கட்டுரைகள்வரலாறு
Trending

மதுரை அரசாளும் மீனாட்சிக்கு திருக்கல்யாண விருந்து வரலாறு

மதுரை அதிர மீனாட்சி திருக்கல்யாணம் கடந்த மே மாதம் 07.05.2017 வெகுச் சிறப்பாக நடைபெற்றது. வருடா வருடம் நிகழும் இத்திருக் கல்யாணத்திற்கு பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே வருகிறது. அப்படித்தான் இந்தாண்டும் சித்திரைத் திருவிழாவினைக் காண மதுரை தெருவெல்லாம் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. கல்யாணம் என்றாலே விருந்துச் சாப்பாடு நிச்சயம். அதுவும் நம்ம மதுரையை ஆரசாளும் மீனாட்சி அம்மன் திருக்கல்யாணம் என்றால் சொல்லவா வேண்டும். அப்படி வருகை புரிந்த பக்தர்களுக்கு சப்தமே இல்லாமல் ஒவ்வொரு வருடமும் வயிறு நிறைய சாப்பாடு போட்டு திக்குமுக்காட வைப்பவர்கள் யாரென்று உங்களுக்குத் தெரியுமா ? அது துவங்கிய பூர்வீகக் கதை இதோ…

அன்னை மீனாட்சி அம்மன் திருக்கல்யாண அருசுவை விருந்தை அருந்தப் புண்ணியம் செய்திருக்க வேண்டும். இன்றைக்கு மதுரை சேதுபதி பள்ளியின் மிகப்பெரிய வளாகத்தில் வருகை தரும் பக்தர்களுக்கு முகம் சுழிக்காமல் அன்னத்துடன் தங்களுடைய உள்ளன்பையும் அள்ளிக் கொடுக்கின்ற அன்னதானத்திற்கு பின்னால் நிறைய மனிதர்கள் மறைந்துள்ளனர். அதில் ஒருவர்தான் பி.என்.விவேகானந்தன். திருக்கல்யாண சாப்பாடு வழங்கப்பட்ட பின்னணி நிகழ்வு குறித்து அவரே சொல்வதைக் கேளுங்கள்…

நான் காரைக்குடியில் பிறந்தாலும் அன்னை மீனாட்சி என்னை அவள் அருகிலேயே வைத்துவிட்டாள். 1969ஆம் ஆண்டு பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை ஆரம்பிக்கப்பட்டது. இதன் குருநாதர் ஆர்.சிவந்திராஜன். இவர் முன்னாள் மத்திய தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஆர்.சுந்தர்ராஜன் உடன் பிறந்த சகோதரர் ஆவார். எங்கள் குரு நாதர் தலைமையில் பலரும் இணைந்து வருடத்திற்கு ஒரு முறை கார்த்திகை முதல் நாள் மற்றும் அம்மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என இரு முறை அழகர்கோவில் பக்தர்கள் சுமார் 10,000 பேருக்கு விருந்து கொடுப்பது வழக்கம். இது இன்று வரை நடந்து கொண்டு வருகிறது.


விருந்தின் துவக்கப் பூஜை…

அந்த காலகட்டத்தில் மதுரை மீனாட்சி அம்மன் திருக்கோவில் இணை ஆணையராக தேனைய்யா இருந்தார்கள். அந்த முறை அவர் அன்னை மீனாட்சித் திருக்கல்யாணம் தலைமையில் நடைபெற்றது. அதில் கோவில் அதிகாரிகளை அமர்த்தி ஒரு கூட்டம் போட்டு, திருக்கல்யாணத் திற்கு சாப்பாடுக்கு என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு அதிகாரிகள் நாங்கள் பலரிடம் பணம் சேகரித்து திண்டுக்கல் மாடன் ரெஸ்ட்டாரென்டில் சாப்பாடு வாங்கி அதை நாங்கள் சாப்பிட்டுவிட்டு மீதியை பொது மக்களுக்கு கொடுப்போம் என்று கூறியுள்ளனர்.

இணைஆணையர் தேனையா ஆதங்கம்:
அதற்கு முந்தைய வருடம் தேனைய்யா பழமுதிர்சோலையின் துணை ஆணையராக இருந்தார். இதைக் கேட்டதும் அவர் மனசு நிம்மதியின்றி வீட்டிற்குச் சென்று வருத்தத்துடன் அமைதியாக இருந்துள்ளார். இதைப் பார்த்த அவரது மனைவி ஏன் இப்படி இடிந்துபோய் இருக்கீங்க என்னாச்சு என்று கேட்க… உலகமே வியந்து பார்க்கின்ற அன்னை மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்திற்கு ஹோட்டலில் சாப்பாடு வாங்கி அதன் மீதியை பக்தர்களுக்கு கொடுப்பது மன வேதனை அளிக்கிறது. மதுரைக்கே படி அளக்கும் அன்னைக்கு ஒரு பிடி சாதம் பொங்கமுடியாதா ? என்று… தனது மனக் குமுறலைக் கொட்டியுள்ளார்.


பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை குழுவினர் உணவு வழங்கும் காட்சி…

உடனே அவரது மனைவி ஏன் கவலைப்படுகிறீர்கள் அழகர் கோவிலில் விருந்து அளிக்கும் பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபையை கேட்டால் என்ன ? 25 கி.மீ தொலைவில் இருக்கும் அழகர் கோவிலுக்கே அன்னதானம் வழங்கும் போது ! அன்னை மீனாட்சிக்கு செய்ய மாட்டார்களா ? என்ன ? என்று கூற, மறு நாள் காலை என் கடைக்கு காரில் வந்து இறங்கினார் இணை ஆணையர் தேனைய்யா.

முதலாம் ஆண்டு திருக்கல்யாண விருந்து:
அப்பொழுது எனது குருநாதர் ஆர்.சிவந்திராஜன் பக்கத்தில் இருந்தார். எனது குருநாதரிடம் நிகழ்ந்ததைக் கூறி நீங்கள் சாப்பாடு போடுவீங்களா ? என்று கேட்க, நான் முதலில் ஹோட்டலில் வாங்கித் தரச் சொல்வதாக நினைத்து இதுவெல்லாம் முடியாது என்று சிரித்துக் கொண்டே மறுத்தேன். அப்பொழுது குருநாதர் பெரியவர் இவ்வளவு தூரம் வந்து நம்மீது நம்பிக்கை கொண்டு கேட்கிறார் நிச்சயமாக நாங்கள் இதை செய்து கொடுக்கின்றோம் என்று நம்பிக்கையுடன் அவரை அனுப்பிவைத்தார்.

அவரும் மகிழ்வுடன் திரும்பிச் சென்றார். 1998-99 ஆம் ஆண்டு முதல் முறையாக திருக்கல்யாணத்திற்கு ஒரு வாரம் இருக்கும் பட்சத்தில் அன்னை மீனாட்சியின் அருளால் முதல் முறையாக சிவந்தீஸ்வரர் சன்னிதியில் (பட்டு ஏலமிடும் இடம்) சுமார் 7,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினோம். காலையில் ஆரம்பித்த விருந்து மதியம் 3 மணி வரை நிழற் பந்தலில் நடைபெற்றது. அதனை ஜெ.சி.தேனைய்யா பார்த்து பார்த்து மகிழ்ந்தார்.

 

 

 

 

 

 

 

 

கல்யாண விருந்து வழங்கும் காவல் உயர் அதிகாரி…

கமிஷ்னர் சுப்பிரமணியம் உதவி:
அதற்கு அடுத்த வருடம் மண்ணாக இருந்த அந்த இடம், கோவில் அரங்காவலர் குழு உறுப்பினர்கள் சார்பில் கருங்கல்லாக மாற்றிக் கொடுக்கப்பட்டது. அந்த வருடமும் சிறப்பாக மீனாட்சி விருந்து பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அதற்கு அடுத்த மூன்றாவது வருடம் காவல்துறையிடமிருந்து ஒரு நோட்டீஸ் வந்தது. அதில் நீங்கள் அன்னதானம் வழங்கும் இடம் மிகக் குறுகலானது. இந்த இடம் நெரிசலான பகுதி. கூட்ட நெரிசல் ஏற்பட்டு ஏதாவது அசம்பாவிதம் நிகழ்ந்தால் நீரே அதற்கு பொறுப்பாவீர் (என் பெயரிடப்பட்டு) என்று எழுதியிருந்தது. இது குறித்து அன்றைய கமிஷ்னர் சுப்பிரமணியத்திடம் முறையிட்டோம்.

யார் இதைக் கொடுத்தார் என்று விசாரித்து, நீங்கள் நாளைக் காலை திருமலை நாயக்கர் மஹாலுக்கு வாருங்கள் என்று சொல்லி எங்களை அனுப்பினார். ஏனெனில் அந்தாண்டு முதன் முறையாக பொதுமக்கள் நேரடியாக கமிஷ்னரிடம் மனு கொடுக்கலாம் எனும் முறை ஆரம்பிக்கப்பட்டது. அதேபோல் நாங்கள் மறுநாள் சென்றோம் முதலில் மூன்று வழக்கு விசாரிப்புக்குப் பின்பு எங்களை அழைத்துப் பேசினார். நாங்கள் நடந்தவற்றைக் கூறினோம். எத்தனை பேருக்கு சாப்பாடு அளிக்கின்றீர்கள் என்று கேட்க, சுமார் 10,000 பேருக்கு என்று தெரிவித்தோம்.


கல்யாண விருந்து வழங்கும் காவல் உயர் அதிகாரி…

உடனடியாக நோட்டீஸ் அனுப்பிய இன்ஸ்பெக்டரை வரவழைத்து. சிறுது நேர கலந்துரையாடலுக்குப் பிறகு அன்று மாலை எங்களை அன்னதானம் வழங்கும் இடத்திற்கு வரச் சொன்னார். நாங்களும் மாலை 5 மணி அளவில் சிவந்தீஸ்வரர் சன்னதிக்கு சென்றோம் அங்கு கமிஷ்னர் சுப்பிரமணியத்துடன், இணை ஆணையாளர் ராமராஜ் உடனிருந்தார். விருந்து வழங்கப்படும் இடத்தை கோவில் குழுவினருடன் ஆராயப்பட்டது. இந்த பாதை ஒரு வழிப்பாதையாக உள்ளது என்ன செய்யலாம் என்று யோசிக்க அந்த நேரத்தில் கமிஷ்னர் சுப்பிரமணியம் உடனே இந்த வழியாக ஒரு படிக்கட்டு அமைத்து மடப்பள்ளி வழியாக எளிதாக இறங்கிச் செல்லலாம் என்று கூற, கோவில் நிர்வாகம் சார்பில் உடனடியாக படிக்கட்டுக்கள் அமைக்கும் பணி நடைபெற்றது. வெயில் நேரம் என்பதால் மேட் அமைத்து பொது மக்கள் நிறைவாக சாப்பிட்டுவிட்டு கோவிலின் தங்க கோபுரத்தை பார்த்து தரிசித்துச் சென்றனர். இப்படி 4 ஆண்டுகள் சிவந்தீஸ்வரர் சன்னதியில் அன்னை மீனாட்சியின் திருக்கல்யாண விருந்து சிறப்பாக நடைபெற்றது.

6வது ஆண்டில் 20,000 பேருக்கு விருந்து:
அடுத்த ஆண்டு கூட்டம் அதிகமானது. இது 6வது ஆண்டு 20,000 பேர் என்பதால், யானை மஹாலில் சமையல் செய்து அதன் ஆடி வீதி வரை சாப்பாடு போட முடிவு செய்து, அதன்படி அமோகமாக அன்றைக்கு 15,000 முதல் 20,000 பக்தர்களுக்கு விருந்து வழங்கினோம். அடுத்தாண்டு பசுமடம் கேட்டோம். இரண்டு நாட்களுக்கு முன்பு அங்கிருந்த பசுவை யானை மஹாலுக்கு மாற்றி பசுமடத்தை சுத்தம் செய்து, அங்கு தடபுடலாக சமையல் செய்யப்பட்டது. இரு ஆடி வீதியான தெற்கு மற்றும் மேற்கு ஆடி வீதிகளில் பக்கதர்களுக்கு மிகப் பிரம்மாண்டமாக விருந்து வழங்கப்பட்டது. திருகோவில் சார்பில் பந்தல் போடப்பட்டு எங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கினர். இப்படித் தொடர்ந்து 10 ஆண்டுகள் வெகுச் சிறப்பாக நடைபெற்றது.


விருந்துக்கு தயாராகும் சமையல் காய்கறி நறுக்கும்…

சேதுபதி பள்ளியில் ஆரம்பமான விருந்து:
அதன் பிறகு பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கை காரணமாக கோவில் வளாகத்தில் விருந்து அளிக்க காவல்துறை அனுமதி வழங்க மறுத்துவிட்டது. கடைசி நிமிடத்தில் பொட்டலமாக கொடுங்கள் என்று காவல்துறை உயர் அதிகாரி சார்பில் தெரிவிக்கப்பட்டது. எங்களுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. இத்தனை வருடங்களாக விருந்து அளித்துவிட்டு, இனிமேல் நாம் பொட்டலமாகவா? வழங்குவது என்று பெருத்த சோகத்தில் கடையில் அன்னை மீனாட்சியை நினைத்து மெளனமாக அமர்ந்திருந்தேன். அப்பொழுது என் கடைக்கு அருகில் இருந்த ஒரு சிறுவன் இதைக் கேட்டு ஏன் கவலைப்படுகிறீர்கள் நான் படித்த சேதுபதி பள்ளியைக் கேளுங்கள். அங்கு போதுமான இட வசதி உள்ளது என்று தெரிவித்தார்.

இது நிகழ்ந்தது 2008-2009ஆம் ஆண்டு. அப்பொழுது ராமகிருஷ்ணமடம் தலைவர் கமலானந்தசுவாமியும், சேதுபதிப் பள்ளியின் செயலாளர் எம்.எஸ்.மீனாட்சி சுந்தரம் நெருங்கிய பழக்கம் உண்டு. இது எனது நினைவுக்கு வர, நான் கமலானந்தசுவாமியை இரவு 9 மணி இருக்கும் தொடர்பு கொண்டேன். நான் கூறியதைக் கேட்டு அப்படியா… சரி இருங்கள் என்று இணைப்பைத் துண்டித்துவிட்டு சிறு நேரம் கழித்து தொடர்பில் வந்து சாமி உங்களுக்கு மீனாட்சி அம்மன் துணை இருக்கின்றாள். சேதுபதி பள்ளி செயலாளர் சம்மதம் தெரிவித்து விட்டார். நாளை காலை சென்று பாருங்கள் அவர்களது நிர்வாகக் குழுவில் கூறி அனுமதி பெற்றுத் தருவதாக கூறியுள்ளார் என்றார்.

திருக்கல்யாணம் சனிக்கிழமை. அனுமதி கிடைத்தது புதன் கிழமை. அன்னை மீனாட்சி அருகில் இருக்க அனைத்தும் அவள் செயல் அல்லவா என்று மீதமிருந்த இரு நாட்களும் இரவு பகலாக உழைத்தோம். காவல்துறை மீண்டும் கிடுக்குப்பிடி போட்டது. அப்பொழுதும் அன்னை மீனாட்சி எங்களை கைவிட வில்லை. அன்றைய கமிஷ்னர் எங்களுக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்து தடைகளை அகற்ற, அந்தாண்டு 50,000 பக்தர்களுக்கு நிறைவாக அன்னதானம் வழங்கினோம். அதன் பிறகு தொடர்ந்து 8 ஆண்டுகள் இங்குதான் திருக்கல்யாண விருந்து நிகழ்கிறது. அன்றிலிருந்து இன்று எங்களது சேவைக்கு பக்க பலமாக விளங்கும் இப்பள்ளியின் நிர்வாகக் குழுவிற்கு எங்களது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.


விருந்துக்கு தயாராகும் சமையல் பணிகள்…

1,00,000 பக்தர்களுக்கு உதவிய உள்ளங்கள்:
தற்போது (2017) இந்தாண்டும் திருக்கல்யாண விருந்து அளிக்க உணவு பரிசோதனை, பாதுகாப்பு என பல கெடுபிடிகள். அன்னை மீனாட்சியின் அருள் பார்வையால் முதல் நாள் 20,000 பேருக்கும், மறு நாள் 80,000 பேர் என மொத்தம் 1,00,000 பேருக்கு எந்தவித பிரச்சனையும் இன்றி மன நிறைவாக வழங்கப்பட்டு நிறைவடைந்தது.

முதல் முறையாக 1 லட்சம் பக்தர்களுக்கு வழங்கியுள்ளோம். இந்த மாபெரும் விருந்துக்கு எங்களுக்கு என்றுமே தூணாக நிற்பது மதுரை சேதுபதி பள்ளி நிர்வாகம்தான் இம்முறையும் இப்பள்ளியின் நிர்வாகக் குழுவினர், பள்ளியின் செயலாளர் வழக்குரைஞர் எஸ்.பார்த்தசாரதி, தலைமை ஆசிரியர் சி.கோபாலகிருஷ்ணன், பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் என அனைவரும் சொல்லில் அடங்கா உதவிகளைச் செய்தனர்.

இதேப்போன்று பி.சி.பெருங்காயம் உரிமை யாளர் அண்ணாச்சி சார்பில் பெரும்பாலான மளிகை பொருட்கள் வழங்கப்பட்டது. சாஸ்த்தா தியாகராஜன் குழுவினர் எண்ணெய் வழங்கினர். பரவை மார்க்கெட் முன்னாள் தலைவர் திருமங்கலம் சந்திரன் அண்ணாச்சி ஒரு லாரி லோடு காய்கறிகளை வழங்கினார். மேலும் இன்டேன், ஹச்.பி, பாரத் என மூன்று சிலிண்டர் நிறுவனங்களும் இணைந்து அவர்கள் சார்பில் 80 சிலிண்டர்கள் கொடுத்து உதவினர்.


சேதுபதி பள்ளி வளாகத்தில் திருக்கல்யாண விருந்தின் ஒரு காட்சி…

ஆர்.எம்.ஏ.அப்பாவுச் செட்டியார் குடும்பத்தினர், ஆர்.எம்.ஏ.நந்தகுமார் (கல்யாணி குரூப்ஸ்), சீதாராமன் ஜுவல்லரி உரிமையாளர் ஆகியோர் பந்தல் அமைத்துக் கொடுத்தனர். மற்றும் சமையல் பொறுப்புக்களை எல்லாம் நகைக் கடை உரிமையாளர் தாமோதிரன் குழுவினர் திறம்படச் செய்திருந்தனர். கடந்த 10 ஆண்டுகளாக தாமோதிரன் எங்களுடன் சேவைப் பணியை செய்து வருகின்றார். சொந்தமாக கேட்டரிங் வைத்தும் நடத்துகின்றார். இது போன்று பலரும் கல்யாண விருந்துக்கு தாங்களாகவே முன் வந்து கிள்ளிக் கொடுக்காது அள்ளிக் கொடுத்த அத்தனை உள்ளங்களுக்கும் எங்கள் குழு சார்பில் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றோம்.

பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட்:
தற்போது எனக்கு 75 வயது பூர்த்தி ஆகிவிட்டது. அன்னை மீனாட்சி என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்து, என்னுடன் நல்ல உள்ளங்கள் பலரையும் இத்தொண்டில் இணைத்து தனியயாருவனாக அல்லாது தரணி ஆளும் மீனாட்சியின் அருள் மட்டுமே அன்றி வேறு ஒன்றுமில்லை என்ற உண்மைச் சொல்லின் படி எங்களுக்கு பிறகு இந்தப் பணியை தொடர்ந்து நடத்திட 18 நபர்கள் கொண்ட புதிய குழுவினை பழமுதிர்சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட் என்ற பெயரில் இப்பொழுது புதுப்பித்துள் ளோம். டிரஸ்ட் தலைவராக நானும், செயலாள ராக கே.கனகசுந்தரம், உதவி தலைவராக எஸ்.ஆர்.வெங்கடேசன் மற்றும் ஏபிசி.சித்தி விநாயகம் பொருளாளராக தந்தீஸ்வரன் என்ற தங்கம் உள்பட பலரும் வழிநடத்திச் செல்கின் றோம் என்றார் பி.என்.விவேகானந்தன்.

மீனாட்சி அம்மன் திருக்கல்யாணத்தை முன்னிட்டு கோவில் அன்றைக்கு மட்டும் விருந்து வழங்கிய நிகழ்வு இன்றைக்கு சேதுபதி பள்ளியில் மாப்பிள்ளை அழைப்பு என்று கல்யாணத்திற்கு முந்தைய நாள் 20,000 பேருக்கு கேசரி, பஜ்ஜி, பொங்கல், சாம்பார் ஆகியவை வழங்கப் பட்டுள்ளது.


திருக்கல்யாண விருந்துக்குப் பின் மொய் செய்து வெற்றிலை, பாக்கு பெறும் காட்சி…

மறுநாள் (திருக்கல்யாணம் அன்று) காலை கேசரி, பஜ்ஜி, பொங்கல், சாம்பாரைத் தொடர்ந்து 10.30 மணி முதல் சாம்பார், தயிர் சாதம், சர்க்கரைப் பொங்கல் எக பாக்குத் தட்டில் வைத்து வரிசையாக வழங்கப்பட்டது. இந்த மிகப் பெரிய விருந்து முடிந்தவுடன் சேதுபதி பள்ளியின் வளாகத்தை அனுப்பானடி ஓம் ஆதிபரா சக்தி குழுவினர் முழுமையாக சுத்தம் செய்து முன்பிருந்த நிலையில் பள்ளியின் வளாகத்தை தூய்மைபடுத்திக் கொடுத்தனர்.

அடடா… இந்த வருடம் நாம் இந்த விருந்தை விட்டுவிட்டோமே என்று கவலைப்பட வேண்டாம். அடுத்த வரும் வந்து ஒரு பிடிப் பிடிங்க. ஒரு கல்யாண வீட்டில் 5,000 பேருக்கு சாப்பாடு போடுவதே எவ்வளவு பெரிய விசயம் என்று நம் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ஒரே இடத்தில் 1,00,000 பேருக்கு விருந்து அளிப்பது என்பது எத்தனை பெரிய விசயம். இதில் உணவு தரம் குறித்து பரிசோதனை, பாதுகாப்பு, எதிர்ப்பு என எல்லாவற்றையும் தாண்டி காவல்துறையின் முழு ஒத்துழைப்புடன் வழங்கப்பட்ட இந்த மெகா விருந்து இக்குழுவினரால் மட்டுமே நிகழ்த்தப்பட்டதல்ல மதுரை அரசாளும் அன்னை மீனாட்சியின் அருள் அன்றி வேறொன்றுமில்லை!!!


மதுரை மாநகராட்சி நகர் நல அதிகாரிகளுடன் பி.என்.விவேகானந்தன் (வெள்ளை ஜிப்பா வலது புறத்திலிருந்து கடைசியாக தாடியுடன் நிற்பவர் )

பழமுதிர் சோலை திருவருள் முருகன் பக்த சபை டிரஸ்ட்: 94424 08009.

எழுத்து: மு.இரமேஷ் குமார்
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.06.2017

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat