சினிமாவிமர்சனம்

தாராள பிரபு -திரை விமர்சனம்

MOVIE REVIEW -Thrala Praphu

தாராள பிரபு – திரை விமர்சனம்
ஒரு குறிப்பிட்ட மொழியில் வெற்றிபெற்ற ஒரு திரைப்படத்தை, அதுவும் கலாச்சாரரீதியில் வேறு ஒரு மாநிலத்தை சேர்ந்த தளத்தில் எடுக்கப்பட்ட திரைப்படத்தை, அதுவும் கொஞ்சம் பிசக்கினாலும் தப்பான கண்ணோட்டத்தில் போய்விடக்கூடிய கதையை, தமிழில் தன்னுடைய முதல்படமாய் தேர்ந்தெடுத்து, அதையும் மிக மிக அட்டகாசமாய் கையாண்டிருக்கும் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்துவிற்கு ஒரு வலிமையான கைகுலுக்கல்களும், வாழ்த்துகளும்.
படத்தின் பிரதான நாயகன் பாத்திரத்தை ஏற்று நடித்திருக்கும் ஹரிஷ் கல்யாணுக்கு கண்டிப்பாக இது அவருடைய திரைவாழ்வில் முக்கியமான படம், பொதுவாக ஒரு மொழியில் வெற்றி பெற்ற திரைப்படத்தை மற்ற மொழிக்கு தக்கவாறு சின்ன சின்ன மாற்றங்களுடன் எடுக்கும் போது, அசலான கதையில் இருந்த ஆன்மாவை மீண்டும் கொண்டுவருவது தான் மிக மிக கடினம், அதனை மிகச்சரியாய் கையாண்டாலே அந்த திரைப்படம் வெற்றி தான், அந்த வகையில் அசலான கதையில் இருந்த ஆன்மாவை மிகச்சிறப்பாகவே மீள் வார்ப்பு செய்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து.
இது போன்ற கதையை இங்கு ஏற்றுக்கொள்வார்களோ, எப்படி சொல்லப்போகிறோம் என்றெல்லாம் யோசிக்காமல், எப்படி சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள் என்ற கண்ணோட்டத்தில், இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருப்பது மிகச்சிறப்பு, படத்தின் பிரதான கதாப்பாத்திரங்களுக்கான நடிகர்களின் தேர்விலேயே படத்தின் நம்பகத்தன்மை மிகச்சிறப்பாய் அமைந்துவிட்டது, அதுவும் விவேக் அவர்கள் ஏற்று நடித்திருக்கும் அந்த மருத்துவர் கதாபாத்திரம், கொஞ்சம் பிசக்கினாலும் மொத்தமாய் வேறு ஒரு மோசமான கோணத்தில் போய்விடக்கூடிய வாய்ப்புகள் அதிகம், ஆனால் விவேக் என்றவுடன் பார்வையாளனுக்கு வரும் நம்பகத்தன்மையை அப்படியே அவருடைய கதாபாத்திர வடிவிலும் கொண்டு வந்து அதனை படத்தின் இறுதி வரை சிறப்பாய் முடித்திருப்பது அருமை.
பொதுவாய் வீட்டில் நம்முடைய குழந்தைகள் உடை இல்லாமல் இருந்தால், என்னடா மணி ஆட்டிட்டு வந்து நிக்கிற, போய் உன்னுடைய உடைய எடுத்துபோட்டுட்டுவா என கொஞ்சம் குசும்பாக சொல்வோம் இல்லையா, அப்படியான பாணியில் எல்லோரும் ரசிக்கும்படியான வசனங்கள் என பல தளங்களில் கதைக்கான களத்தை விட்டுக்கொடுக்காத அதே சமயம், எந்த இடத்திலும் தர்மசங்கட படுத்தாமல் இயல்பாகவே கதையை நகர்த்தி செல்கிறார் இயக்குநர்.
பொதுவாக இன்றைய அவசர உலகில், நாம் வாழ்வில் முக்கிய அங்கமாய், நம் உடல்சார்ந்து இயல்பாய் இருக்கவேண்டிய பிரஞையுடன் இருக்கிறோமா, அப்படியான பிரஞை இல்லாமல் போனதால், அடிப்படையிலேயே நம் வாழ்வுக்கு தேவையான எதனையெல்லாம் தவறவிடுகிறோம் என்பதை, பல சந்தர்பங்களில் சுட்டிக்காட்டி கொண்டே நகர்கிற கதையில், திரையில் ஓடும் திரைப்படத்தை பார்க்காமல், அங்கேயும் போய் அலைபேசியை நோண்டிக்கொண்டிருந்தால், இந்த திரைப்படத்தில் வரும் பல பெற்றொர்களை போல, நாமும் நம்முடைய அடுத்தலைமுறைக்காக, மருத்துவமனை வாசலில் நிற்க வேண்டிய நாள் வெகுதொலைவில் இல்லை என்பது திண்ணம்.
இன்றைய பெற்றோர்கள் குறிப்பாக ஆண்கள் தவறவிடக்கூடாத ஒரு திரைப்படம் தான் தாராள பிரபு, பொதுவாக இன்றைக்கு வெளிவரும் பெரும்பாலான திரைப்படங்களில், தேவையற்ற அல்லது கொஞ்சம் கூட கதையுடன் ஒன்ற முடியாத சும்மா வந்து தேமே என பின்னால் நின்று போகும் கதாபாத்திரங்களை நிறைத்து வெளிவரும் திரைப்படங்களுக்கு மத்தியில், பிரதான நாயகன், நாயகியை தாண்டி, திரைப்படத்தில் இடம் பெற்றிருக்கும் கதாபாத்திரங்கள் அனைவருக்குமான முக்கியத்துவத்தை, திரையில் மிகச்சிறப்பாய் பார்வையாளன் நுணுக்கமாய் கவனிக்கும்படியான கதாபாத்திர வடிவமைப்புகளாக கொண்டுவந்திருக்கிறார் இயக்குநர் கிருஷ்ணா மாரிமுத்து. கண்டிப்பாக இன்றைய அவரச சமூகத்துக்கு தேவையான, முக்கியமான திரைப்படம் தாராள பிரபு என்பதை தாராளமாக சொல்லாம், மகிழ்ச்சி…
எண்ணமும் & எழுத்தும்
ந.வெங்கடசுப்பிரமணியன்
தொடர்புக்கு
9171925916

 

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat