கட்டுரைகள்கல்விகல்வி கட்டுரைகள்
Trending

மகாகவி பாரதியார் பணிபுரிந்த மதுரை சேதுபதி பள்ளி வரலாறு

மதுரையின் பாரம்பரியத்தை பறை சாற்றும் சேதுபதி மேனிலைப்பள்ளிக்கு வயது 127. மதுரையில் வேறு எந்த ஒரு பள்ளிக்கும் இல்லாத பெருமையும், கர்வமும் இதற்குண்டு. அதற்கு பழமை மட்டுமின்றி தேசியக் கவிஞர் மகாகவி சுப்ரமணிய பாரதியார் பணியாற்றிய ஒரே பள்ளி என்பதே. இங்கு எவர் உள்ளே வந்தாலும்… நோக்குமிடமெல்லாம் அவன் முகம்… கேட்கும் ஒலியயல்லாம் அவன் கவி… என்று உள்ளூர உணரவைத்து பாராதியாக மாற்றிடும் விந்தை இங்கு நிகழ்வதுண்டு. ஆம்… இது பாரதி உலா வந்த உற்சவக் கோவில் அல்லவா !!

மதுரைக் கல்லூரி வாரியத்தால் இயங்கி வரும் சேதுபதி மேனிலைப்பள்ளியின் தலைவர் சீதாராமன், தாளாளர் (2013) வழக்குரைஞர் எஸ்.பார்த்தசாரதி. இவர் இப்பள்ளி மட்டுமின்றி மதுரை கல்லூரி மேல்நிலைப்பள்ளியின் தாளாராகவும், மதுரை கல்லூரி வாரியத்தின் துணைச் செயலாளராகவும் பணியாற்றி வருகிறார். இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கே.கோபாலகிருஷ்ணனைத் தொடர்பு கொண்டு அவரின் அனுமதி பெற்று ஒரு மாலை வேளையில் சேதுபதி பள்ளியில் எதார்த்தமாக நாம் அங்கு செல்ல, அச்சமயம் தாளாளர் எஸ்.பார்த்தசாரதியை சந்திக்க நேர்ந்தது… அதன் பின் இப்பள்ளியின் பெருமை குறித்து நாம் அவரிடம் கேட்டது…

தோற்றம்:
இப்பள்ளி வளாகம் ராமநாதபுரம் பாஸ்கர சேதுபதி மன்னரின் உறைவிடமாகும். இதன் முன் பகுதி தங்குமிடமாகவும், பின் பகுதி குதிரை லாயம் மற்றும் யானைகள் கட்டுமிடமாக இருந்தது. அப்போது பாஸ்கர சேதுபதி மன்னருக்கு தோல் நோய் பாதிப்பு ஏற்பட்டது. அதனை நிவர்த்தி செய்யும் வகையில் பிறர் ஆலோசனையின் பேரில் கல்வி காரியங்களுக்கு நிறைய செலவுகளை செய்துவந்தார். அந்த காலகட்டத்தில் வெங்கட்ராம ஐய்யங்கார் திண்ணைப்பள்ளி ஒன்றினை இங்கு நடத்தி வந்தார்.

பள்ளியின் முகப்புத் தோற்றம்

இந்நிலையில் மன்னர் தனது இடத்தினை முழு நேரப் பள்ளியாக பயன்படுத்திக் கொள்ள அனுமதி வழங்கினார். அதன் பின் 1889ஆம் ஆண்டு நிறுவப்பட்டதே சேதுபதி பள்ளி. இதனை வெங்கட்ராம ஐய்யங்கார் இயன்ற வரை திறம்பட நடத்தினார். ஆயினும் சில வருடங்களுக்கு பிறகு தொடர்ந்து நடத்த இயலாத காரணத்தால் சேதுபதி பள்ளியை மதுரைக் கல்லூரி வாரியம் ஏற்று நடத்தியது.

பாரதியார் பணி:
எட்டையாபுரம் மன்னர் மேல் கொண்ட மனக்கச்சப்பின் விளைவாக மதுரையை நோக்கி வந்த பாரதியார் தமிழ்ப்புலவர் அய்யாசாமி ஐய்யருடன் சேதுபதி பள்ளி தமிழாசிரியர் அரசன் சண்முகனாரை அவரது இல்லத்தில் சந்தித்தார். பாரதியின் திறமையை சோதித்து அறிந்த அவர் விடுப்பில் இருந்த தம் பணியை பாரதியாரை தொடங்க பரிந்துரை செய்தார். அதன் படி 1904ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் நவம்பர் மாதம் வரை மகா கவி சுப்ரமணிய பாரதியார் தமிழ் ஆசிரியராக 17 ரூபாய் எட்டணா ஊதியத்திற்கு 115 நாட்கள் மட்டுமே இங்கு பணி புரிந்தார்.

பாரதி பணியாற்றிய அந்நாட்களில் அவரிடம் கல்வி கற்ற அத்தனை மாணவர்களும் பாக்கியம் செய்தவர்கள். அந்த மாணவர்களில் சிலர் பின்னாளில் அவரிடம் படித்த அனுபவத்தைச் சொல்லியிருப்பதிலிருந்து அவர் இறுக்கமான சூழ்நிலையை இணக்கமான சூழ்நிலையாக மாற்றிக் கற்றுக்கொடுத்தார் என்பது தெரிய வருகிறது. இதேபோன்று புகழ்பெற்ற தேசபக்தராகவும், ஆலய பிரவேசத்திற்கு வித்திட்ட வைத்தியநாத ஐய்யர் பாரதியின் மாணவர்களில் ஒருவர்.

இடமிருந்து வலம்: பாஸ்கர சேதுபதி மன்னர், வெங்கட்ராம ஐய்யங்கார்

அவர் பாரதியின் கண்களில் ஒருவிதமான ஒளியை தான் கண்டதாகவும் அவரது பெருமை அப்பொழுது தமக்குத் தெரியாது என்றும் கூறியிருக்கிறார். கற்றுக் கொடுப்பதும் கற்றுக் கொள்வதும் ஒருவழிப்பாதையாக இல்லாமல் இயல்பான இருவழிப்பாதையாக இருக்கும்படி அவரது பணியைச் செய்தார் பாரதி. மாணவர்களிடமும், சக ஆசிரியர்களிடமும், பள்ளி நிர்வாகத்திடமும் அவருக்கென்று ஒரு தனி பெயர் இருந்தது. அப்பொழுது பிரிட்டிஷ் அரசு கொடுத்த நெருக்கடியின் விளைவாக பாரதி இப்பணியை விட்டுச் சென்றாக கூறுகின்றனர் என்றார் எஸ்.பார்த்தசாரதி.

பள்ளியின் சிறப்பு :

இப்பள்ளியில் பாரதியார் பணி ஆற்றியதைத் தொடர்ந்து இங்கு பயின்றவர்கள்… விடுதலை போராட்ட வீரர் சுப்ரமணிய சிவா, வடிவேல் கவுண்டர் (ராஜாஜி அமைச்சரவையில் முதல் பாராளுமன்ற உறுப்பினர்), கருமுத்து தியாகராஜ செட்டியார், தீபம் நா.பார்த்த சாரதி, தினமணி பத்திரிக்கை ஆசிரியர் வைத்தியநாதன் ஆகியோர் இப்பள்ளியின் சிறப்புமிக்க மாணவர்களில் சிலர்.

மகா கவி பாரதியார் பாடம் நடத்திய வகுப்பறை

இப்பள்ளியில் 1934ம் ஆண்டு ஜனவரி மாதம் 26ந் தேதி, விடுதலை போராட்டத்தில் மாணவர்களின் பங்கு என்ற மிகப்பெரும் கூட்டம் மாகத்மா காந்தி தலைமையில் நடைபெற்றது. இது வரலாற்றின் மகு முக்கிய நிகழ்வாகும். இதேபோன்று இப்பள்ளியின் மீது மிகுந்த பற்று கொண்ட காஞ்சி மகா சுவாமிகள் பல மாதங்கள் தங்கிய பெருமையும் இப்பள்ளிக்கு உண்டு. இதற்கெல்லாம் மகுடமாய் கடந்த 2014ல் 125வது ஆண்டு விழாவைக் கொண்டாடி மகிழ்ந்தது இப்பள்ளி.

மாணவர்களின் கல்வித் திறன்:
ஆண்டுக்கு ஆண்டு மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. 2013‡2014 ஆம் கல்வி ஆண்டில் 1700 மாணவர்கள் கல்வி பயின்றனர். தற்போது 2017ல் 2,055 மாணவர்கள் பயில்கின்றனர். அரசு உதவி பெறும் இப்பள்ளியில் 90 சதவீத மாணவர்கள் அடித்தட்டு குடும்பத்திலிருந்தே பயில வருகின்றனர். இதில் பெரும்பாலானோர் மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சார்ந்தவர்கள். இவர்களது கல்வி வளர்ச்சியை கருத்தில் கொண்டு அவர்களுக்கு ஏற்ற முறையில் ஆசிரியர்கள் பல்வேறு எளிய பயிற்சிகளைக் கையாண்டு தேர்ச்சி பெறச் செய்கின்றனர்.

இப்பள்ளியின் முன்னாள் மாணவரான இந்நாள் தினமணி நாளிதழ் ஆசிரியர் வைத்தியநாதன் மற்றும் பள்ளி தாளாளர் எஸ்.பார்த்தசாரதி.

ஓவியம்:
எங்களது பள்ளி மாணவர்கள் ஓவியம் வரைவதில் மிகுந்த திறமை சாலிகள். எங்கு ஓவியப் போட்டிகள் நடந்தாலும் வெற்றி வாகை சூடுவார்கள். 2013‡14ஆம் ஆண்டில் வனத்துறை சார்பில் நடந்த போட்டியில் எங்கள் பள்ளி மாணவர்களின் ஓவியம் தேசிய அளவில் பரிசு பெற்றது. இதேபோல் மாநில அளவில் பலமுறை பரிசு பெற்றுள்ளது. ஓவிய ஆசிரியர்களான ஆறுமுகம், மாரிமுத்து ஆகிய இருவரும் ஓவிய மாணவர்களுக்கு சிறந்த பயிற்சியைத் தருகின்றனர்.

மேலும் மாணவர்களின் ஓவியத்திறனை அனைவரும் பாராட்டும் வகையிலும், அவர்களை கெளரவப்படுத்தம் விதத்தில் பள்ளியில் அற்கென தனி ஒரு அறை ஒதுக்கப்பட்டு அதில் சிறந்த ஓவியங்கள் காட்சிப் படுத்தப்பட்டுள்ளன. ஓவியத் தை வெறும் பொழுபோக்காக எண்ணாது மாணவர்களின் வாழ்க்கைக்கு தொழில் கல்வியாய் இதனை செய்துவருகின்றோம்.

இதுவரை சுமார் 100 ஓவியக் கலைஞர்களை உருவாக்கியுள்ளோம். பொது இடங்களில் ஓவியம் வரையும் முறையை எங்கள் பள்ளி மாணவர்கள் தான் முதன் முதலில் செய்தனர். மதுரை ரயில்வே நிலையச் சுவர்களில் வரையப்பட்டுள்ள படங்களில் பெரும் பான்மையான ஓவியங்கள் எங்களது மாணவர்களின் கை வண்ணங் கள். அதேபோன்று பள்ளி வளாகங்களிலும் அவர்களது திறமையைக் காட்டியுள்ளனர்.

பள்ளியின் முன்னேற்றம்:
நான் தாளாளராக வருவதற்கு முன்பு ஒரே ஒரு செயலர் மட்டுமே. அவர் கல்லூரி, மாலை நேரக்கல்லூரி மற்றும் பள்ளிகள் என அனைத்தையும் கவனிக்க வேண்டிய நெருக்கடியான சூல்நிலை நிலவியது. ஆனால் தற்போது வாரியம் பொறுப்புக்களை பகிர்ந்து கொடுத்திருப்பதால் இப்பள்ளி நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது.

இடமிருந்து வலம்: தலைவர் சீதாராமன், தலைமை ஆசிரியர் கே.கோபால சிருஷ்ணன்

“இந்த வளர்ச்சிக்கு வாரியத்தின் முழு ஒத்துழைப்பே அன்றி தனி ஒருவரது முயற்சி அல்ல”. தனியார் பள்ளிக்கு நிகராக எங்களது பள்ளியில் அனைத்து வசதிகளும் விளங்க வேண்டும் என்ற கொள்கையுடன் நின்றுவிடாது, குளிரூட்டப்பட்ட நவீன கணினி அறை. காணொளிக் காட்சி, ஒளி‡ஒலி வழியில் கல்வி முறை, சிறப்பு வகுப்பு, விளையாட்டு, குடிநீர் வசதி, காற்றோட்டமான வகுப்பறை மற்றும் சுத்தமான கழிப்பறை என அனைத்திலும் அதிகம் கவனம் செலுத்துகின்றோம்.

1983ஆம் ஆண்டிலிருந்து தமிழக பள்ளிகளில் அமைச்சு பணியாளர்கள் நியமனமின்றி இருந்தது. இதுகுறித்து அனுமதிக்கப்பட்ட பணியாளர்களை பள்ளி நிர்வாகமே நியமிக்க அரசு அனுமதி வழங்க கடந்த 2008ஆம் ஆண்டு உயர் நீதி மன்றத்தில் வழக்குபதிவு செய்து தொடர்ந்து போராடினோம். அதன் விளைவாக 15.03.2016ஆம் ஆண்டு தமிழ் நாடு முழுவதும் பள்ளி நிர்வாகமே நிலுவையில் உள்ள அனுமதிக்கப்பட்ட அமைச்சுகப் பணியாளர்களை நியமிக்கலாம் என நீதியரசர் ஹரிப்பரந்தாமன் தீர்ப்பு வழங்கினார்.

இதன் கீழ் எங்களது பள்ளிகளில் 12 நபர்கள் பணியமர்த்தப் பட்டுள்ளனர். இதேபோன்று பள்ளியை சுத்தமாக வைத்துக் கொள்ளும் பொருட்டு சேதுபதி பள்ளி, மதுரை மேல்நிலைப்பள்ளி மற்றும் மதுரை கல்லூரி என தூய்மை பணியாற்றும் 32 நபர்களுக்கு பள்ளியின் தலைவர் சீதாராமன் அவரது சொந்த பணத்திலிருந்து நபருக்கு ரூ.6,000 வீதம் மாத ஊதியம் வழங்கி வருகின்றார்.

தரமான சத்துணவு:
எங்களது மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் புதிய முறைகளை கையாண்டுள்ளோம். அதாவது அரசு அளிக்கக் கூடிய உணவுடன் ஊட்டச்சத்து வழங்குகின்றோம். மாணவர்களின் வீட்டில் காய்கறி தோட்டம் (வீட்டுத் தோட்டம்) அமைத்து அதில் விளையும் காய்கறிகளை கொண்டு வந்து அவற்றை சமைத்து ஊட்டச்சத்தாக வழங்குகின்றோம். அரசு சார்பில் 330 மாணவர்களுக்கு மட்டுமே உணவு வழங்க தொகை (ஒரு நாள் வீதம் காய்கறிக்கு ரூ.70) வழங்கப்படுகிறது. ஆனால் நாங்கள் தினசரி 500க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சத்துணவு அளிக்கின்றோம்.

கருவேப்பிலை சாதம், கொத்தமல்லி சாதம், தக்காளி சாதம் என கலவை சாதமும், வாரம் ஒருமுறை சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல், பாயாசம், குஸ்கா ஆகியவை கூடுதலாக வழங்குகின்றோம். இதேபோன்று அரசு வழங்கும் முட்டைகள் தரமானதாக வாங்கி சரியான முறையில் மாணவர்களைச் சென்றடையும் வகையில் இதற்கென அறிவியல் ஆசிரியர் பாலன், ஆங்கில ஆசிரியர் குகன் ஆகியோர் தலைமையில் குழு நிறுவப்பட்டு தினசரி கண்காணிப்படுகிறது. மேலும் தேர்வு நேரங்களில் மாலை 6 மணி வரை சிறப்பு வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ஊட்டச்சத்திற்காக 260 மாணவர்களுக்கு சுண்டல் என தினசரி ஒரு பயறு வகைகள் வழங்கப் படுகிறது. இதற்கான செலவுகளை ஆசிரியர்களே பகிர்ந்து கொள்கின்றனர்.

அடித்தட்டு மாணவர்களின் கல்வி வளர்ச்சி:
இங்கு பயிலும் மாணவர்களில் கல்வியில் ஏதேனும் பின்னடைவு ஏற்பட்டால் அதற்கான காரணத்தை ஆராய்ந்து அவற்றை நிவர்த்தி செய்து அந்த மாணவனின் கல்வியை மேம்படுத்த சிறப்பு ஆசிரியர் குழு உருவாக்கப்பட்டுள்ளது. எந்த வகையிலும் மாணவர்களின் கல்வி பாதியில் தடைபடுவதை விரும்புவதில்லை. ஏனெனில் எனது சொந்த ஊரான மானா மதுரையில் ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் மேல்நிலைப் பள்ளியில்தான் நான் பயின்றேன். அங்கு என்னோடு படித்த சக மாணவர்கள் அடித்தட்டு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். ஆதலால் மாணவர்களுக்கு ஏற்படும் இயல்பான பிரச்சனைகளை நன்கு அறிவேன். அதனால் இங்கு பயிலும் ஒவ்வொரு மாணவனின் நிலை குறித்து நன்கு தெரிந்து வைத்துள்ளோம்.

புதிய திட்டம்:
ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்புடைய எங்கள் பள்ளி மாணவர்களின் படிக்கும் ஆர்வத்தை அதிகப்படுத்தும் வகையில் சிறந்த நூலகம் ஒன்றை நிறுவ திட்டமிட்டோம். ஏற்கனவே எங்களிடம் 150 ஆண்டுகளுக்கு முன்னதான அரிய பல புத்தங்கள் உள்ளது. இந்நிலையில் நவீன வசதியுடன் கூடிய நூலகம் அமைக்க தமிழவேல் பி.டி.ராஜன் டிரஸ்டில் இருந்து சுமார் ரூ.30 லட்சம் நன்கொடையாக கொடுக்க அவரது குடும்பத்தினர் முன்வந்துள்ளனர். தமிழவேல் பி.டி. ராஜன் இப்பள்ளியின் முன்னாள் மாணவர் என்பதால் இப்பள்ளியின் வளர்ச்சிக்கு இத் தொகையை வழங்கும் அவரது குடும்பத்தினருக்கு எங்களது பள்ளி சார்பில் நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசு திட்டங்கள்:
மாணவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கக் கூடிய அத்தனைச் சலுகைகளையும் பெற்றுத் தருகின்றோம். என்னென்ன சலுகைகள் அரசால் மாணவர்களுக்கு வழங்கப்படுகிறதோ அது குறித்து பட்டியல் ஒன்று எங்கள் பள்ளியில் உள்ளது. எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் சம்பாதிக்கக் கூடிய நபரான தந்தை அல்லது அண்ணன் விபத்தில் மரணமடைய நேர்ந்தால் அதனால் மாணவனின் படிப்பு தடைபடும் நிலையை தவிர்க்கும் வகையில் அரசு சார்பில் ரூ.50,000 வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் இழப்பில் தவித்த 8 மாணவர்களு இந்த உதவித் தொகையை வழங்கி அவர்களது கல்வியை தொடர உதவி உள்ளோம்.

ஆசிரியர்கள்:

எங்கள் பள்ளியில் 53 ஆசிரியர்கள் மற்றும் இதர நிர்வாக பணியாளர்கள் என மொத்தம் 64 பேர்கள் பணியாற்றுகின்றனர். இங்குள்ள அனைத்து ஆசிரியர்களும் மிகுந்த திறமை மிக்கவர்கள் படிப்பு, விளையாட்டு, கலை என அனைத்திலும் தனித்திறன் வாய்ந்தவர்கள். நாங்கள் அவர்களுடைய திறனை சரியான முறையில் பயன்படுத் தவில்லை என்றுதான் கூற வேண்டும். தற்போது அதை இனம் கண்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை இயன்ற அளவு செய்து கொடுக்கின்றோம். அதேபோல் ஆசிரியர்கள் அனைவரும் நேரம், காலம் பாராது மாணவர்களின் கல்வியைக் கருத்தில் கொண்டு சிறந்த முறையில் பாடத்தினை கற்றுக் கொடுக்கின்றனர்.

ராமண்ணாஹால்:
இங்கு ராமண்ணா எனும் உள்ளரங்கம் ஒன்று உள்ளது. பழங்காலக் கட்டிடக்கலைக்குச் சான்றாக அமைந்துள்ள இவ் அரங்கம் மிக நேர்த்தியாக கட்டப்பட்டுள்ளது. இந்த அரங்கத்தில் தான் பிரபல இசைக் கலைஞர் எம்.எஸ்.சுப்புலெட்சுமி முதல் முறையாக தனது கச்சேரியை நடத்தினார் என்பது மற்றொரு பெருமை. தற்போது அரங்கத்தினை முற்றிலும் புதுப்பொலிவுடன் மாற்றும் பணிகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இப்பணி நிறைவடைந்ததும் இந்த ஹால் மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமையும். இது தவிர பாரதியார் பணியாற்றிய அறைகள் அனைத்தும் பழமை மாறாது பராமரிக்கப்பட்டு வருகிறது.

பாரதியார் பிறந்த நாள் விழா

சீறுடை:
24 மணி நேரமும் பள்ளியின் வளாகம் சுத்தமாக வைத்துக் கொள்வது போன்று, மாணவர்களின் சீருடையிலும் கவனம் செலுத்துகின்றோம். மாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களுக்கும் இணைந்து பாரம்பரிய உடைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். அதேபோன்று சிறப்பு விழாக்களின்போது அனைத்து ஆசிரியர்களும் மிடுக்காக தோற்றம் அளிக்கும் வகையில் இருபாலர் ஆசிரியர்கள் இதர பணியாளர்கள் என (சேதுபதி மேல் நிலைப்பள்ளி, மதுரை மேல்நிலைப்பள்ளி) மொத்தம் 200 நபர்களுக்கு முழுமையான கோட், சூட் வழங்கியுள்ளேன்.

பழைய மாணவர்களுக்கு அனுமதி:
இப்பள்ளியில் பயின்ற பழைய மாணவர்கள் எப்பொழுதும் வரலாம். சிலர் தங்களது குழந்தைகளுடன் இப்பள்ளியை சுற்றி பார்த்து செல்வது வழக்கம். பாரதியார் பணி செய்த பள்ளி என்பதால் தினசரி குறைந்த பட்சம் பத்து நபர்களாவது இங்கு அவருக்கென்று நிறுவப்பட்டுள்ள மார்பளவு உருவச் சிலையை வணங்கிக் செல்கின்றனர். கோடை காலங்களில் பள்ளிக்கு வருகை தரும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு மோர் வழங்கப்பட்டு அவர்களுக்கு உரிய மரியாதை கொடுக்கப்படுகிறது. எல்லாவற்றையும் விட இங்கு பயிலும் அனைத்து மாணவர்களின் வீட்டு சூழ்நிலையை தெரிந்து கொண்டு மனோதத்துவ முறையில் அவர்களை கையாளுகின்றோம். இது தவிர பொது சமூக சேவைக்கும் எங்களது மாணவர்கள் தயாராகவுள்ளனர்.

தாளாளரின் பணி ?
மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு அரசு நிறைய சலுகைகளை வழங்குகின்றது. அதனை சரியான முறையில் பயன்படுத்தும் பொறுப்பு ஒவ்வொரு அரசு பள்ளி தாளாளருக்கும் ஏனைய நிர்வாகிகளுக்கும் உண்டு. குறிப்பாக முன்னோர்களின் கட்டாயத்தின் பேரிலோ, வியாபார ரீதியாகவோ இப்பதவியில் செயல்படுதலை அறவே தவிர்க்க வேண்டும்.

நாம் ஒரு சாதாரண கடை கோடி ஊழியனாக நமது கடமை யை மிகச் சரியாக செய்தால் அது ஒவ்வொரு மாணவனுக்கும் நல்ல எதிர்காலத்தை நிச்சயம் வகுத்துக் கொடுக்கும். அதற்கான அச்சாணியாக நிர்வாகிகள் சுழல வேண்டும் என்று நீண்ட உரையாடலுக்கு பின் புன்னகையுடன் நம்மிடமிருந்து விடைபெற்றார் தாளாளர் எஸ்.பார்த்தசாரதி.

பள்ளி தாளாளர் எஸ்.பார்த்தசாரதி

ஒரு பள்ளியை நிர்மாணிப்பது, அதனைச் செவ்வனே நடத்துவது என்பது அந்தரத்தில் கட்டப்பட்டுள்ள கயிற்றில் நடப்பதற்குச் சமம். எதிர் வரும் பல்வேறு பிரச்சனைகளுக்கு நடுவில் மாணவர்களின் கல்வியையும், அவர்களது எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு செயல்பட்டால் மட்டுமே அப்பள்ளி சிறந்த பள்ளியாக விளங்க முடியும். அந்த வகையில் சேதுபதி பள்ளி மற்ற அனைத்து பள்ளிகளுக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குகிறது. “இது ஒரு அரசு பள்ளியா ? என்று அனைவரும் மலைக்கும் வகையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராகத் திகழ்கிறது”.

மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களிலுள்ள அடித்தட்டு குடும்பத்திலிருந்து தங்களது குழந்தைகளை கல்விக்காக அனுப்பிவைக் கப்படும் பெற்றோர்களின் கனவுகளை மெய்ப்பிக்கும் பணியை இங்குள்ள ஒவ்வொரு ஆசிரியர்களும் அன்றாடம் செய்து வருகின்றனர். அதேபோன்று இதர பணியாளர்களும், பள்ளி நிர்வாகத்தினரும் திறன் பட செயலாற்ற ஊக்கமாக உடனிருக்கின்றனர். எந்த ஒரு செயலும் தனித்து நிகழ்வதில்லை. அதைதான் சேதுபதி மேல்நிலைப் பள்ளி செய்துகாட்டி வருகிறது நாளும்.

உயர் சமூகத்தில் பிறந்து தன்னலத்தை மறந்து அடித்தட்டு மக்களுக்காக தன் வாழ்நாளெல்லாம் போராடிய மகாகவி சுப்ரமணிய பாரதி பணியாற்றிய இப்பள்ளியில் எப்படி தன்னலமானவர்களை நாம் காண முடியும். எண்ணமெல்லாம் மேன்மை கொண்டு ; யாவரும் சமமென்று ; விடுதலை குரல் எழுப்பிய பாரதிக்கும், இப்பள்ளியில் பணியாற்றிய, பணியாற்றும் ஆசிரியர்கள், இதர பணியாளர்கள், கல்வி நிர்வாகத்தினர் மற்றும் பயிலும், பயின்ற அத்தனை மாணவர்களுக்கும் எங்களது நெஞ்சார்ந்த சமர்ப்பணத்தை தெரிவித்துக் கொண்டு, சேதுபதி – பாரதி வேறல்ல எங்கள் மதுரையின் இரு கண்னென்று ஆனந்தமாய் சென்றோம் !!

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்

ஆண்டு: 01.03.2017
எழுத்து.மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நிழற்படம்: சுகன்யா பரமசிவம்
மதுரை மேனிலைப்பள்ளி தமிழாசிரியர்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~


இப்பள்ளியில் பாரதியார் எழுதிய
தனிமை இரக்கம் பாடல்

” குயிலனாய்! நின்னொடு குலவிஇன் கலவி
பயில்வதில் கழித்த பன்னாள் நினைந்துபின்
இன்றெனக் கிடையே எண்ணில்யோ சனைப்படும்
குன்றமும் வனமும் கொழிதிரைப் புனலும்
மேவிடப் புரிந்த விதியையும் நினைந்தால்
பாவியேன் நெஞ்சம் பகீரெனல் அரிதோ ?
கலங்கரை விளக்கொரு காவதம் கோடியா
மலங்குமோர் சிறிய மரக்கலம் போன்றேன்
முடம்படு தினங்காள் ! முன்னர்யான் அவளுடன்
உடம்பொடும் உயிரென உற்றுவாழ் நாட்களில்
வளியயனப் பறந்தநீர் மற்றியான் எனாது
கிளியினைப் பிரிந்துழிக் கிரியயனக் கிடக்கும்
செயல்யயன் இயம்புவல் சிவனே
மயலையிற் றென்றெவர் வகுப்பரங் கவட்கே? ”

(குறிப்பு: இப்பாடல் பாரதியாரின் குறிப்புகளோடு மதுரையில் முதன் முதலாக
‘விவேகபாநு’ பத்திரிகையில் 1904ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியானது.)

பகிர்பவர்கள் / காப்பி அடிப்பவர்கள் ஹலோ மதுரை என்பதை மறக்காமல் பதிவிடுங்கள்.

நன்றிகள் !!

 

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat