கட்டுரைகள்செய்திகள்வரலாறு
Trending

தொலைந்த திலகர் திடல் சந்தை

1960 களில் பிறந்து 2020 நோக்கி வாழ்வியலை நகர்த்தும் மதுரைவாசிகளின் வருத்தம் தரும் வகையில் வாலிபப் பக்கங்களே இக்கட்டுரை. சுதந்திரப் போராட்ட காலத்திற்கு முன்பிருந்த பண்டைய மதுரையின் இதயமாகக் கருதப்படும் சிம்மக்கல் அதனைச் சுற்றிய பகுதிகளை அசைபோடுபவர்களுக்கு அம்மதுரையின் இருதய அறைகளுள் இரண்டாகத் திகழ்ந்தவையே ஞாயிற்றுக்கிழமைச் சந்தையும், பேச்சியம்மன் படித்துறையும். முதலாவதாக திலகர் திடல் மற்றும் ஞாயிற்றுக்கிழமை சந்தையைக் காண்போம்.

ஞாயிற்றுக்கிழமை சந்தை தொலைந்துவிட்டது. சந்தைக்குப் போனோம் ஜாமான் வாங்கினோம் என்று சொல்லலாம். இருக்கின்றன ஆனால் இல்லை. இரண்டுமே தற்போது ஆக்கிரமிப்புக் களுக்கிடையே அவதிப்பட்டு நிற்கும் காட்சி ஆன்மாவை இழந்த்துபோலத் தோன்றும் அன்று கண்ட கண்களுக்கு. திலகர் திடல் என்ற பெயரையும் கொண்ட சந்தை சுதந்திரப்போராட்டத்தின் போது பாலகங்காதரதிலகர் வந்து பேசியதால் திலகர் திடல் எனப்பெயர் பெற்றதாகப் பெரியோர்கள் கூறுவர்.

இரண்டாயிரம் பேர் கூடியிருக்கக் கூடிய பெரிய திடல், வலதுபுறம் கிருஷ்ணராயர் தெப்பக்குளம், இடதுபுறம் தலைவெட்டி பூங்கா மாநகராட்சித் கட்டிடம் (தற்பொழுது அது மாநகராட்சி பள்ளியாக உள்ளது) ஆங்கிலேயர் ஆட்சியில் குற்றவாளிகளின் தலையைக் கொய்து தண்டனை வழங்கியதால் அப்பெயர் வழங்கலாயிற்று.

சிறுபிள்ளைப் பருவத்தில் அத்தெருவாழியாகச் செல்வதற்கே அச்சமாக இருக்கும் மேற்புறம் ஆறுமுக்குச் சந்தி (அப்புறம் பேச்சியம்மன் படித்துறை) கீழ்ப்புறம் தமிழ்ச்சங்கம் சாலை, பெரிய மார்க்கெட் என்று எப்போதும் ஜனங்களின் நடமாத்தால் ஜேஜே என்று இருக்கும் பகுதி. ஞாயிறும் என வாரத்தின் இருநாட்களில் சந்தை கூடும். என்றாலும் ஞாயிற்றுக்கிழமைதான் கடைகளின் எண்ணிக்கையும், வருவோர், வாங்குவோரின் எண்ணிக்கையும் மிகுதியாக இருக்கும் என்பதால் ஞாயிற்றுக்கிழமைச் சந்தை என்றே பெயர் பெற்றது.

சுத்துவட்டாரக் கிராமத்திலிருந்து அனைத்து விளைபொருட்களையும், காய்கறிகள், கிழங்கு, உபயோகப் பொருட்கள், மட்பாண்டங்கள், மூலிகைச் செடிகள், என அனைத்தையும் உற்பத்தியாளர்களால் மாத்திரமே கொண்டு வரப்பட்டு இடைத்தரகர்கள் இன்றி பயனாளர் களுக்கு நேரடியாக விற்பனை நடத்த உண்மை யான மக்கள் வணிக வளாகமாகத் திகழ்ந்தது.

மற்ற நாட்களில் அரசியல் கூட்டங்களும், சுற்றியுள்ள நாடக அரங்கமாகவும், மாலை நேரங்களில் இளைஞர்களின் ஆடுகளமாகவும், பகல்வேளைகளில் பக்கத்துப் மாநகராட்சிப் பள்ளிகளின் விளையாட்டரங்கமாகவும் இரவு வேளைகளில் லாந்தர் மற்றும் தீப்பந்த வெளிச்சங்கள் ஏலமிடப்படும் உண்மை மக்களின் அரங்கமாக இருந்தது.

எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் கணக்குக் கேட்டு தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கு எதிராகவும் உண்ணாவிரதம் இருந்த இடம் இச்சந்தைதான். மதுரையே ஏன் தமிழகமே சாரை சாரையாகக் கண்டு சென்ற இடம். அண்ணா திராவிட முன்னேறக் கழகம் உருவான சரித்திரத் திருப்புமுனை மையம் அச்சந்தையே. காமராசர் உரையாற்றியிருக்கிறார். நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நாடகம் நடத்தியிருக்கிறார்.

வாசற்புறம் பாசி ஊசி விற்கும் நரிக்குறவர், பேன்சீப்பு, பிறந்த குழந்தைக்கானப் போருட்கள் விற்போர் அமர்ந்திருப்பர். உள்ளே நுழைந்தவுடன் வலப்புறம் மட்பாண்டங்களின் வரிசையாக இருக்கும். அடுத்து மூலிகைச் செடிகள், வாழையின் இலை, தண்டு, காய் என கடைகள். எழுமிச்சை, நாரத்தை, நெல்லி, மாங்காய் என ஊறுகாய் போடும் காய்களின் கடைகள், ஆங்கிலக் காய்கறிகள் எனப்படும் பீன்ஸ், சோயா, காரட், பட்டர் பீன்ஸ், என விற்பதற்கு ஒரு சில கடைகள்.

மற்றவை எல்லாம் இடையே தமிழ்க்காய்கறிகள் பச்சைமிளகாய், தக்காளி, கத்திரிக்காய், அவரை, வெண்டை, சுரக்காய், பூசணிக்காய், முருங்கை என அத்தனைப் பச்சைப் பசேலென்று அவ்வளவு பசுமையாக் கொண்டு வந்து தனித்தனிக் கடைகளாக விற்பனை செய்வர். சந்தையின் கடைசிப் பகுதியாக பழைய துணி விற்பனைக் கடைகள் இருக்கும்.

வசதிபடைத்தவர் உபயோகித்த பழந்துணிகளை சட்டை, பாண்ட், வேஷ்டி, சீலை, சிறுவர் ஆடை என அனைத்தையும் குறைந்த விலைக்கு எளியவர் வாங்கிச் செல்வர். 1970களில் ஒரு ரூபாயும் ஒரு மஞ்சப்பையும் கொண்டு போய்க்கொடுப்பர். அக்கால இளம் பிராயத்தினர் காலையில் விற்ற விலையில் பாதியாக மாலைப் பொழுதின் விலையை நிர்ணயம் செய்யும் நேர்மை இருந்தது.

எனவே கூட்டம் மாலையிலும் என்பதாக விட்டுக் கொடுத்த வியாபாரக் குணமும் மக்களிடம் இருந்தது. அதில் ஒன்றிரண்டு இரும்புக் பொருட்கள் கடையாக கத்தி, அரிவாள், கடப்பாரை, மண்வெட்டிகள், தட்டு என்று விற்றவர் இருக்கப் பழைய இரும்புப் பொருட்கள் கடை என்ற ஒன்று 1980களில் உள்ளே வந்தது கேன்சர் எனும் வியாதி மானிடச் சமுதாயத்தில் வந்தது போல.

பழைய இரும்புப் பொருட்கள் என இரவு நேரத்தில் லாரியைக் கடத்தி வந்து பகுதி பகுதியாகக் கழற்றி அடுத்தநாள் அடையாளமே தெரியாமல் லாரியை பழைய பொருளாக்கி விற்று விடுவார்கள் என்ற குற்றச்சாட்டும் எழுந்தது. பக்கத்தில் 4 திலகர் திடல் காவல் நிலையமும் இருந்த கடைகளின் எண்ணிக்கையைப் பெருக்கி மாநகராட்சி வரிகள் கட்டுகிறோம் என்ற பெயரில் ஊழியர்களை வளைத்துப் போட்டு லஞ்சம் கொடுத்துத் தங்களுக்கு நிரந்தரமாக இடத்தைப் பகிர்ந்து கொண்டார்கள்.

ஞாயிற்றுக்கிழமை, வியாழக்கிழமை சந்தை நாட்களைத் தவிர என்பதுதான் அவர்களின் தொடக்க கால ஒப்பந்தம். ஆனால் வியாழனும், ஞாயிறும் வரும் காய்கறிக்காரர்களுக்கும் மக்களுக்கும் சந்தைக்கு இடம் தராது அடாவடியாக மறுத்து அவர்களை உள்நுழைய விடாமல் தடுத்து விட்டனர். போராடிய பொது மக்களும் விவசாயிகளும் நாளடைவில் வெறுத்துப் போய் தோற்றும் விட்டனர்.

ஒரு சில ஆயிரங்கள் மதுரையின் மையப் பகுதிக்கு நிரந்த இடம் கிடைக்கிறதே என்ற சுயநலக்காரர்கள் சிலர் செய்த சதியால் ஞாயிற்றுக்கிழமைச் சந்தை எனும் வரலாற்று மக்கள் ஆவணக் காப்பகமே மாற வேண்டிய ஒரு இடம் தனது அடையாளத்தைத் தொலைத்துவிட்டது. ஞாயிற்றுக்கிழமை கூடும் உண்மை மக்களின் சந்தையைக் காணோம். மதுரை மக்கள் தொலைத்துவிட்டது. மதுரை மக்கள் தொலைத்த உண்மை அடையாளம் அது. ஆன்மாவைத் தெலைத்து நிற்கும் ஆதிக்க மனப்பான்மை அடையாளமாக நிற்கிறது தற்போது.

எழுத்து

பேரா.முனைவர் இராம.மலர்விழி மங்கையர்கரசி
தமிழ்த்துறை இணைப் பேராசிரியர்
தியாகராசர் கல்லூரி, மதுரை.

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai AppMob: 9566531237, 8754055377Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat