பணி புரிந்தார். திருமணமாகிய 32வது நாளில் என்னை தனியாக விட்டு வெளிநாடு சென்றார். பெரும் அலையில் சிக்கிய சிறு எறும்பின் நிலைபோல் இருந்தேன். எல்லாவற் றையும் விட உணவில் நான் முழு சைவம் ஆனால் எனது கணவர் வீடோ அசைவப் பிரியர்கள். இதனை என்னால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை, நிராகரிக்கவும் முடியவில்லை. உணவு விசயத்தில் ஒத்துப்போவது என்பது எனக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதன் வாசனையை நான் அங்கீகரித்ததே மிகப்பெரிய விசயம். ஏகப்பட்ட கோழிகள் வீட்டில். எந்த நாளும் ரத்த ஆறு ஓடும்னா நீங்களேப் புரிஞ்சுக்கோங்க. அதன் பிறகு என்ன? என்னை மாற்றிக் கொண்டேன்.

சிங்கப்பூர் பயணம் கசப்பானது:
திருமணமான மூன்று மாதங்கள் கழித்து மூன்று மாத விசாவில் சிங்கப்பூருக்குச் சென்றேன். அந்நாட்டுக் கலாச்சாரம் மட்டும் பிடிக்கவில்லை. அங்கு ஒவ்வொரு 15 நாட்களுக்கும் ஒருமுறை அனுமதியை எதிர்பார்த்திருப்பது, எங்கு சென்றாலும் பாஸ்போர்ட், விசா வைத்துக் கொண்டுச் செல்வது சுயத்திற்கு எதிராக இருந்தது. அதன் பின் மீண்டும் ஒருமுறை விசா எடுத்துக் கொண்டு சிங்கப்பூர் சென்றேன். எனக்கான இடம் அது கிடையாது. நம் நாடுதான் என்று, எனது கணவரை இங்கு அழைத்தேன்.

குடும்பத்தில் எதிர்ப்பு:
சிங்கப்பூரில் லட்சக் கணக்கில் ஊதியம் பெறும் பணியை விட்டு விட்டு என் கணவரை இங்கு அழைக்க குடும்பத்திலிருந்து எதிர்ப்பு கிளம்பியது. அப்பொழுது நாங்கள் அதிகம் பேசியது கடிதத்தின் வாயிலாகத்தான். அப்படி… நீங்க பி.இ., சிவில் படிச்சுருக்கீங்க நல்ல வேலை வாய்ப்பு இங்கு கிடைக்கும். நமக்கானதை நாம் இங்கே உருவாக்கிக் கொள்வோம் என்றதோடு மட்டுமின்றி இறுதியாக நான் முக்கியமா ? இல்ல வேலை முக்கியமா ? என்று கேட்க….

தாய்நாட்டில் கணவருடன் தாய்மை:
தனது குடும்பத்தாரின் எதிர்ப்பையும் மீறி எனது கணவர் எனக்காக வெளிநாட்டுப் பணிக்கு முற்றுப்புள்ளி வைத்து என்னுடன் வந்து சேர்ந்தார். எப்படி அதை நான் சொல்ல எனக்கு அவர் மீதான அன்பு பெரும் மரக்கிளையின் மீது கொடியாய் படர்ந்தது. அதன் பிறகு எங்களது வருமானம் சரிபாதியாக சரிந்தது. இருந்தபோதும் இருப்பதைக் கொண்டு இனிமையாக வாழ்ந்தோம்.

1999ல் எனது மகன் பிறந்தான். எனது தாய்மையில்தான் என் அன்னையை நான் முழுமையாக உணர்ந்த தருணம். கூட்டுக் குடும்பம் என்பதால் எனக்கு குழந்தை வளர்ப்பில் எந்தவித சிக்கலும் இல்லை. வீட்டில் முதல் குழந்தை என்பதால் அவ்வளவு செல்லம், கவனிப்பு. அதற்கு முன்பாக மதுரை ஜெயின் பள்ளியில் பணி புரிந்தேன். குழந்தை பிறந்தவுடன் ஆசிரியர் பணிக்கு முற்றுப் புள்ளிவைத்தேன்.

வானொலிக்கான வழி:
முதன் முதலாக 2001ம் ஆண்டு எனது கணவரிடம் எனது நீண்ட நாள் ஆசையான வானொலியில் பணி புரிவது குறித்து தெரிவித்தேன். அதற்கு மறுப்பேதும் தெரிவிக்காமல் பச்சைக் கொடி காட்டியவுடன், எனது அண்ணி மலர்விழி மங்கையர்க்கரசி முதன் முதலாக அகில இந்திய வானொலியில் ஜோதிமணி மேடத்தை அறிமுகம் செய்து வைத்தார் (இன்றைக்கு மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தின் இயக்குநர்) ஜோதிமணி மேடம் நேர்மையானவர், அன்பானவர், தலைமைப் பண்பு மிக்கவர்.

தாய்வீடு:
மதுரை அகில இந்திய வானொலி நிலையத்தில் முதன் முதலாக தாய் வீடு எனும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினேன். எனது வானொலி வாழ்க்கைக்கு தாய்வீடும் அதுதான். எனது குரலைக் கேட்டதும் ஜோதிமணி மேடம் வானொலித்துறையில் உனக்கு மிகப் பெரிய பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது என்று தெரிவித்தார். அங்கு பகுதி நேரத்தொகுப்பாளராக 2001 முதல் 2007 மே வரை ஆறு வருடங்கள் பணியாற்றினேன். அப்பொழுது தாய் வீடு, மருத்துவ மலர், வாசலுக்கு வரும் நேசக்கரம் எனும் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினேன்.

ஹலோ எஃப்எம் ஆரம்பம்:
அன்றையக் கால கட்டத்தில் வானொலிக்கு மிகப் பெரிய வரவேற்பு இருந்தது. ஏ.எம். (மத்திய அலை) வானொலி காலத்திலேயே இதற்கென ரசிகர் மன்றங்கள் இருந்தன. அதன் பிறகுதான் எஃப்எம் (துல்லியமான) பண்பலை வந்தது. அகில இந்திய வானொலியில் இவ்வசதி வந்த அதே நேரத்தில் 2007ம் ஆண்டு மதுரையில் புதிதாக தினத்தந்தி குழுமத்தின் ஹலோ எஃப்எம்‡ல் தேர்வு நடைபெற்றது. இதில் நுழைவதற்கான வயது தகுதி 30க்கு கீழ். ஆனால் எனது வயதோ அப்போது சரியாக 30.

தமிழுக்கு கிடைத்த வெற்றி:
பணி கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி என்று முயற்சித்தேன். தமிழுக்கு முக்கியத்துவம் அளிக்கும் சி.பா.ஆதித்தனார் குழுமம் எனது வயதைப் பொருட்படுத்தாமல் தமிழுக்கும், உச்சரிப்புக்கும், திறமைக்கும் முக்கியத்துவம் அளித்ததால் எனக்கு இங்கு பணி புரியும் வாய்ப்புக் கிட்டியது. தமிழ் மொழிக்கு முன்னுரிமை கொடுக்கும் இக்குழுமத்தில் பணிபுரிவதை நான் பெருமையாகக் கருதுகின்றேன்.

டைரியில் நான்:
ஹலோ எஃப்எம் நுழைவு என் வாழ்வின் மிக முக்கியத் தருணமாகும். இங்கு எல்லாவற்றையும் மிக எளிமையாக கையாளும் வகையில் கருவிகள் நிறைந்திருந்தன. பண்பலையில் தொழில்நுட்ப வளர்ச்சியின் மலையை இங்குதான் முதன் முதலாக கண்டு வியந்தேன். ஹலோ எஃஎப்எம் துவங்கிய 2007 அன்றிலிருந்து இன்று வரை டைரி நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கிக் கொண்டிருக்கின்றேன். இடையில் ஒரு வருடம் மட்டும் வேறு நிகழ்ச்சி வழங்கினேன்.

அவசரக் கோழி 008:
டைரியுடன் காலை 8 மணிக்கு அவசரக் கோழி 008 எனும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினேன். டைரிக்கும் இதற்கும் நிறைய வேறுபாடு. உலகச் செய்திகளை பேச்சுவாக்கில் அதி வேகத்தில் கூறிவிடுவேன். நிறைய பேருக்கு டைரி செல்வா வும், செல்வ கீதாவும் ஒன்று என்று தெரியாது.

டைரியில் பாதித்த நிகழ்வு:
ஆறு ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி படிக்கும் ஒரு பெண் எழுதிய கடிதத்தில் என்னுடன் கொஞ்சம் பேசுங்க என்று தொலைபேசி எண் அனுப்பியிருந்தாள். அழைத்து பேச எதிர் முனையில் அழுத குரலுடன் தொடர்ந்த அப்பெண் நீங்கள் அழைத்தது எனது தோழியை அவளிடம் தொலைபேசி இல்லாத காரணத்தால் எனது எண்ணை தந்துள்ளாள். நீங்கள் யாரென்று எனக்கு தெரியாது. இதுதான் எனது கடைசி நிமிடம். கையில் விசப் பாட்டில் வைத்துள்ளேன்.

இன்னும் சிறிது நேரத்தில் எனது உயிர் பிரிந்துவிடும் என்று கூறக் கூற… என்னம்மா சொல்லுற என்றேன்… மறுமுனையில் அழுது கொண்டே நான் சாகப் போகின்றேன். என் வீட்டில் என்னை முழுமையாக நம்புகிறார்கள் அவர்களுக்கு நான் துரோகம் செய்துவிட்டேன். சரியா படிக்காமல் பல அரியர்ஸ் வச்சுருக்கேன். இது வீட்டுக்கு தெரிஞ்சா…

அப்பொழுது நான் பேசினேன்… உன் பெற்றோருக்கு கெட்ட பெயர் வரும் என்ற காரணத்தினால் சாவை நாடுகிறாய். இந்த மரணம் உன் பெற்றோருக்கு நிச்சயமாக வேறு வகையில் கெட்ட பெயரை வாங்கித் தரும். ஒரு வயது வந்த பெண் இறந்தால் இந்த உலகம் என்ன கூறும். யோசித்துப்பார்… இப்படி 20 நிமிடம் பேசினேன். அவளது அழுகை கொஞ்சம் கொஞ்ச மாகக் குறைந்து தெளிவாகப் பேச ஆரம்பித்தாள். அன்றோடு மட்டுமல்லாது தொடர்ந்து 3 நாட்கள் அவளுடன் தொடர்பில் இருந்தேன். பிறகு அவ்வப்போது தேர்வு குறித்து கலந்துரையாடுவோம்.

அந்தாண்டு இறுதித் தேர்வில் அந்த பேப்பருடன் தனது அரியர் பேப்பரிலும் வெற்றியடைந்து தனது பட்டப்படிப்பினை அதற்குரிய காலத்தில் முடித்து வெளியேறினாள். அதன் பிறகு ஒரு முறை சென்னையிலிருந்து என்னைத் தொடர்பு கொண்டு என் வாழ்க்கையில் எனது பெற்றோருக்குப் பிறகு உங்களைத்தான் தெய்வமாக நினைக்கின்றேன். என் உள்ளத்தில் உங்களுக்கு என்று ஒரு கோயில் கட்டிவைத்துள்ளேன் என்றாள்.

ஒரு வானொலி நிகழ்ச்சியால் இத்தனை மாற்றங்களைச் செய்ய முடியுமா என்பது என்னை மேலும் சிந்திக்க வைத்தது. அதன் பிறகு சமூகத்தில் எனக்குள்ள பொறுப்பை உணர்ந்து அன்றிலிருந்து எந்த நம்பகத் தன்மையற்ற விசயங்களையும் பகிர்ந்துகொள்ளக் கூடாது. தன்னம்பிக்கையை குறைக்கும் விதமான விசயங்களை கூறக் கூடாது என்றபடி ஒவ்வொரு நாளும் டைரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றேன்.  இதேபோன்று வாடிப்பட்டியில்  அமைந்துள்ள க்ரெட் எனும் என்ஜிஓ அமைப்பின் சார்பில் சிறந்த செயல் திறன் விருது வழங்கப்பட்டது.

அந்த அமைப்பின் நிறுவனர் உங்களுக்கு இவ்விருது வழங்கியதற்கான முக்கிய காரணம், நாங்கள் ஒரு முறை சேவைக்காக சிறுமலை சென்றிருந்தோம். மின்சாரம் கூட இல்லாத அக்கிராமத்தில் இரவில் பேட்டரியில் ரேடியோ கேட்டுக் கொண்டிருந்தார்கள். நான் என்ன இந்த நேரத்தில் எனக் கேட்க… சார்… நான் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது டைரி நிகழ்ச்சியை கேட்பேன். எனது பெற்றோர் தூக்க மாத்திரைபோட்டுத்தான் உறங்குவார்கள். ஒரு நாள் இந்நிகழ்ச்சியை அவர்களுக்குப் போட்டுக் காண்பித்தேன்.

இந்த புள்ள குரல் நல்லா இருக்குப்பா இதையே வைப்பா என்று கேட்டபடியே அன்றிலி ருந்து தூக்க மாத்திரையை மறக்கவைக்கும் டைரி நிகழ்ச்சி தாலாட்டானது. இதை விட வேறு எனக்கு என்ன சந்தோசம் வேணும் சார். எனக்கு அந்த மேடம் யாரு ? எங்க இருக்காங்க ? என்று தெரி யாது. ஆனா இந்த நிகழ்ச்சியும் அவுங்க குரலும் எங்க குடும்பத்துக்கு ரொம்ப பிடிக்கும் என்று கூறியதாக என்னிடம் கூறினார். எனது கண்கள் கலங்கிவிட்டது. இந்நிகழ்விற்காகவே இந்த அமைப்பின் விருது எனக்கு வழங்கப்பட்டது. இந்த இரு நிகழ்வும் என் மனதை பாதித்தது என்று நம்மையும் சேர்ந்து கலங்க வைத்தார் செல்வா.

டைரி வெற்றிக்கான காரணம்:
10 ஆண்டுகளாக டைரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகின்றேன். இன்று யார் கடிதத்தை தேர்ந்து எடுப்பது என்பது குறித்த முடிவுகளை நானே எடுக்கின்றேன். கடிதத்தின் கருவினை மாற்றாது எவர் மனதையும் புண்படுத்தும் விதத்திலான சொற்களை கூறாது, நம்பிக்கையூட்டும் வார்த்தை களையும், தகுந்த அறிவுரைகளையும் வழங்கும் வகையில் நான் இதைத் தொகுத்து வழங்குகின் றேன். இந்நிகழ்ச்சியில் எந்தத் தலையீடும் இன்றி எனக்கு கொடுக்கப்பட்டிருக்கும் முழுச் சுதந்திரம் தான் டைரியின் வெற்றிக்கு முழுக் காரணம் என நான் நம்புகின்றேன்.

கனவின் நிஜம் எனது கணவர்:
என்னை இத்தனை உயரத்தில் அமர்த்திவிட்டு எனது வளர்ச்சிக்கு ஒவ்வொரு படிக்கட்டாக மாறி என்னை ஏற்றிவிட்டு ஒன்றுமே செய்யாததுபோல் மிகச்சாதாரணமாக இருப்பவர் என் கணவர். எனது மாமனாரும் எனக்கு பக்கபலமாக இருந் தார். அவ்வப்போது ஏற்படும் பிரச்சனைகளில் சோர்ந்திருக்கும்போது என்னைத் தட்டிக் கொடுத்து புது வெளிச்சம் கொடுப்பவர். எந்தவித பேதமும் அற்றவர் என் கணவர். சில நேரங்களில் பணி நிமித்தம் இரவு 10 மணியைத் தாண்டிவிடும். அப்பொழுது எனது குழந்தைகளை கவனித்து தூங்கவைத்துவிட்டு, இரவு பத்து மணிக்கு மேல் எனக்காக வெளியில் காத்திருந்து வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.

எனது பெரும்பாலான சிக்கலான முடிவுகளை மிக மிக சுலபமாக முடித்துவிடுவார். “எனக்கு இரண்டு குழந்தைகள்தான். என் கணவருக்கோ என்னையும் சேர்த்து மூன்று குழந்தைகள் ”. அன்று முதல் இன்று வரை அப்படித்தான் என்னை பார்க்கின்றார். ஒரு பெண்ணுக்கு தாய் அதன் பிறகு கணவர். அந்த வகையில் எனக்கு எல்லாமுமாக எனது கணவர். டிகிரி படிப்பினைத் தாண்டி னிபு (றீலிஉஷ்லியிலிஆதீ) முடிக்க இவர் மட்டுமே காரணம். என்னவருக்காக நான் கடந்தாண்டு “மனசெல்லாம் நீ” (2016) எனும் கவிதைத் தொகுப் பினை வெளியிட்டேன். இதற்கு முன்னதாக தகவல் பேழை எனும் நூலினை வெளியிட்டுள் ளேன் என்று நம்மிடம் நூல்களைக் காண்பித்தார் கவிதை செல்வா.

அன்புள்ள அம்மாவிற்கு:
சிறு வயதில் எனக்கு எல்லாமும் என் அம்மாதான். எனது அம்மா ஒரு ஆசிரியர். அந்த வயதில் தமிழ் படிக்கும்போதும் சரி, பேசும்போதும் சரி தமிழ் உச்சரிப்பு தவறானால் தலையில் கொட்டுவார்கள். அப்போது வலித்தது இப்போது அது அழகிய வாழ்வானது. என் தந்தை மறைந்துவிட்டார். அவர் இந்த உயரத்தை பார்த்தால் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்.

எனது சகோரர்கள், சகோதரிகள், குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவரும் எனது வளர்ச்சிக்கு ஏதாவது ஒரு வகையில் துணையாக நின்றுள்ளனர். அவர்களுக்கும் அதையும் தாண்டி எனது வெற்றிப் பயணத்திற்கு முழுக் காரணமாக விளங்கும் ரசிகர்களுக்கு எனது நட்சத்திர நன்றிகளை கூறிக் கொள்கின்றேன் என்று தனது டைரியை முடித்து விட்டு விடைபெற்றார் டைரி செல்வ கீதா.  .

செல்வா-வின் குரல் வாடிக்கிடக்கும் பல மனங்களுக்கு வடிகாலாகவும், புதிய விடியலாகவும் அமைந்துவருகிறது. பல ஆயிரம் ரசிகர்களை தனது காந்தக் குரலில் கவர்ந்திழுக் கும் செல்வாவின் டைரி நிகழ்ச்சி குறித்து பலரிடம் நாம் கருத்து கேட்க… அதில் பெரும்பான்மை யானோர் கூறியது… மதுரையில் எத்தனை எஃப்எம் இருந்தாலும் ஹலோ எஃப்எம் தான் அதிகமாகக் கேட்போம். இதில் நல்ல நல்ல நிகழ்ச்சிகள் உள்ளது. அதில் டைரி முக்கியமான நிகழ்ச்சி.

இந்நிகழ்ச்சி எங்களது வாழ்வின் பல்வேறு சந்தேகங்களுக்கும், கேள்விகளுக்கும் விடையளிக் கிறது. முன்பெல்லாம் அதிகமாக செல்வாவின் குரல் டைரியில் ஒலிக்கும். ஆனால் சமீப காலமாக இடையில் ஒலிபரப்பப்படும் கூடுதல் பாடல்கள் அதனை ஆக்கிரமித்துள்ளது. எனவே இதனை ஹலோ எஃப்எம் குழுவினர் கவனத்தில் எடுத்துக் கொண்டு குரலுக்கு கூடுதல் நேரத்தை ஒதுக்கித் தரவேண்டும். மாற்றங்கள் நிறைந்திருக்கும் நவீன யுகத்தில் பண்பலைகள் பெருகிவரும் காலகட்டத்தில் எல்லாவற்றையும் தாண்டி ஹாலோ எஃப்எம் இதைக் கேட்க வைப்பது இதுபோன்ற சமூக அக்கறையுடைய நிகழ்ச்சிகளால்தான்.

எனவே டைரி போன்ற நிகழ்ச்சிக்கும் அதற்கு உயிர் கொடுக்கும் குரலுக்கும் அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பது வானொலி நேயர்களின் ஒட்டுமொத்த விருப்பமாகும். நித்தமும் பலரின் வாழ்க்கை டைரியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் செல்வா-வின் டைரியை நாம் ஓரளவிற்கு படித்துவிட்டோம் என்றே தோன்றுகின்றது. இன்னும் நிறைய நிறைய இந்த டைரிக்குள் புதைந்துள்ளது.

அவை யாவையும் வாசிக்க நமக்கோ நேரமிருக்காது என்றபோதும் முழுமையாக செல்வா டைரியை புரட்டிப் பார்த்த அத்தனை பேருக்கும் எங்களது நன்றிகள். நீங்கள் இதுவரை காற்றலையில் டைரி செல்வாவின் குரலைக் கேட்கத் தவறி இருந்தால். மறவாமல் இன்று முதல் இரவு 9 மணிக்கு உங்கள் வானொலியில் ஹலோ எஃப்எம் 106.4-ஐ டியூன் செய்யுங்கள்… பிறகு என்ன… காந்தக் குரலில் கலந்து விடுவீர்கள் ஒவ்வொரு இரவும் நிச்சயமாக !!!

விருதுகள்:

  • சிறந்த நிகழ்ச்சி தொகுப்பாளினி விருது: ஆனந்த விகடன் – 2011.
  • சிறந்த செயல்திறன் விருது: க்ரெட் என்ஜிஓ – 2011.
  • சிறந்த சமூக சேவகி விருது: இந்தியன் ரெட்கிராஸ் அமைப்பு – 2013.
  • சிறந்த தொழிற்கல்வி விருது: மென் க்ளப் – 2014.
  • சிறந்த பெண் சாதனையாளர் விருது: தமிழ்நாடு கல்சுரல் அகடமி – 2016.
  • சிறந்த அற்புதமான பெண் விருது: வீ” அமைப்பு – 2017.

 


எழுத்து: கமலி

வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.06.2017

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat