கட்டுரைகள்
Trending

திரும்பி பார்க்கவைக்கும் திருநகர் பக்கம்

முகநூலில் பெரிதாக என்ன செய்து விட முடியும் என்று கேட்பவரா நீங்கள் ? அப்படி என்றால் உங்கள் முகநூலில் (பேஸ் ஃபுக்) தமிழில் திருநகர் பக்கம் என்று டைப் செய்து பாருங்கள் இன்றைக்கு நம் சமூகத்தை நாளும் தின்று கொண்டிருக்கும் நஞ்சை வேரோடு சாய்க்கும் பணியை இப்பகுதி இளைஞர்கள் எப்படிச் செய்கிறார்கள் என்பது தெரியும்… இப்படியும் முகநூலை பயன்படுத்தலாம் என்று மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாய் திகழ்கிறார் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர் விஷ்வா.

எனக்கென்று எந்த விலாசமும் இல்லாத போது இந்த விஷ்வாவுக்குள் எல்லாமே இருக்கிறது. அதை ஏன் வீணாக்க வேண்டும். நம் வாழ்க்கை என்பது மற்றவர்களுக்குப் பயன்படும் வகையில் உருவாக்குவதே உண்மையான வாழ்வென எனது களப்பணிக்கு அன்று உறுதுணையாக தோள்கொடுத்தவர் எனது வாழ்க்கைத் துணைவி நாகு, இன்று மட்டுமல்ல என்றும் அப்படித்தான் என்று கூற ஆரம்பித்தார் திருப்பரங்குன்றம் மலையில் தனது குழுக்களுடன் களப்பணிக்கு இடையில் நம்மிடம் விஷ்வா…

சேமட்டான் கண்மாய் மீட்பு பணியில்

திருநகர் 5வது நிறுத்தத்தின் அருகாமையில்தான் எனது வீடு உள்ளது. அப்பா… அம்மா.. ஒரு அக்கா… அக்காவிற்கு திருமணம் முடிந்துவிட்டது. அதன் பின் எனக்கு நிகழ்ந்தது காதல் திருமணம். தற்போது ஒரு குட்டி மகள் வனலிகா எங்களது குடும்பத்தையும், வாழ்வையும் நாளும் அழகாக்கி கொண்டிருக்கிறாள். தற்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து கொண்டே கிடைக்கும் விடுமுறை நாட்களில் சமூகப் பணி செய்து வருகின்றேன். எங்களது குழுவின் முக்கிய நோக்கமே இன்றைக்கு நம்மை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து வரும் நெகிழிப்பை, சீமைக் கருவேலம் மரம் ஆகிய இரண்டையும் முற்றிலும் ஒழிப்பதே…

முதன் முதலாக கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பாக முகநூலில் திருநகர் பக்கம் என்ற ஒன்றை துவங்கினேன். இப்பகுதியில் உள்ள திருநகர் வாலிபால் கிளப் பசங்கதான் எனது களப்பணிக்கு முதல் விதை. 15 பேருடன் ஆரம்பமான இந்த குழு இன்றைக்கு திருநகரையே திரும்பி பார்க்கவைக்கும் அளவு வளர்ந்திருக்கு. முதலில் இப்பகுதியில் மரக்கன்றுகள் மட்டுமே நட ஆரம்பித்தோம். 500க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் ( கூண்டு வைத்து), 5000க்கும் மேற்பட்ட பனை மர விதைகள் விதைத்து பராமரித்து வருகின்றோம்.

பாறைகளில் விழிப்புணர்வு வாசகம்

மரக்கன்றுகள் மட்டுமின்றி பாம்பு, தேள், வவ்வால், அரியவகை பறவைகள் என வன உயிரினங்கள் பாதுகாப்பு, கண்மாய்கள் தூய்மைப்படுத்துதல், சீமைக்கருவேலம் மரங்கள் அகற்றுதல் பணியை தொடர்ந்து நடத்துகின் றோம். அப்படி பெரிய அளவில் முதலில் மீட்டெடுத்த இடம் சேமட்டான் கண்மாய். திருநகர் 3வது நிறுத்தம் சுந்தர்நகர், சீதா லெட்சுமி பெண்கள் மேல்நிலைப் பள்ளி பின்புறத்தில் அமைந்துள்ள சேமட்டான் கண்மாய் படுமோசமாக இருந்தது. இக்கண்மாய்க்கு நீர் வந்து சேர வேண்டிய கால்வாய் வழியயங்கும் குப்பைகளும், சீமைக்கருவேலம் மரங்களாக நிறைந்திருந்தது. அதனை ஆரம்பத்தில் எங்கள் குழுவினர் அனைவரும் ஒன்றுகூடி சிறிய அளவில் சுத்தம் செய்ய துவங்கினோம்.

நாங்கள் களமிறங்கியதைக் கண்ட அப்பகுதி மக்கள் தனியாக ஏன் கஷ்டப்படுறீங்க நாங்களும் உதவி செய்கின்றோம் என எங்களுடன் இப்பகுதி மக்கள் சுமார் 300க்கும் மேற்பட்டோர் கை கோர்க்க தொடர்ந்து 6 மாதம் செய்த தீவிர களப்பணியால் இன்றைக்கு கால்வாய் பாதையை தடுத்திருந்த குப்பைகள், கருவேல மரங்கள் என எல்லாமே காணாமல் போய் அழகிய கண்மாய் உருவாமாறியிருக்கு. இதற்கு அன்றைக்கு களத்தில் இறங்கி பணி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

சேமட்டான் குளம் மீட்பில் பொதுமக்கள்

இதேபோல் கண்மாய் கரை ஓரங்களை பலப்படுத்தவும், பாதுகாக்கவும், திருமங்கம் அருகில் உள்ள ராயபாளையத்திலிருந்து பனங்கொட்டைகள் வாங்கி வந்து விளாச்சேரி, தனக்கன்குளம், சேமட்டான் கண்மாய், தென்கால் கண்மாய் ஆகிய கரையோரப் பகுதிகளில் (5000க்கும் மேற்பட்ட பனைங்கொட்டைகள்) தோண்டி வைத்துள்ளோம்.

அதுமட்டுமின்றி மீண்டும் கருவேலம் மரங்கள் வளர விடாத படி மாதம் இருமுறை அங்கு சென்று பாராமரித்து வருகின்றோம். இந்த கண்மாயில் நீர் தேக்கம் அதிகமாக இருந்தால் வருடத்திற்கு ஒரு முறை இவ்வழியாக வரும் வெளிநாட்டு பறவைகள் அதிகளவில் இங்கு தங்கி கூடு கட்டி இனப் பெருக் கம் செய்யும். ஏற்கனவே இதுபோல் சில பறவைகள் வருவதுண்டு அவற்றின் குஞ்சுகளை பாதுகாத்து வருகின்றோம். எங்களுக்கு பறவைகள் குறித்த தகவல்களை பறவை ஆர்வலர் கிருஷ்ணமூர்த்தி தருவார்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

இதேபோன்று திருப்பரங்குன்றம் பழைய மலைப் பாதை செல்லும் வழியயங்கும் உள்ள பாலித்தீன் பைகள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் நிறைந்திருப்பதை அறிந்து 50க்கும் மேற்பட்டவர் களுடன் களமிறங்கி குதிரை சுனையில் தேங்கியி ருந்த பாலிதீன், பிளாஸ்டிக், பழைய மாலைகள், கட்டைகள் என எங்களால் இயன்றவரை சுத்தம் செய்து அதனருகிலுள்ள பாறையில் பீளாஸ்டிக் தவிர்ப்போம் எனும் வாசகம் எங்கள் குழுவினைச் சேர்ந்த நிலா ஆர்ட்ஸ் பாண்டியனால் எழுதிவைக்கப்பட்டுள்ளது.

கூடுதலாக மலையடி வாரம் மற்றும் குதிரை சுனையில் விழிப்புணர்வு போர்டுகள் வைக்கப்பட்டு, பழைய மலைப் பாதை ஏறுமிடத்தில் 1960களில் வைக்கப்பட்டிருந்த கல்வெட்டு புதுப்பிக்கப்பட்டது. இதேபோல் தென்பரங்குன்றம் கல்வெட்டுக்குகை கோவில் வளாகமும் தூய்மை படுத்தப்பட்டது. இந்த நேரத்தில் மதுரை பொதுமக்களுக்கும், இங்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கும் எங்களின் கோரிக்கை, நீங்கள் கொண்டு வரும் பாலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பொருட்களை மலையின் அடிவாரத்தில் உள்ள குப்பைத் தொட்டியில் போடவும். கூடுமான வரையில் பிளாஸ்டிக், பாலிதீனை தவிர்க்கவும்.

குடும்பத்துடன் திருநகர் பக்கம் விஷ்வா

எங்களது சேவையை ஊக்கப்படுத்தும் விதத்தில் பலரும் தொடர்ந்து ஆதரவு கொடுக் கின்றனர். பணியை பாராட்டி பரிசு தொகைகள், சான்றிதழ்கள், பாராட்டுகள் , நன்கொடைகள் வழங்குகின்றனர். இதனை சரியான வழியில் கொண்டு செல்ல WISH TO HELP CHARITABLE TRUST என்ற பெயரில் டிரஸ்ட் ஒன்றையும் நிறுவி அதன் கீழ் பெறப்படும் நன்கொடை தொகையினை சரியாக பாராமரிக்கின்றோம்.

இதற்கெல்லாம் மகுடமாய் திருநகர் பக்கம் சார்பில் 2016 டிசம்பர் மாதம் 24ந் தேதி அன்று எங்களது குழு சார்பில் திருநகர் அண்ணா பூங்காவில் பாலித்தீன் ஒழிப்பு விழிப்புணர்வு நடைபெற்றது. இதில் மன்னர் கல்லூரி மாணவர்கள், செளராஷ்டிரா கல்லூரி மாணவர்கள், எம்எம் பள்ளி, சவிதா பாய் மேல்நிலைப் பள்ளி மற்றும் தனக்கன்குளம் கள்ளர் பள்ளி மாணவர்கள், திருநகர் சக்ரா ஸ்கேட், மதர் தெரசா டெக்னிக்கல் டிரஸ்ட், நியூ கிரீன் வே, மரம் மதுரை, சமயநல்லூர் இளைய தலைமுறை, எஸ்பிஎம் டிரஸ்ட், ஆக்மி ஃபுட்பால் கிளப், திருநகர் ஹாக்கி கிளப், திருநகர் வாலிபால் கிளப், திருநகர் லயன்ஸ் கிளப், மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஊடகவியல் துறை ஆசிரியர், மாணவ, மாணவிகள், பொதுமக்கள், சிறுவர், சிறுமியர்கள் என 500க்கும் மேற்பட்டவர்கள் இதில் ஆர்வமுடன் கலந்து கொண்டனர்.

வாலிபால் கிளப் குழுவினர்

இந்த விழிப்புணர்வு பேரணியை மதுரை காவல்துறை உதவி ஆணையர் மணிவண்ணன் துவக்கிவைக்க, மதுரை மாவட்ட மக்கள் நல அலுவலர் பார்த்திபன் சிறப்பு விருந்தினராக ஊர்வலத்தில் கலந்து கொண்டு பாலித்தீன் குறித்து விளக்கமளித்து அங்குள்ள கடைகளுக்கு எடுத்துக்கூறி சணல் பைகளை வழங்கினார். இது எங்களது குழுவின் மிகப்பெரிய வெற்றியாக கருதுகின்றோம். இப்பொழுது நாளுக்கு நாள் எங்களது குழுவில் ஆர்வமுடன் இப்பகுதி இளைஞர்கள் தாங்களாகவே முன் வந்து இணைகின்றனர். சமூகப் பணியின் கரங்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே இருக்கிறது. வருங்காலத்தில் திருநகர் பகுதி மதுரையில் சிறந்த தூய்மைக்கு எடுத்துகாட்டாக விளங்கும் என்பதில் ஐயமில்லை என்று உறுதியுடன் கூறிவிட்டு தனது களப்பணிக்கு சென்றார் விஷ்வா…

அடுத்த தலைமுறை தயார்

இன்றைக்கு முகநூலில் இளைஞர்கள் தங்களது வாழ்வை சீரழித்து கொண்டிருக்கின்றனர் என்று வெறும் நான்கு சுவற்றுக்குள் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கும் பலருக்கும் சவுக்கடி கொடுக்கும் வகையில் முகநூலில் திருநகர் பக்கம் முழுவதும் சமூகத்தின் ஓர் புதிய பாதைக்காக தங்களது சுவற்றில் நித்தமும் சுத்தம் என எழுதிக் கொண்டிருக்கும் இந்த இளைஞர்கள் கூட்டம்போல் மதுரையின் வீதிக்கொரு முநூல் கூட்டம் வெகு விரைவில் உருவாகும் என்ற நம்பிக்கையில் நமது பாராட்டுகளை தெரித்து புறப்பட்டோம்.

Hello: 99408 32133, 7092854644

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.03.2017
எழுத்து: மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat