கட்டுரைகள்செய்திகள்
Trending

பதக்கங்கள் பல குவித்த நம்பிக்கை நந்தினியா

ஊக்கம் அளித்தால் போதும் உலகையே உள்ளங்கையில் சுமக்கலாம். அதுவே தன்னந் தனியாக என்றால் தகுந்த இடத்தை அடைய முடியாது என்பதற்கு நந்தினியா ஒரு எடுத்துக்காட்டு. 5ம் வகுப்பில் ஆரம்பித்த பேஸ்கட்பால், ஹேண்ட்பால், ரிலே அத்லெட்டிக் ஆகிய விளையாட்டில் 125க்கும் மேற்பட்ட சான்றிதழ்கள், 50க்கும் மேற்பட்ட பதக்கங்கள் என்பதைத் தாண்டி ஏசியன் அளவில் கலந்து கொண்டு வெற்றிபெற வேண்டிய நந்தினியா இன்று யாருக்கும் தெரியாமல் திருநகரில் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறார்.

தகவல் அறிந்த மறுநாள் நந்தினியாவை சந்திக்கச் சென்றோம். ஹலோ மதுரைதான் அவருக்கு முதல் பேட்டி என்றாலும் இந்தியா முழுவதும் விளையாடி பல பதக்கங்களை குவித்த நந்தினியாவின் முகத்தில் எள் அளவும் பதட்டமில்லை. மிக எதார்த்தமாக நம் முன் தோன்றி கூறியது… எனது பூர்வீகம் மதுரை என்றபோதும் எங்களது குடும்பம் மானா மதுரையில் ஹோட்டல் வைத்து நடத்தி வந்தோம். நான் 5ம் வகுப்பு பயிலும்போது எனது ஓட்டத்தை பார்த்த எழில் ஆசிரியர் பாராட்டியதோடு விளையாட்டில் முதன் முதலாக அவர்தான் ஈடுபடுத்தினார். அப்போது எனது குடும்பத்தினருக்கு இதில் உடன்பாடில்லை. பெண் பிள்ளைக்கு எதற்கு விளையாட்டு என்று தடுத்தனர்.


அண்ணன் மதனுடன்…

அதன்பிறகு 6ம் வகுப்பு பயில டிபிடிஆர் நேசனல் பள்ளியில் இணைந்தேன். அப்பள்ளியில் விளையாட்டு மாணவர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. எனது தோழியின் உதவியால் அப்பள்ளியின் விளையாட்டு ஆசிரியர் அண்ணாதுரையிடம் பயிற்சி எடுத்துக் கொண்டேன். அவரும் எனது திறமையை பாராட்டி ஊக்கப்படுத்தி வெளி மாவட்டங்களில் நடைபெறும் போட்டிகளில் கலந்து கொள்ள வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுத்தார். வெளி ஊருக்குச் சென்று விளையாடுவதை எனது குடும்பத்திற்கு பிடிக்காத காரணத்தால் எனது விளையாட்டு தொடர்ந்து தடைபட்டது.

அந்த சமயத்தில் சீர்காழியில் முதன் முதலாக மண்டல அளவில் நடைபெற்ற போட்டியில் விளையாட வாய்ப்புக் கிடைத்தும் செல்ல முடியாத நிலையில் அண்ணாத்துரை ஆசிரியர் எனது வீட்டிற்கே நேரடியாக வந்து கேட்டதால் வேறு வழியின்றி அனுப்பி வைத்தனர். அதிலிருந்து தொடர்ந்து பல விளையாட்டு போட்டியில் கலந்து கொண்டேன். இப்படி பல்வேறு போட்டிகளில் பெற்ற பரிசினை வீட்டில் காண்பிக்க முடியாது யாருக்கும் தெரியாமல் வைத்து மறைத்துவிடுவேன். 10ம் வகுப்பு வரை எனது வீட்டில் உள்ளவர்கள் விளையாட அனுமதிக்கவில்லை.


சக ஊழியர்களுடன்

பேஸ்கட்பால், ஹேண்ட்பால், ரிலே அத்லெட்டிக், நெட் பால் என பல்வேறு விளையாட்டு பயிற்சிகள் பெற்ற எனக்கு பேஸ்கட் பால் விளையாடுவதில்தான் ஆர்வம் அதிகம். 10ம் வகுப்பில் மாவட்ட அளவில் நடைபெற்ற பேஸ்கட் பால் போட்டியில் மெயின் பிளேயராக விளையாடி 4வது பரிசை எங்களது டீம் தட்டிச் சென்றது. இதேபோல் ரிலே‡விலும் மாவட்ட அளவில் பங்குபெற்றேன்.

அதன் பின் எங்களது ஊரில் துவங்கப்பட்ட அரசு சாய் ஸ்போர்ட்ஸ் அத்தாரெட்டி இந்தியா. இங்கு விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்குபவர்களை தேர்ந்தெடுத்து அவர்கள் செலவில் பயிற்சி, விளையாட்டு ஆடைகள், உபகரணங்கள் மற்றும் ஹாஸ்டல் வசதி ஆகியவை இலவசமாக வழங்கப் படுகிறது.


கல்லூரி நாட்களில்

மேலும் பயிற்சியில் ஈடுபடும் வீரர்களுக்கு மாதம் ரூ.600 ஊக்கத் தொகையாக அளிக்கப்படும். விளையாட்டு ஆசிரியர் அண்ணாதுரை இதில் இணைய கூறியதன் பேரில் அங்குசென்று தேர்வாகினேன். 9ம் வகுப்பிலிருந்து 12ம் வகுப்பு வரை அங்கிருந்த பேஸ்கெட் பால் பயிற்சி ஆசிரியர் பாஸ்கர் சார் என்னை வழி நடத்தினார்.

குடும்ப வறுமை சூழ்நிலை காரணமாக 12ம் வகுப்பு முடிந்தவுடன் கல்லூரிக்கு செல்ல இயலாத நேரத்தில்தான் பாஸ்கர் சார், நாமக்கல் பாவையர் இன்ஞ்சினியரிங் கல்லூரி யில் மாணவர்கள் சேர்க்கை நடைபெறுகிறது. நீ அங்கு சென்று விளையாட்டில் பெற்றச் சான்றிதழ்களைக் காட்டு என்றார். அதன்பேரில் சென்றதில் எனக்கு எதிர்பார்க்காத திருப்பம் அங்கு நடைபெற்றது. எனது விளையாட்டு சான்றிதழைப் பார்த்து அக்கல்லூரியில் படிக்க இலவசமாக எனக்கு அனுமதி கிடைத்தது.


பதக்கம்

சாதாரணமாக ஒருவர் இக்கல்லூரியில் சேர வேண்டுமானால் ஒரு ஆண்டிற்கு ரூ.1 லட்சம் செலவாகும். எனக்கோ இலவசமாக மூன்று ஆண்டுகள் படிக்கும் வாய்ப்பை அக்கல்லூரி வழங்கியது. அக்கல்லூரி எனக்கு கொடுத்த வாய்ப்பிற்கு நன்றியை தெரிவிக்கும் வகையில் நேசனல் அளவில் நடைபெற்ற விளையாட்டு போட்டிகளான பேஸ்கட்பால், 100 மீட்டர், 200 மீட்டர், மராத்தான், ஹேண்ட்பால், ரிலே, கோகோ, கபாடி என எல்லா போட்டிகளிலும் கலந்து கொண்டு என்னால் இயன்ற புள்ளிகளை அக்கல்லூரிக்கு பெற்றுக் கொடுத்தேன்.

2013ஆம் ஆண்டு ஹேண்ட்பாலில் நேசனல் அளவில் விளையாட தேர்ந்தெடுக்கப்படுவேன் என்று காத்திருந்தேன். ஆனால் அது கனவாகிவிட்டது. என்ன காரணம் என்று தெரிய வில்லை. அப்போட்டியில் நிராகரிக்கப்பட் டேன். அதனைத் தொடர்ந்து பல முறை நேசனல் விளையாட்டு போட்டியில் நுழைவதற் கான வாய்ப்பு தடைபடுவது தொடர் கதையாகிவிட்டது.


பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் ஒரு பகுதி

அதன் பிறகு எனது திறமையை பாராட்டி அக்கல்லூரி சார்பில் னிளீபு இலவசமாக படிக்க அழைத்தனர். ஆனால் என்னுடன் ஒரு அக்கா, தங்கை, தம்பி என மூவர் இருந்தனர். அக்கா விற்கு திருமணம் ஆகிவிட்டது. இந்நிலையில் தம்பி, தங்கையை படிக்க வைக்க நான் வேலைக்குச் செல்ல வேண்டியது கட்டயா மாகிவிட்டது. அதன் பின்புதான் மதுரையில் முதன் முதலாக டிரைவிங் பள்ளியில் பணி புரிந்தேன் அதன் பிறகு ஒரு தனியார் நிறுவனத்தில் 3 ஆண்டுகள் பணிபுரிந்த போது எனது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருநகர் பகுதியைச் சேர்ந்த அண் ணன் மதன் என்னை அவரது நிறுவனத்திற்கு அழைத்து வந்து சொந்த தங்கை போன்று பார்த்து வருகிறார் என்றார் நந்தினியா.

நந்தினியா விளையாட்டில் பெற்ற சான்றிதழ், பதக்கங்களை வெளிச்சத்திற்கு கொண்டுவந்தவர் மதன் ஆவார். குடும்பத்தின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்காத போதும் 50க்கும் மேற்பட்ட பதக்கங்களை வாங்கிக் குவித்து ஏசியன் அளவில் விளையாடி இந்தியாவிற்கு ஒரு பதக்கம் வாங்கிக் கொடுக்க இயலவில்லை எனும் ஆதங்கம் நந்தினியாவிடம் விலகாத ஒன்றகாவே உள்ளது. வறுமையும், குடும்பத்தாரின் ஊக்கமும் இல்லாத ஒரே காரணத்தால் தனது கனவை இழந்து நிற்கும் நந்தினியாவை இன்னும் சில மாதங்களில் காவலாக ஒருவர் கரம் பிடிக்கவுள்ளார். புதிய திருமண உறவில் இணையவிருக்கும் நந்தினியாவிற்கு நாம் மட்டுமல்ல நீங்களும் வாழ்த்தலாம் !!


குடும்பத்துடன் நந்தினியா

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.04.2017
எழுத்து: மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat