கட்டுரைகள்
Trending

நுண் கலையில் களையா கலைஞன்

ஒரு சிறந்தக் கலைஞன் அவனுக்குரிய அங்கீகாரத்தை தவிர, இவ்வுலகில் வேறெதைக் கொடுத்தாலும் அதைப் பெரிதாக எண்ணுவதில்லை. தன் கலையை உண்மையாக மதிப்பவர்களையும், அதனை உயிரோட்டமாக ரசிப்பவர்களையும் தன் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடும் சின்னஞ்சிறு குழந்தையாகி விடுபவனே ஆகச் சிறந்தக் கலைஞன். ஒரு சிறந்த படைப்பாளியின் வாழ்வு என்னவாக இருக்குமென்று நீங்கள் எண்ணுகிறீர்கள் ? தனது ரசிகர்களின் பாராட்டிலும், கைத் தட்டலிலும் தனது உலகத்தை ரசித்து.. ரசித்து… செதுக்கிக் கொண்டிருப்பான் அவ்வளவே…

இங்கு எத்தனையோ கலைஞர்கள் நாளும் உருவாகுகிறார்கள். அவர்கள் அத்தனைபேருக்கும் மேடை ஏறும் வாய்ப்பு கிடைக்கின்றதா ?. திறமை உள்ளவர்கள் எல்லோருக்கும் வாய்ப்பு கிட்டுவதில்லை. வாய்ப்பு கிட்டவில்லை என்பதற்காக திறமை சாலிகள் முடங்கிப் போவதில்லை. எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் அத்தனையையும் தாண்டி தனது லட்சியப் பயணத்தில் பயணிப்பவர்களுக்கு மட்டுமே வெற்றிப் பாதைகள் தென்படும். அப்படி ஒருவர்தான் த.பிரபுச் சந்திரன்.

மதுரை காமராஜர் சாலையில் ஆனந்தி மெட்டல் எனும் பெயரில் பாத்திரக் கடையினை தனது தந்தை தங்கவேலுவுடன் இணைந்து 27 வருடமாக நடத்தி வருகிறார். இது குறித்து ஹலோ மதுரைக்கு… பள்ளியில் படிக்கும் போதே கடையை பார்த்துக் கொள்வது வழக்கம். அப்பொழுதெல்லாம் சீர்வரிசை முதல் உறவினர் விஷேச நிகழ்ச்சி வரை எல்லாவற்றுக்கும் பாத்திரங்கள்தான் பரிசாக கொடுப்பது வழக்கம்.

ஸ்பூனில் பெயர் எழுதும் காட்சி

அந்த பாத்திரத்தில் அன்பளிப்பு என்று அவரவர் பெயரை பதிவு செய்வது வழக்கமாக இருந்தது. அப்பொழுது ஆர்வத்துடன் எனது அப்பாவிடம் கேட்டேன். எனது ஆர்வத்திற்கு தடை சொல்லாது கற்றுக் கொடுத்தார். இன் றைக்கு நான் இந்நிலையை அடைய என் அப்பா தங்கவேலும் அம்மா சரோஜினியும் முக்கிய காரணம். எனது தம்பி ஜெகன் கணினித்துறையில் மிகு திறமையானவர்.

பழைய முறையில் சிறு உளியால் கொத்துவதோ… மிசினில் எழுதுவதோ அல்ல… அதையும் தாண்டி பரிசு பெறுபவர் களின் கண்களுக்கு அகப்படாத வகையில் எழுதிக் கொடுத்தல் அதாவது மைக்ரோ என்கி ராவிங் (நுண்ணிய வேலைபாடு) சிறு ஊசியின் வாயிலாக 1 மில்லி மீட்டர் அளவில் பெயர் பொறித்துக் கொடுக்கின்றேன்.

இதை முதலில் விளையாட்டாகத்தான் செய்தேன். ஆனால் பலரது பாராட்டுக்கு பிறகு அதிக கவனம் செலுத்தி பாத்திரம் மட்டுமின்றி ஸ்பூன், குங்குமச் சிமிழ் என எல்லாவிதமான சிறிய பொருட்களிலும் பெயர் எழுதிக் கொடுப்பதை வாடிக்கையாக்கிக் கொண்டேன். பலருக்கும் இந்த முறையில் பெயர் பொறிப்பது பிடித்திருக்கிறது.

தன்னையே கண்ணாடியில் செதுக்கிய காட்சி

அடுத்ததாக அரிசியில் மிக மிக சிறிய அளவில் வாடிக்கையாளர்களின் பெயர்களை எழுதி அவற்றை சிறிய எண்ணெய் குப்பியில் அடைத்து கீச் செயினாக வழங்குகின்றேன். இதனை பலரும் தங்களது நண்பர்களுக்கு நினைவுப் பரிசாக வாங்கிக் கொடுக்கின்றனர். சிலர் தங்களது பெயரையும், காதலியின் பெயரையும் பொறித்து நினைவுச் சின்னமாக வைத்துக் கொள்கின்றனர்.

அரிசியில் எழுதுவதற்கென்றே பிரத்யேக பேனா ஒன்றை வைத்துள்ளேன். மேலும் அதனைப்பிடித்து அனைவராலும் எளிதில் எழுதி விட முடியாது. நான் எழுதுவதை வெறும் கண்களால் படிப்பது சற்று சிரமம். அதனால் தான் ஒரு கண்ணாடி குப்பியில் எண்ணெய் நிரப்பி சற்று பெரிது படுத்தி வாடிக்கையாளர்களுக்கு தருகிறேன்.

இது தவிர, கண்ணாடியில் மைக்ரோ என்கிராவிங் கருவி மூலமாக உருவம் செதுக்குகின்றேன். இது மிக மிகக் கடினம். அதிக நேரம் செலவிட வேண்டியிருக்கும். ஒருவரது முகத்தை அப்படியே அழகாக செதுக்கிவிடுவேன். இது பார்க்கும்போது சாதாரணமாகத் தெரியும். ஆனால் செதுக்கும்போது சிறிது கவனக் குறைவு ஏற்பட்டாலும் கண்ணாடி உடைந்து விடும் என்று நம்மிடம் பாரதி, காந்தி என இறுதியில் அவரையே அவர் செதுக்கிய அழகிய கண்ணாடி ஓவியத்தை காண்பித்தார். வேறென்ன பிரம்மித்தோம்.

அம்மா… அப்பா….

மெட்டல் பிளாஸ்டிக் மட்டுமல்லாது இலை, பூ போன்ற மென்மையான பொருட்களில் கூட எழுத்துக்கள், பெயர்கள் பதித்து தருகிறேன். மிகச் சிறியதாக எழுதும் இவர், இதற்கென எந்தவித பூதக் கண்ணாடி அணிந்து எழுதுவதில்லை. இயல்பாகவே எழுதுவேன் என்று நம்முன் எழுதி மீண்டும் ஆச்சர்யப் படுத்தினார். மைக்ரோ என்கிராவிங் முறையில் சாதனைபடைத்து கின்னஸ் புத்தகத்தில் இடம் பிடிக்க வேண்டும் என்பதே எனது இலட்சியம். எத்தனை சாதனை நான் செய்தாலும் அதில் அத்தனைக்கும் சரிபாதி என் மனைவி மதிவதனிக்கும் பங்குண்டு என்று நம்மிடமிருந்து விடைபெற்றார் பிரபுச் சந்திரன்.

நம்மூரில் மட்டுமல்ல அமெரிக்கா, கனடா. லண்டன் என அயல் நாடுகளிலும் இவரது நுண்ணிய எழுத்துப் பொறித்த ஸ்பூன் விமானத்தில் பறந்து சென்று, அங்கும் நமது மதுரையின் பெருமையை பறைசாற்றுகிறது. ” திறமை என்பது சிறு தீக்குச்சிதான் அது பற்றும் இடத்தைப் பொறுத்து மாறும்.” ரோடியோ ஆர்.ஜே. ஆக வேண்டும் என்பது இவரது இன்னொரு ஆசை. தன் பிரச்சனைகளைக் காட்டி முடங்கிடாது, விடாது போராடும் நுண் கலையில் என்றும் களையா கலைஞனை நீங்களும் ஒரு முறை அழைத்துப் பாராட்டலாம்.

த.பிரபுச் சந்திரன்: 98423 46330, 96887 91983

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.04.2017
எழுத்து: மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat