கதைபடைப்புகள்

நினைவில் நின்றவர்கள் !!

சிறுகதை - நினைவில் நின்றவர்கள் - எழுத்து: ரஞ்சிதப்ரியா

தம்பியுடன் விளையாடிக்கொண்டிருந்த வினய் திடீரென அம்மா அம்மா தம்பி கக்கா போய்ட்டான்மா என நேரே அடுக்களைக்குள் சென்றான் காலையிலிருந்து ஒவ்வொன்றாக எல்லா வேலையும் செய்து அப்போதுதான் சாப்பிட ஆரம்பித்த ராணி உடனே கைகளை கழுவி விட்டு குழந்தையை நோக்கி நடந்தாள், திரும்பி வந்த வினய் வாசலில் வந்த தந்தையை பார்த்து அப்பா வந்தாச்சு என்று கத்திகொண்டே சிவாவின் கைகளில் இருந்த பையை வாங்கி திண்பண்டங்களை பார்க்கலானான்…

உனக்கு பிடிச்ச அப்பம் இருக்கு சாப்பிடுடா என்று கூறிவிட்டு அம்மா எங்கடானு கேட்டான்…

தம்பி கக்கா போய்ட்டான் அம்மா கழிவிட்டு இருக்குப்பா என்ற அவனே தொடர்ந்தான் பாவம்பா அம்மா காலைல இருந்து சாப்பிடல இப்போதான் சாப்பிட போச்சு அதுக்குள்ள இவன் கக்கா போய்ட்டான் என்றவனைப்பார்த்து இதுலாம் அம்மா குழந்தைக்கு சந்தோஷமாவே செய்வா அம்மா னா பின்ன சும்மாவா தம்பி, அவ்ளோ தியாகமும் பண்ணுவா சொல்லிக்கொண்டிருக்கும்போதே ராணி வந்தாள் என்னங்க இன்னைக்கு இவ்ளோ நேராமகிருச்சு நைட்டு ஷிபிட் முடிய என்று கேட்டாள்.

இன்னைக்கு லீவு ல அதான் கொஞ்சம் வேலை அதிகம்.
சாப்பிட்டீங்களா?

வழக்கம் போல விடிய காலைலயே ரமா அக்கா கடைல இட்லி சாப்பிட்டுத்தான் கெளம்புனேன் நீ சாப்பிடு..

வினய் தம்பியுடன் மீண்டும் விளையாட ஆரம்பித்தான்..

சாப்பிட்டு கொண்டிருந்த ராணியிடம் நம்ம வைதேகி பாட்டிய போய் இன்னைக்கு பாக்கலானு இருக்கேன் நீ வாரியா??

நா மகளிர் குழுக்கு போறேன் இன்னோரு நாள் போய்க்கிறேன் நீங்க வேணா பெரியவனா கூட்டிட்டு போய்ட்டு வாங்க..

வெளியே சுற்றும் குஷியுடன் தந்தையின் கையை புடுச்சுகிட்டே வேடிக்கை பாத்துட்டு நடக்கலானான் வினய்
இந்த பக்கம் பாத்து வாடா தம்பி

ச்சை உவெக் என்னப்பா இப்பிடி நாறுது?

சாக்கடை அள்ளுறாங்க தம்பி

இந்த நாத்தத்துல எப்டிபா குழில உள்ள எறங்குறாங்க?

ஆமா தம்பி அவங்க தான் சாக்கடை அடைச்சுகிட்டா அள்ளி சரி பண்ணுவாங்க அப்போ எறங்கித்தானே ஆகணும் !

பேசிக்கொண்டே ரயில் நிலையத்தை அடைந்து செல்லவேண்டிய ரயிலில் ஏறி வைதேகி பாட்டியை பாக்க போனாங்க..

வா சிவா நல்லா இருக்கியா…. வினய் நல்லா வளந்துட்டானே..

நல்லா இருக்கோம் பெரியப்பா…. நீங்க எப்டி இருக்கீங்க…..

விருந்தோம்பல் முடிஞ்சு சிவா வைதேகி பாட்டி என்று ஆரம்பித்ததுதான் தாமதம்…

அத ஏன் சிவா கேக்குற நெதமும் அது போராடுறது இல்லாம அதுக்கு சோறு ஊடுறது குளிப்பாடுறது பீ மூத்திரத்தை அள்ளுறதுனு உங்க பெரியம்மா பொழப்பும் போராட்டமா ஆயிட்டு, கிழவி காலகாலத்துக்கு போய் சேராம இழுத்திகிட்டே கிடக்குனு ரொம்ப அலுத்துகிட்டாரு பெரியப்பா.

உயிர் போகாம இழுத்துட்டு இருக்கிற வைதேகி பாட்டியை நினைச்சு வருந்துறதா இல்ல அவங்கள கவனிச்சுக்கிற பெரியம்மா நிலைமையை நினைச்சு வருந்துறதான்னு தெரியாம வீட்டுக்கு செல்ல விடை பெற்று வந்தான் சிவா…

ரயில் வர இன்னும் சில நிமிடங்கள் இருந்தன…

ஏன்பா? வைதேகி பாட்டியை தாத்தா அப்டி திட்டுறாரு??

அவங்கள பாத்துகிறது ரொம்ப கஷ்டம் தம்பி அதான்…

ஏன்பா நம்ம அம்மா கூட தம்பிக்கு இதுலாம் பண்றா ஆனா அது தான் அம்மாக்கு சந்தோசம்னு நீ சொன்ன ?

அது வேற இது வேற தம்பி என்ன தான் பெத்த தாயா இருந்தாலும் வயசான பின்ன இதுலாம் பண்ண யாரானாலும் அருவருக்கத்தான் செய்வாங்க இதுலாம் செய்ய ரொம்ப தியாக குணம் வேணும்பா தாயை விட பெரிய மனசு படைச்சவங்களுக்குத்தான் இதுலாம் செய்ய மனசு வரும் இதை செய்றவங்க தெய்வத்துக்கு சமம் !!!!

ஏன்பா அம்மா தம்பிக்கு செய்றது தியாகம் வைதேகி பாட்டிக்கு உங்க பெரியம்மா பண்றது தெய்வம்னு சொல்ற அப்போ இவங்கல்லாம் யாருப்பா என்று தன் கையை, தண்டவாளத்தில் எந்த உணர்வும் இல்லாமல் ரயில் பயணிகள் கழித்துவிட்டு சென்ற மலத்தை அள்ளிக்கொண்டிருந்த தூய்மைத்தொழிலாளர்களை நோக்கி நீட்டினான்………

கொரோனா நேரத்திலும் மே தினத்திலும் மட்டும் நினைக்க வேண்டியவர்கள் அல்ல அவர்கள் என்பதை ஓங்கி ஒலித்துக்கொண்டு வந்தது அவர்கள் செல்லும் ரயில்…..

 

எழுத்து: ரஞ்சிதப்ரியா

Spread the love

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat