கட்டுரைகள்விவசாய கட்டுரைகள்
Trending

பாம்புகளின் சகோதரன்… பயமற்ற சகாதேவன்…

மனிதன் தனக்காகவே காடுகளை அழித்து வீடுகளாக மாற்றினான். விலங்குகளையும் இன்ன பிற உயிரினங்களையும் அடித்துவிரட்டி அங்கே தனது ஆட்சிக் கொடியை பறக்கவிட்டான். கடும் வறட்சி, பருவ நிலை மாற்றம், வேட்டையாடுதல் என எல்லாவற்றின் வாயிலும் இரையாகி இன்றைக்கு பல அரிய உயிரினங்கள் அழிந்துவிட்டன. எஞ்சியிருக்கும் உயிரினங்களும் தங்களது இனத்தை காக்க மனிதர்களிடமிருந்து பெரும் போராட்டம் நடத்தி வருகின்றன. நமக்கோ அவற்றை எல்லாம் சிந்திக்கவே நேரமில்லாதபோது எப்படி பாதுகாப்பது ?

சகா அப்படி அல்ல… எந்த நேரமாக இருந்தாலும் சரி… அது எந்த உயிராக இருந்தாலும் சரி… தன்னைப் போலவே பாவித்து அதற்கு உதவ ஓடோடி வருவார். திருநகர் பகுதியில் சுயமாக டூ விலர் மெக்கானிக் ஒர்க்ஷாப் நடத்தி வரும் இவரது பூர்வீகம் வேடார்புளியங்குளம். இது திருநகரிலிருந்து 3 கி.மீ தொலைவில் உள்ளது. இவர் டூ விலர் மெக்கானிக் என்பதை விட பாம்பு பிடிப்பவர் என்றே பலருக்கும் தெரியும். இப்பகுதியில் எந்த வீட்டில் பாம்பு வந்தாலும் சகாவிற்கு உடனடியாக போன் வரும். பார்த்துக் கொண்டிருக்கும் வேலையை அப்படியே போட்டுவிட்டு பறந்து போய் பாம்பை பிடித்து பின் அதனை பாதுகாப்பான இடத்தில் விட்டுவிடுவார்.

பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள் ஆனால் சற்றும் பயமற்று அது ஒரு உயிரினம் என்று தனது 8 வயதிலிருந்தே பாம்பு படிக்க ஆரம்பித்தேன் என்று நம்மை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி கூற ஆரம்பித்தார். எனது தாத்தா அழகர்சாமி பாம்பின் அவசியம் குறித்தும் பாதுகப்பு குறித்தும் நிறைய பேசுவார். அவரைப் பார்த்துதான் எனக்கு பாம்புகள் மீது நெருங்கிய தொடர்பு ஏற்பட்டது. அதுவே படிப்படியாக எனக்கு எல்லா உயிரினங்கள் மீதும் அதீத நேசம் ஏற்பட்டது. அதிலும் பாம்புகள் என்றால் எனக்கு அவ்வளவு பிடிக்கும். பாம்புகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க வேண்டும் என்பதே எனது நோக்கம்.

பாம்பு நல்லது:

நமது பகுதியில் 300 வகையான பாம்புகள் உள்ளன. இதில் விசமுடைய பாம்பு என்றால் நல்ல பாம்பு, கண்ணாடி விரியன், கட்டு விரியன், சுருட்டை விரியன் ஆகியவை. மற்ற பாம்புகள் கடிக்கும் ஆனால் மனிதனை கொல்லும் அளவிற்கு அதனிடம் வி­மில்லை. அதன் உணவுக்காக சிறு சிறு உயிரினங்களை வேட்டையாடும் அளவு மட்டுமே வி­ம் உள்ளது. பாம்புகள் குறித்து பொதுவாகவே நம்மிடம் விழிப்புணர்வு இல்லாது வருத்தத்தை அளிக்கிறது.

நமது விவசாயத்தை பாதுகாப்பதில் பாம்புகளுக்கு முக்கிய பங்கு உள்ளது. ஏனெனில் விவசாய பயிர்களை சேதமாக்கும் எலிகளை உண்ணும் ஒரே உயிரினம் பாம்பு. அதேபோன்று மண்ணுளிப் பாம்பு 100 மண் புழுக்கல் செய்யும் வேலையை அது செய்யும். நாம் வசிக்கும் பகுதியிலும், தோட்டத்திலும் சாரைப் பாம்புகள் அதிகமாக இருப்பதற்கு காரணம் மற்ற பாம்புகளை விட சாரைப்பாம்பு எலிகளை அதிகமாக வேட்டையாடும். இதற்கு எலி பாம்பு என்று மற்றொரு பெயரும் உண்டு. ஒரு நாளைக்கு ஒரு பாம்பு 2 எலிகளை உண்ணும்.

ஒரு பாம்பு அழிந்தால் 100க்கும் மேற்பட்ட எலிகள் உருவாக நாமே காரணமாகின்றோம். அதேபோன்று தவளைகளின் பெருக்கத்தையும் பாம்பு கட்டுப்படுத்துகிறது. தவளைகள் மகரந்த சேர்க்கைக்கான பூச்சிகளை தின்றுவிடும். இதனால் விவசாயம் பாதிக்கப்படும். இதனை காக்கும் பணியினை பாம்புகள் பல ஆண்டுகளாக செய்து வருகின்றது.

வன உயிரினங்கள்:
பாம்புகள் மட்டுமின்றி வன விலங்குகளான குரங்கு, தேள், அரிய வகைப் பறவைகள், மர நாய், கழுகு, வெளவ்வால், மயில், அணில், உள்பட பல்வேறு உயிரினங்களை பாதுகாத்து வருகின்றேன். இது தவிர கூடுகளிலிருந்து கீழே விழும் பறவைகளின் குஞ்சுகளை மீட்டெடுக்கின்றோம். இதற்கு என்னுடன் எனது நண்பர் விஷ்வா உறுதுணையாக உள்ளார். அவருக்கும் பாம்பு பாதுகாப்பது குறித்தும் பிடிக்கும் முறை குறித்தும் கற்றுக் கொத்துள்ளேன்.

வீட்டுகள் பாம்பு வந்தால்?
நம் வீட்டுக்குள் பாம் வந்தால் அதனை துரத்தும் எண்ணத்தில் அடிக்கவோ, கல் எறியவோ கூடாது. அவ்வாறு செய்தல் அது நம்மைத் தாக்க நூறு சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே நாம் சிறிது நேரம் அந்த இடத்தை விட்டு விலகியிருந்தால் எந்த வழியாக வந்ததோ அதே வழியில் பாம்பு சென்றுவிடும். நம் வீட்டுகளில் பாம்பு வருவதற்கு முக்கிய காரணம் வீட்டைச் சுற்றி கழிவுப் பொருட்கள், தென்னை மட்டைகள் போன்றவைகளை பல நாட்களாக ஒரே இடத்தில் வைத்திருப்பதால் அங்கு எலி, பூச்சிகள் மற்றும் தவளைகள் வந்து தங்கும் அவற்றை உண்பதற்காகவும், இரவில் குளிர்ச்சியாக இருப்பதால் அங்கு தங்குவதற்கும் அவ்விடத்தை தேர்வு செய்யும்.

பாம்பு தீண்டினால் என்ன செய்ய?
பாம்பு ஒரு நபரைத் தீண்டியவுடன் மனதளவில் நாம் அவரை தைரியப்படுத்த வேண்டும். அடுத்தாக ஓடும் நிலையிலுள்ள சுத்தமான தண்ணீருடன் சுத்தமான சோப்பைக் கொண்டு தீண்டிய இடத்தை சுத்தம் செய்ய வேண்டும். கடிபட்ட இடத்தில் இறுகக் கட்டுப்போடவோ, வாய் வைத்து ரத்தம் உறிஞ்சவோ, பிளைடால் அறுக்கவோ கூடாது. தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டாம். மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் இதற்கெனத் தனிப்பிரிவு உண்டு.

முதலில் ஒவ்வொரு பாம்புக் கடிக்கும் என்று தனித் தனியாக மருந்து இருந்தது. ஆனால் இப்பொழுது எல்லாப் பாம்புகளின் விச முறிவுக்கும் ஒரே மருந்துதான். எனவே கடிபட்டவுடன் அருகிலுள்ள அரசு மருத்துவமனையில் ஒரு டிடி ஊசி போட்டுவிட்டு 108க்கு தகவல் அளித்தால் தக்க நேரத்தில் அரசு ஆம்புலன்ஸ் வழியாக அரசு மருத்துவமனைக்குச் செல்லலாம். ஒரு பாம்புக் கடித்தால் குறைந்த பட்சம் 6 மணி நேரம் வரை உயிர் இருக்கும். பாம்பு தீண்டியவருக்கு வேண்டும் அளவு தண்ணீர் கொடுக்கலாம். போதுமான தண்ணீர் கொடுப்பதால் கிட்னி கெடாமல் பாதுகாக்கப்படும்.

இனப்பெருக்கம்:
குளிர் காலங்களில்தான் பாம்புகளின் இனப்பெருக்க காலம். பாம்புகள் தங்களது முட்டைகளை அடை காப்பதில்லை. பாதுகாக்கும். ஆதலால் முட்டையிலிருந்து குஞ்சுகள் தானாகவே பொறிக்கும் அதிசய தன்மை கொண்டது. பாம்புகள் நிலத்திலும் தண்ணீரிலும் வாழும். ஒரு பாம்பின் ஆயுட் காலம் அது வாழும் இடம் மற்றும் வளர்ச்சியைப் பொறுத்து மாறுபடும். சராசிரயாக 10 முதல் 15 ஆண்டுகள் வரை உயிர் வாழும். கண்ணாடி விரியன் 4 அடி முதல் 5 அடி வரையும். நல்ல பாம்பு 5 முதல் 6 அடி வரையும். சாரைப்பாம்பு 10 அடிக்கு மேல் வளரும்.

பாம்பு மூடத்தனங்கள்:
பாம்புகள் குறித்து முழு விழிப்புணர்வு இன்றி பல்வேறு மூடத்தனங்கள் உள்ளன. மண்ணுளிப் பாம்பிற்கு இரண்டு தலை என்பார்கள் அது முற்றிலும் பொய் ஒரு தலை மட்டும்தான் உள்ளது. இரு பக்கமாக ஊர்ந்து செல்லும் என்பதும் பொய். ஒரு பக்கமாகத்தான் செல்லும். அதுபோல் நாக்கை நீட்டுவது கொத்துவதற்கு என்று கூறுவதும் உண்மையற்றது.

அது தனது உணர்வு அதன்வாயிலாக தெரிந்து கொள்ளும். எப்படி ஒரு நத்தை தனது மீசையால் தொட்டு தெரிந்து கொள்கிறதோ அதுபோலத்தான் தவிர மண்ணுளிப் பாம்பு மிக மிக சாதுவானது. அதேபான்று பல பாம்பு முட்டை, பால் சாப்பிடாது. நல்ல பாம்பு மட்டும் முட்டையை முழுவதுமாக விழுங்கும். அதேபோன்று தன் இனப் பாம்புகளையும் உணவாக்கிக் கொள்ளும் குணமுடையது. மற்ற பாம்பு இனங்கள் அதன் இனத்தை சாப்பிடாது.

பாம்பு குறித்த விழிப்புணர்வில்

வனதுறையுடன் கைகோர்ப்பு:
மதுரை ரேஸ்கோர்ஸில் அமைந்துள்ள வனத்துறையுடன் கைகோர்த்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று பாம்புகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சியை தொடர்ந்து செய்து வருகின்றோம். இதனால் பாம்புகள் அழிக்கப்படுவது குறைய அதிக வாய்ப்புள்ளது. நான் 10 முதல் 15 வகையான பாம்புகளை பிடித்துள்ளேன். பிடிக்கும் பாம்புகளில் சிலவற்றை மலைப் பகுதியிலும், பலவற்றை நாம் வாழும் பகுதியில் பாதுகாப்பான இடத்தில் விடுகின்றேன். ஏனெனில் நம்மைச் சார்ந்து வாழும் பாம்புகள் மலைப் பகுதியில் வாழ இயலாது.

மீட்டெடுப்பு:
இதுவரை 5,000க்கும் மேற்பட்ட பாம்புகளை மீட்டெடுத்துள்ளேன். இன்றைய சூழ்நிலையில் பாம்புகள் அதிகமாக அழிந்து வருகிறது. சமீப காலமாக சுருட்டை பாம்புகளின் இனம் கடுமையாக சரிந்துள்ளது. இதற்கு காரணம் விவசாய நிலம் குறைந்து வருவதே. இவ்வகையான பாம்புகள் சிறிய பூச்சிகள் மற்றும் சுண்டெலிகளை உணவாக உட்கொள்ளும்.

மகனுடன் சகா

எங்கெல்லாம் மீட்க செல்கிறீர்கள் ?
மதுரையின் 10 கி.மீக்குள் உள்ள இடங்களில் பாம்பு இருப்பது குறித்து தகவல் அளித்தால் உடனடியாக நான் அங்கு சென்று மீட்பேன். அதைவிடுத்து வெகு தூரமாக இருப்பினும் சில நேரங்களில் செல்வதுண்டு. முடியாத பட்சத்தில் வனத்துறையினரை அணுகி அதனைக் காப்பாற்றுவோம்.

குடும்பம்:
முதலில் எனது மனைவி அம்சவேனி முதலில் பாம்பு பிடிக்கும் போது பயந்து வேண்டாம் என்று கூறியிருக்கிறார்கள். அதன் பின் அவ்வுயிர்களுக்கு நான் தோழன் என்பதை புரிந்து கொண்டு இன்றைக்கு எனக்கு பக்க பலமாக இருக்கிறார். பாம்பு என்பது ஈஸ்வரனின் மறு உருவம் என்பதால் எனது இரு மகன்களுக்கும் சர்வேஸ்வரன், திருவேஸ்வரன் என்று பெயர் வைத்துள்ளேன். அவர்களுக்கும் பாம்பு பாதுகாப்பு குறித்தும், முக்கியத்துவம் குறித்தும் பயிற்சி அளித்து வருகின்றேன்.

பாம்பு குறித்து எந்த வித பயிற்சியும் யாரிடமும் கற்றுக் கொள்ளாமல் சர்வ சாதாரணமாக பாம்புகளைப் படிக்கும் சகாவினை இதுவரை 40க்கும் மேற்ப்பட்ட வகையான பாம்புகள் தீண்டப்பட்டுள்ளது என்று புன்னகையுடன் கூறுகிறார். அது ஒவ்வொன்றும் ஒவ்வொரு அனுபவமாம். கண்ணாடி விரியன் பாம்பு தீண்டியதில் 7 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றதாகவும் அப்பொழுது மிக தைரியமாகவும், சாதாரணமாகவும் இருந்ததைப் பார்த்து மருத்துவர்களே ஆச்சர்யப்பட்டதாக தெரிவித்தார்.

குடும்பத்துடன் சகா

ஹலோ மதுரைக்கு பேட்டி எடுக்கும் நேரத்தில் இடையிடையே பாம்பு குறித்து தகவல் வர இரு பாம்புகளை நேரில் பிடிக்கும் முறை குறித்து தெரிந்து கொண்டோம். சிறிது நேரம் அவருடன் இருந்ததில் பாம்பு மீதான பயம் நமக்கே சற்று குறைத் தொடங்கியது என்னவோ உண்மைதான். அதுவும் பிற உயிரினம் தான். தனது பாதுகாப்பு கருதியே தாக்க வருமே தவிர நம்மைப்போல் வன்மையாக எதிர்க்கத் தெரியாது என்பது அப்போது புரிந்தது. தனது வாழ்நாளை பாம்புகள் மட்டுமின்றி பல்வேறு உயிரினங்களை மீட்டெடுப்பதற்காகவே அற்பணிக்கும் இவரை நாமும் ஒரு முறை வாழ்ததலாம் வாங்க !!

சகா : 98650 24456

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.04.2017
எழுத்து: மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat