ஆன்மீகம்வரலாறு

மதுரை கூடலழகர் பெருமாள் கோவில் – வரலாறு

வரலாறு

Story Highlights

  • பெருமாள் இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார்.
  • பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடிய பெருமைக்குரிய திருத்தலம் மதுரை கூடழகர் திருக்கோயிலாகும்.
  • தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை.
  • இங்கு தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.
  • கூடலழகர் கோவிலில் மொத்தம் ஆறு அணையா விளக்கு உள்ளது
  • ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கூடலழகர் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.
  • மார்கழி மாதத்தில் திருப்பல்லாண்டு தொடக்கம், பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து வைபவங்கள் நடைபெறும்.
  • கோவிலில் வாரத்தில் ஆறு நாட்கள் 100 பேருக்கு அன்னதானம் நண்பகல் 12 மணிக்குவழங்கப்படுகின்றது. சனிக்கிழமை மட்டும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.
  • காலை 5.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (சனிக்கிழமைகளில் பிற்பகல் 12.30 - இரவு 10.00 மணி வரை சேவை உண்டு)

மதுரைக்கும், மார்கழி மாதத்திற்கும் பெரும் தொடர்பு உண்டாக்கிய பெருமை கூடலழகர் திருக்கோயிலையேச் சாரும். பாடல் பெற்ற திருத்தலங்களாகப் போற்றப்படும் 108 திருப்பதிகளில் 47வது திருத்தலம் இதுவாகும். திருக்கூடல், கூடலம்பதி, தென்மதுரை என்ற பல்வேறு பெயர்களால் குறிப்பிடப்படும் இத்திருக்கோயில், பழமையான வரலாற்றுப் பின்னணியைக் கொண்டது. முக்கியமாக உலகிலுள்ள அனைத்து பெருமாள் கோயில்களிலும் அதிகாலையில் பாடப்படும் நாலாயிரத் திவ்ய பிரபந்தத்தின் முதல் பாசுரமான “”பல்லாண்டு பல்லாண்டு என்ற “திருப்பல்லாண்டு” பாசுரத்தை பெரியாழ்வார் இங்குதான் அரங்கேற்றினார் என்பது மதுரையின் பெருமையில் இதுவும் ஒன்றாகும். இந்த கோவில் சங்க காலத்துக்கு முன்பே தோன்றிய பழம் பெருமையுடையது. முற்கால பாண்டியர்கள் குல பரம்பரையாக வழிபட்டும் திருப்பணிகள் செய்தும் வந்த தொன்மையை கொண்டது. இக் கோயிலின் கருவறையில் உள்ள பெருமாள் பெயர் கூடலழகர். இந்த ஆலயம் பற்றி ஒரே கட்டுரையில் எழுதுவது என்பது கடலில் எழும் அலையை எண்ணுவதுபோல், ஆதலால் முக்கியமானவற்றை கூறுகின்றேன். இக்கோயிலுக்கு இதுவரை வராதவர்கள் வாசித்துவிட்டு நிச்சயமாக வாருங்கள். சரி வாங்க கூடலழகர் கோயிலின் வரலாற்றுக்குள் செல்வோம்..

வரலாற்று தகவல்:
கி.பி.1740ல் ஆர்காடு நவாப் சாந்தாசாகிப் மற்றும் அவருடைய மக்கள் மதுரை மீது படையயடுத்தனர். அப்போது பங்காரு திருமலை நாயக்கரின் மகன் விஜயகுமார முத்துத் திருமலை, வெள்ளையன் சேர்வை என்ற தளபதியுடன் மதுரையை விட்டு ஓடிப்போனார் என்றும், அப்போது ஸ்தலத்தார் கூடலழகர் உற்சவர் திருமேனியை பாதுகாப்புக்காக வானவீரன் மதுரை என்ற மனாமதுரைக்கு அப்புறப்படுத்தியதாகவும் கூறப்படுகின்றது.

மானா மதுரையில் 1740-ல் தொடங்கி 1741 வரை நித்ய பூஜைகள் சேதுபதி மன்னர் ஏற்பாடு செய்து கொடுத்தார். அதன் பிறகு முராரிராயர் என்ற மராட்டிய மன்னர் அப்பாச்சி நாயக்கரின் கீழ்படைகளை அனுப்பி முகமதிய படைகளை விரட்டி, சேதுபதியின் இசைவு பெற்று கூடலழகரை மதுரைக்கு எழுந்தருளச் செய்து ஜூலை 2, 1741-ல் பிரதிஷ்டை செய்து கும்பாபிசேகம் செய்வித்தார் என்றும் கூறப்படுகின்றது. இந்த வரலாற்றுச் செய்திகள் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில் திருப்பணி மாலையிலிருந்து அறியப்படுகின்றது.

தல வரலாறு:
பிரம்மாவின் புத்திரரான சனத்குமாரருக்கு, பெருமாளை அர்ச்சாவதார (மனித ரூபம்) வடிவில் தரிசிக்க வேண்டுமென ஆசை எழுந்தது. தன் விருப்பம் நிறைவேற, இத்தலத்தில் பெருமாளை வேண்டி தவமிருந்தார். சுவாமி ஸ்ரீதேவி, பூதேவியுடன் அவருக்குக் காட்சி தந்தார்.

பின்பு சனத்குமாரர், தேவசிற்பி விஸ்வகர்மாவை வரவழைத்து தான் கண்ட காட்சியை அப்படியே வடிவமைக்கச் செய்தார். அதை மிக அழகிய அஷ்டாங்க விமானத்தின் கீழ் பிரதிஷ்டைசெய்தார்.  அவரே கூடலழகர் என்றும், இத்தல பெருமாள் யுகம் கண்ட பெருமாள் என்றும் கூறப்படுகின்றது.

கூடலழகர் பெயர்:
ஒருமுறை மதுரையில் தொடர்ந்து மழை பெய்யவே, மக்கள் கடும் பாதிப்பிற்குள்ளாயினர். தங்களை மழையிலிருந்து காத்தருளும்படி பெருமாçe வேண்டினர். அவர்களது வேண்டுதலை ஏற்ற சுவாமி, நான்கு மேகங்களை ஏவினார். அவை, மதுரையைச் சுற்றி நான்கு மாடங்களாக ஒன்று கூடி, மழையிலிருந்து மக்களை காத்தது.

இவ்வாறு, நான்கு மேகங்கள் ஒன்று கூடியதால் இத்தலம், நான்மாடக்கூடல் என்றும், கூடல் மாநகர் என்றும் பெயர் பெற்றது. சுவாமியும், கூடலழகர் என்று பெயர் பெற்றார். இந்த பெருமாள் துவரைக் கோமான் என்ற பெயரில் மதுரை தமிழ்ச் சங்கத்தில் புலவராக அமர்ந்திருந்ததாக பரிபாடல் கூறுகிறது. எனவே இவரை, புலவர் கூடலழகர் என்றும் சிறப்பித்துக் கூறுகிறார்கள்.

பெரியாழ்வார்:
கி.பி.எட்டாம் நூற்றாண்டில், கோதை என்னும் சுடர்கொடியை வளர்த்து வந்த பட்டர்பிரான், ஸ்ரீவில்லிப்புத்தூர் பெரியாழ்வாருக்கு ஒரு கனவு வந்தது. அந்த கனவில் பெருமாள் தோன்றி, பாண்டிய வல்லபதேவன் மன்னருக்கு வீடுபேறு அடைவது குறித்து சந்தேகம் எழுந்துள்ளது. அதை நீ சென்று நிவர்த்தி செய் என்று. பெருமாள் கனவில் கேட்டுக் கொண்டதன்படி, மதுரையில் பாண்டிய வல்லபதேவன் கூட்டியுள்ள பரம்பொருள் நிர்ணய பேரவைக்கு புறப்பட்டு வருகிறார் பெரியாழ்வார்.

அங்கு கூடியிருக்கும் ஆன்றோர்கள் முன்னிலையில், பரம்பொருள் ஸ்ரீமந் நாராயணன்தான் என்று பெயரை நிலை நாட்டி பொற்கிளியை வெல்கிறார். ஆழ்வாரின் சிறப்பை உணர்ந்த மன்னன், அவரைப் பட்டத்து யானை மீது அமர்த்தி நகர்வலம் வரச் செய்தார். ஆழ்வார் உலா வரும் அழகை காண விரும்பி, கருடன் மீது தேவியருடன் எழுந்தருளிக் காட்சி கொடுத்தார் பெருமாள்.    பார்ப்பதும், பார்க்கப்படுவதும் என்று இரண்டு வகையான இன்பத்தையும் ஒருங்கே அருளினார் பெருமான்.

பெருமானின் காட்சிக் கிட்டிய மகிழ்ச்சி ஒரு புறம்; மனதைக் கவரும் அந்த பேரழகின் தரிசன இன்பம் மறுபுறம் ! இப்படி இருவகையான இன்பத்தின் மத்தியிலும் ஆழ்வார்க்கு கவலை வந்தது. அது என்னவென்றால் அழகிய பெருமாளை கண்ட பக்தர்களின் கண் படுமோ என்று அஞ்சிய பெரியாழ்வார், பெருமாளுக்குக் காப்பாகப் ஒரு பாடலைத் தொடங்குகிறார். அதுதான் இன்று உலகம் முழுவதும் உள்ள பெருமாள் கோவில்களில் பாடப்படுகின்றது.

“பல்லாண்டு பல்லாண்டு பல்லாயிரத்தாண்டு
மல்லாண்ட திண்தோள் மணிவண்ணா
நின் சேவடி செவ்வி திருக்காப்பு”

என பெருமாளுக்கு திருப்பல்லாண்டு பாடிய பெருமைக்குரிய திருத்தலம் மதுரை கூடழகர் திருக்கோயிலாகும். இன்றும் இக்கோயிலில் மார்கழி மாதத்தில் நடைபெறும் பகல் பத்து உற்சவத்தின்போது பரத்துவ நிர்ணயம் என்ற பெயரில் இந்த வைபவம் கொண்டாடப்படுகின்றது.

இந்த வைபவம் நடைபெறும் இடமான மெய் காட்டும் பொட்டல் என்பது மருவி இன்று மேங்காட்டுப் பொட்டல் என்ற பெயரில் வழங்கி வருகிறது. மார்கழி மாதம் பகல் பத்து உற்சவத்தின் முதல்நாள் வைபவத்தில், யானை மீது வரும் பெரியாழ்வார், தேவியருடன் கூடலழகர், கருடன் மீது காட்சிதரும் திருவிழா கொண்டாடப்பட்டு வருகின்றது.

ராஜ கோபுரம்:
இக்கோயிலின் வாயிற் கோபுரம் பேரழகாகும். ஐந்து நிலைகளில் ஐந்து கலசங்களையும் கொண்ட இராஜகோபுரம் முகப்பில் காணப்படுகின்றது. தளங்களில் இதிகாச புராணங்களில் செய்திகளை விளக்கும் சுதைச் சிற்பங்கள் பஞ்ச வர்ணங்கள் தீட்டப்பட்டுள்ளன.

அஷ்டாங்க விமானம்:
பொதுவாக பெருமாள் கோயில்களில் 96 வகையான விமானங்கள் அமைக்கப்படுவது வழக்கம். இதில் அஷ்டாங்க விமானம் மிகவும் புண்ணியம் தருவதாகக் கருதப்படுகிறது. 108 திவ்ய தேசங்களில் இங்கும், திருக்கோஷ்டியூரிலும் மட்டுமே சுவாமி, அஷ்டாங்க விமானத்தின் கீழ் காட்சி தருகிறார். இந்த விமானம் 125 அடி உயரம் கொண்டது. இதிலுள்ள கலசம் 10 அடி உயரமுடையது. இதன் நிழல் தரையில் விழுவதில்லை. மூன்று நிலைகளுடன், எட்டு பகுதிகளாக உயர்ந்து நிற்கும் இந்த விமானம் ” “ஓம் நமோ நாராயணாய’ என்ற எட்டெழுத்து மந்திரத்தின் வடிவமாகும்.

கோவில் அமைப்பு:
ஐந்து கலசத்துடன் கூடிய ஐந்து நிலை ராஜகோபுரம், எட்டுப் பிரகாரங்கள், ஆண்டாள், சக்கரத்தாழ்வார், நவக்கிரகாதியர், ஆழ்வார்கள், ஆச்சாரியர்கள், மணவாள மாமுனிகள், விச்வக்சேனர், ராமர், கிருஷ்ணர், லட்சுமி நாராயணர், கருடன், ஆஞ்சநேயர், லட்சுமி நரசிம்மர் ஆகியோரின் சன்னிதிகள் கொண்டுள்ளது இக்கோயில்.

உற்சவர்:
கோவிலின் உள்ளே நுழைந்ததும், கொடிமரத்தை தரிசித்து முடித்துவிட்டு அதற்கு அப்படியே பின்புறத்தில் உற்சவர் வீற்றிருக்கின்றார். இது கருட மண்டபம் ஆகும். இதில் கருடன் சந்நிதி, கிருஷ்ணன் சந்நதி, இராமர் சந்நிதி, ஆஞ்சிநேயர் சந்நிதி, விஷ்வக்சேனர் சந்நிதி, லட்சுமி நாராயணன் சந்நிதியோடு கூடிய யாகசாலை, திருமாலை கட்டும் அறை ஆகியவை அமைந்துள்ளன. இம்மண்டபத்தின் தெற்குப் புறமாக அட்டாங்க விமானத்திற்குச் செல்லும் படிக்கட்டுகள் உள்ளன. கிருஷ்ணன் சந்நிதிக்கு முன்பாக நான்கு கால் மற்றும் விமானத்துடன் கூடிய சயன உற்சவ மண்டபம் அமைந்துள்ளது.

கருவறை மேடையில் ஸ்ரீதேவி, பூதேவி நாச்சியாருடன் வீற்றிருந்த திருக்கோலத்தில் மூலவர் காட்சி தருகின்றார். இடத்திருக்கரத்தால் அழைத்து வலது திருக்கரத்தால் அபயம் அளிக்கின்றார். தனது இடது திருக்காலை மடித்து வைத்தும், வலது திருக்காலைச் சாய்வாகத் தொங்கவிட்டும், சுகாசனத்தில் வீற்றிருக்கிறார்.

தேவாசன மேடையில் உற்வசர் நின்ற கோலத்தில் உபய நாச்சிமாரோடு எழுந்தருளியுள்ளார் மற்றும் கெளதுகர், ஸ்நபனபேரர், ஸ்ரீபலிபேரர், யாகபேரர், சிறுதொட்டிலில், சந்தான கிருஷ்ணன், ஸ்ரீ சாலிக்கிராமமூர்த்திகள் எழுந்தருளியுள்ளனர்.

இங்குள்ள உற்சவர் வியூக சுந்தர்ராஜன் என்று அழைக்கப்படுகிறார். எந்த ஒரு செயலையும் செய்யும் முன்பு, சரியாக திட்டமிட்டு வியூகம் அமைத்து செயல்பட்டால் வெற்றி பெறலாம். இவ்வாறு எதிலும் வெற்றி தரும் அழகராக இவர் திகழ்வதால், இப்பெயரில் அழைக்கப்படுகிறார். இப்பகுதியை ஆண்ட மன்னர்கள் போர் புரியச் செல்லும் முன்பு, இவரை வேண்டி வெற்றிக்காக வியூகம் அமைத்துக் கொண்டனர். இதனாலும் இப்பெயர் ஏற்பட்டதாகவும் சொல்வர்.

சூரிய நாராயணர் சந்நிதி:
உற்சவரை வணங்கிவிட்டு திரும்பி வந்த வழி வந்தால் அட்டாங்க விமானத்திற்குச் செல்லும் மாடிப்படிகள் உள்ளது. அனுமதி டிக்கெட்டை கொடுத்துவிட்டு அந்தப் படிகளை ஏறிக்கடந்தால் மேல் தளத்தில் சூரிய நாராயணர் சந்நிதி தென்படும். இங்கு உபய நாச்சியாரோடு எம்பெருமாள் சூரிய மண்டலத்தில் உள்ளது போல் நின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். இப்பெருமாள் வண்ணத்திருமேனி உடையவர்.

சூராப்திநாதர் பெருமாள் சந்நிதி:
சூரிய நாராயணரை தரிசித்துவிட்டு இன்னும் கொஞ்சம் மேலே சென்றால் மூன்றாவது தளத்தில் எம்பெருமாள் பாற்கடலில் பள்ளி கொண்டருளும் பாங்கில் கிடந்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார். திருமகளும், மண்மகளும் பாதசேவை புரிகின்றனர். இப்பெருமானின் கருவறை சுவரைச் சுற்றிலும் மேலே அட்டதிக் பாலகர்களின் உருவங்கள் அவரவர்களுடைய வாகனங்களில் எழுந்தருளியிருப்பது போன்று ஓவியமாகத் தீட்டப்பட்டுள்ளன.

விமான வெளிச்சுற்று:
இதனை ஆடி வீதி என்றழைக்கின்றனர். இதைச் சுற்றி மூன்று புறங்களிலும் மேடைத் திருச்சுற்று அமைந்துள்ளது. இதன் தெற்கு மூலையில் சக்கரத்தாழ்வாரும், வடக்கு மூலையில் யோகநரசிம்மரும் அர்த்த சித்திர மூர்த்திகளாக எழுந்தருளியுள்ளனர். ஆடி வீதியில், விமானத்தின் அதிட்டானத்தை ஒட்டி திக்பாலகர்களின் பலிபீடங்கள் காணப்படுகின்றன.

சொக்கட்டான் மண்டபம்:
தாயார் சன்னதி முன்புள்ள இம்மண்டபம் முப்பத்திரண்டு தூண்களை உடையது. இங்கு முன்பு வசந்த மண்டபம் என்று அழைக்கப்பட்ட இம் மண்டபத்தில் தற்போது சக்கரத்தழ்வார் கோயில் கொண்டுள்ளார். இம்மண்டபத்தின் வடக்குச்சுவர் ஓரமாக ஆழ்வார்கள் ஆச்சாரியர்களின் மூலவர் சந்நிதி உள்ளது. இதில் வேதாந்த தேசிகரும் மூலவராக எழுந்தருளியுள்ளார். இதையயாட்டி தென்கிழக்கு மூலையில் திருமடைப்பள்ளி உள்ளது.

தாயார் சந்நிதி:
கருவறை, அர்த்த மண்டபம், மகா மண்டபம் திருச்சுற்றுக்களோடு கூடிய தனிக்கோயில் நாச்சியார் சந்நிதியாக விளங்குகிறது. கருவறை மண்டபத்தில் மதுரவல்லித் தாயார் மூலவர், உற்வசவமூர்த்திகளாய் காட்சியளிக்கின்றனர். அபய, வரத முத்திரைகளோடு, கல்ஹார புஷ்பங்களை ஏந்தியும் நான்கு திருக்கரங்களோடு எழுந்தருளியுள்ளார். அர்த்த மண்டபமே இங்கு ஊஞ்சல் மண்டபமாக உள்ளது. கருவறை கருங்கற்களால் அமைக்கப்பட்டுள்ளது.

ஆண்டாள் சந்நிதி:
ஆடிவீதிக்கு வெளிச்சுற்றுக்கு தெற்கே தாயார் சந்நிதி உள்ளதுபோல, வடக்கே ஆண்டாள் சந்நிதி உள்ளது. இதுவும் கருவறை அர்த்த மண்டபம், மகா மண்டபம், முகப்பு மண்டபம், ஆகிவற்றோடு பிரகாசிக்கிறது. மகாமண்டபச் சுவற்றில் திருப்பாவையின் முப்பது பாசுரங்களின் கல்வெட்டுகளுடன் விளக்க ஓவியங்களும் இங்கு வரையப்பட்டு இருக்கின்றன.

மணவாள மாமுனிகள் சந்நிதி:
ஆண்டாள் சந்நிதிக்கு எதிரில் மணவாள மாமுனிகள் சந்நிதி வடக்கு நோக்கி உள்ளது. ஆதிசே­ பீடத்தில் அமர்ந்த கோலத்தில் கூப்பிய திருக்கரங்களோடு காட்சியளிக்கின்றார்.

பரமபத வாசல்:
ஆண்டாள் சந்நிதி திருமுற்றத்தில் வெளிமதிலின் வடபுறமாக பரமபதவாசல் உள்ளது. இராப்பத்து திருவிழாவில் எம்பெருமாள் இவ்வாசல் வழியாக எழுந்தருள்வார். சொர்க்க வாசல் திறப்பு திருநாள் அன்று மக்கள் கூட்டம் இங்கு அலைமோதும்.

நவக்கிரக சந்நிதி:
பொதுவாக சைவ சமய கோயில்களில் மட்டுமே நவக்கிரக சந்நிதி இருக்கும். வைணவ சமய கோயில்களில் நவகிரகங்களுக்கு பதிலாக, சக்கரத்தாழ்வார் சந்நிதி இருக்கும். வைணவ ஸ்தலமான இக்கோயிலில் நவகிரகங்களின் சன்னதி உள்ளது. ஒன்பது கிரகங்களையும் வணங்கும் விதமாக தசாவதார சுலோகம் உள்ளது. இங்குள்ள நவக்கிரகளுக்கு நெய் விளக்கு ஏற்றும் வழக்கம் உள்ளது.

இராப்பத்து மண்டபம்:
இத்திருக்கோயிலின் இராஜகோபுரத்துக்கு எதிரே சந்நிதி வீதியில் இராப்பத்து மண்டபம் அமைந்துள்ளது. மார்கழி மாதத்தில் நடைபெறும் அத்யயன உற்சவம் இம்மண்டபத்தில் வைத்துத்தான் நடைபெற்று வருகிறது. இராப்பத்து திருநாள்களில் பகவான் இம்மண்டபத்தில் தோன்றி திவ்யப் பிரபந்த பாசுரங்கள் சேவிக்கப்படுகின்றன.

ஸ்ரீ ராமஆஞ்சநேயர் சந்நிதி:
கோயிலுக்கு வெளியில் வடகிழக்கு மூலையில் இத்திருக்கோயிலைச் சார்ந்த ஸ்ரீ ராமஆஞ்சநேயர் சந்நிதி உள்ளது. இங்கு துவஜஸதம்பத்தில் ஸ்ரீ ராமர் காட்சியளிக்கின்றார். அவருக்கு கீழே ஆஞ்சிநேயஸ்வாமி அருள்பாலிக்கிறார்.

பெருமாள் தெப்பம்:
ஸ்ரீ கூடலழகர் கோவிலுக்கு வடக்கில் நகர மண்டபத்து வீதியில் உள்ளது. இதில் மாசி தெப்பத் திருவிழா பிரம்மாண்டமாக ஒவ்வொரு வருடமும் நிகழும். மாசித் தெப்பத்திருவிழா 12 நாட்களுள் 10ம் திருநாள் பெருநாள் இத்தெப்பக்குளத்துக்கு எழுந்தருளி தெப்பம் முட்டுத் தள்ளுதல் என்னும் வைபவத்தை காணலாம். 11ம் நாள் திருநாள் பெருமாள் உபநாச்சிமாருடன் எழுந்தருளி தெப்பம் சுற்றும் வைபவம் நடைபெறும்.

திருக்கோயில் நந்தவனம்:
திருப்பரங்குன்றம் செல்லும் பாதையில் இக்கோயிலுக்குரிய நந்தவனம் என்ற பூந்தோட்டம் உள்ளது. பெருமாளுக்கு நித்ய பூஜைக்கு தேவையான மாலைகள், புஷ்பங்கள், துளசி இங்கிருந்தே கொண்டு வரப்பட்டு பூசிக்கப்படுகிறது. மேலும் இத்திருக்கோயிலின் உபகோயிலாக அருள்மிகு வீரராகப் பெருமாள் கோயில் மற்றும் மங்கள ஆஞ்சநேயர் திருக்கோயில் விளங்குகின்றன.

மூன்று கோலம் :
பெருமாள் இத்தலத்தில் நின்ற, அமர்ந்த, கிடந்த என மூன்று கோலங்களிலும் காட்சி தருகிறார். மேலும் பூவராகர், லட்சுமி நரசிம்மர், நாராயணன், லட்சுமி நாராயணன், ஆழ்வார்கள், வைணவ ஆச்சாரியர்கள் ஆகியோரையும் விமானத்தில் தரிசிக்கலாம். மலைக்கோயில்களில் பவுர்ணமியன்று கிரிவலம் போல், இங்கே பக்தர்கள் விமானத்தை வலம் வருவது தனிச்சிறப்பு.

மீன் சின்னம் ஏன் ?
பாண்டிய மன்னர்களின் சின்னம் மீன். இந்த சின்னம் உருவானதற்கு இத்தலத்து பெருமாளை காரணமாவார். முற்காலத்தில் இக்கோயிலைச் சுற்றி இருபுறத்திலும் மாலையிட்டதுபோல, வைகை நதி, கிருதுமால் நதி ஆகியவை ஓடின. பாண்டிய மன்னனான சத்தியவிரதன், இத்தல பெருமாள் மீது அதீத பக்தி செலுத்தினான். ஒரு முறை அவன் கிருதுமால் நதியில் நீராடிய போது, பெருமாள் மீன் வடிவில் தோன்றி உபதேசம் செய்தார். தனக்கு அருளிய சுவாமியின் நினைவாக மீன் சின்னத்தை வைத்துக்கொண்டதாக கூறப்படுகின்றது.

தமிழ் இலக்கியங்களில்:
மதுரை காஞ்சி, பரிபாடல், சிலப்பதிகாரம் உள்ளிட்ட பண்டைய நூல்களும் இக்கோயிலின் பெருமை பேசுகின்றன. சிலப்பதிகாரம் இதனை உவணச் சேவல் உயர்த்தோன் நியமம் என்று குறிப்பிடுகிறது. இதற்கு உரை எழுதும் அரும்பதவுரை இதனை ஸ்ரீ இருந்த வளமுடையார் என்று தெரிவிக்கிறது. அடியார்க்கு நல்லார் தம் சிலப்பதிகார உரையில் இக்கோயிலுடைய பெருமாளை அந்தர வானத்து எம்பெருமான் எனக் குறிப்பிடுகிறார்.

கல்வெட்டுக்கள்:
கூடலழகர் கோயிலுக்குரிய கல்வெட்டுக்களாக இன்று இக்கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் ஐந்து கி.பி.1550க்குப் பிறகு கொறிக்கப்பட்ட விசயநகரவேந்தர், மதுரை நாயக்கர் காலங்களைச் சார்ந்தவையாகும். இவற்றில் முதலிரு கல்வெட்டுகள் கி.பி.1551, 1555-56 ஆம் ஆண்டுகளுக்குரிய விசய நகர மன்னன் சதாசிவராயர் (கி.பி.1542 -70) காலத்தவையாகும். பிற கல்வெட்டுகளில் ஆண்டுக்குறிப்பு காணப்படவில்லை.

அவற்றின் எழுத்தமைப்பைக் கொண்டு அவற்றில் இரு கல்வெட்டுகளை கி.பி. 16ஆம் நூற்றாண்டுக்குரியவை என்றும், எஞ்சிய மற்றொன்றை கி.பி.17,18 ஆம் நூற்றாண்டைச் சார்ந்தவை என்றும் கூறலாம். இக்கல்வெட்டுகள் இக்கோயிலுக்குச் செய்யப்பட்ட கட்டிடத் திருப்பணிகள், வழிபாட்டிற்கு அளிக்கப்பட்ட தானங்கள் குறித்து மட்டுமே தெரிவிக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

கிருதுமாலை நதி:
மதுரையில் வைகை ஆறு இன்று எவ்வாறு உள்ளது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அப்படியிருக்க முன் காலத்தில் வற்றாத வைகையாறு இருபிரிவாகப் பிரிந்து மதுரை மாநகருக்கு மாலையிட்டதுபோல் பாய்ந்து சென்றதாக அறியப்படுகிறது.

அவற்றில் ஒரு பிரிவான கிருதுமாலை நதி கூடலழகரின் திருக்கோயிலுக்கு மிக அருகில் தென் பக்கத்தில் ஓடியுள்ளது. இந்நதி வைகையிலும் பழமையும், புனிதமும் பெற்ற புண்ணிய நதிகளுள் ஒன்றாகும். ஆனால் இன்றைய தலைமுறைக்கு கிருதுமாலை நதியாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை மாறாக அது நகரின் ஒரு பெரும் கழிவு நீராக (சாக்கடை) கடக்கின்றது.

மதுரவள்ளி யானை:
கூடலழகர் பெருமாள் கோவில் என்றாலே மதுர வள்ளி யானைதான் எல்லோர் நினைவுக்கும் வரும். இக்கோவிலில் கடந்த 1977ம் ஆண்டு முதல் மதுரவள்ளி என்ற யானை கோவில் சேவை பணியில் இருந்தது. இக்கோவில் திருவிழாக்களின் போதும், சுவாமி புறப்பாடு, வீதி உலா, தேரோட்டம் போன்ற நிகழ்ச்சிகளின்போதும் மதுரவள்ளி யானை முகபடாம் அணிந்து செல்லும். இதற்கென ரசிகர்கள் கூட்டமே தனி.

மதுரவள்ளிக்கு 20 ஆண்டுகளாக காலில் புண் ஏற்பட்டு நீண்ட நாட்களுக்கு பிறகு குணமான நிலையில், மீண்டும் காலில் புண் ஏற்பட்டு நடக்க முடியாமல் படுத்த படுக்கையாக இருந்தது. இந்நிலையில் கடந்த 2016 ஆம் ஆண்டு மே 26ந் தேதி மாலை சிகிச்சை பலனின்றி மதுரவள்ளி மரணமடைந்தது. கோவிலில் வைக்கப்பட்டு இருந்த மதுரவள்ளிக்கு கோவில் ஊழியர்கள், பக்தர்கள் மலர் வைத்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பின்னர் மதுரை டி.பி.கே. ரோட்டில் உள்ள திருக்கோவிலுக்கு சொந்தமான நந்தவனத்தில் யானை உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்நிலையில் மதுரை ஜெயம் டெக்கரேசன் சார்பில் கொலுவிற்காக வைக்கப்பட்ட பொம்மை யானை இப்போது நிரந்தரமாக இங்கே நின்று கொண்டிருக்கின்றது.

அன்னதானம்:
கோவிலில் ஒவ்வொரு நாளும் அன்னதானம் சிறப்பாக நடைபெறுகின்றது. வாரத்தில் ஆறு நாட்கள் 100 பேருக்கு அன்னதானம் நண்பகல் 12 மணிக்குவழங்கப்படுகின்றது. சனிக்கிழமை மட்டும் 200 பேருக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு நாளும், இரு காய்கறிகள், சாம்பார், ரசம், மோர், ஊறுகாய் ஆகியவையும், சனிக்கிழமை மட்டும் அப்பளம், பாயாசம் மற்றும் வடையுடன் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகின்றது.

ஏகாதசி போன்ற முக்கிய நாட்களில் 500 பக்தர்களுக்கும், அழகர் ஆற்றில் இறங்கும் பொழுது 800 பக்தர்களுக்கும், புரட்டாசி சனிக்கிழமை அன்று 1,200 பக்தர்களுக்கும் அன்னதானம் வழங்கப்படுகின்றது. சனிக்கிழமை அன்று மட்டும் அன்னதானத்திற்கு டோக்கன் வழங்கப்படும்.

அன்னதானம் வழங்க பக்தர்கள் விரும்பினால் ஒரு நாள் கட்டணமாக ரூ.2,500 செலுத்த வேண்டும். இதுவே சனிக்கிழமை அன்னதானம் என்றால் ரூ.8,500 கட்டணம் ஆகும். இதுவே ஒரு முறை கட்டணமாக ரூ.35,000 செலுத்தினால் அந்த தொகை வங்கியில் டெப்பாசிட்டாக போடப்பட்டு அதிலிருந்து பெறப்படும் வட்டியைக் கொண்டு ஆண்டுதோறும் பக்தர் கேட்டுக் கொண்ட நாளில் அன்னதானம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படும்.

தினமும் 6 கால பூஜை:
மதுரை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. காலை கூடலழகர் கோவிலில் தினமும் 6 கால பூஜை நடைபெறுகிறது. காலை 6 மணிக்கு விஸ்வரூப பூஜை. 8 மணிக்கு கால சந்தி பூஜை. 10 மணிக்கு சுற்று கோவில் பூஜை. 12 மணிக்கு உச்சிகால பூஜை. மாலை 5 மணிக்கு சாயரட்சை பூஜை. இரவு 7 மணிக்கு சுற்று கோவில் பூஜை. இரவு 9 மணிக்கு அர்த்தசாம பூஜை.

பக்தர்கள் தங்களது சொந்த செலவில் ஒரு நாள் பூஜை செய்ய விரும்பினால் ஒரு முறை கட்டணமாக ரூ.10,000 செலுத்தினால் போதும், ஒவ்வொரு ஆண்டும் அவர் குறிப்பிட்ட ஓர் நாளில் ஆறுகால பூஜை அவர் பெயரில் நடத்தப்படும். அன்றைய தினம் முதல்கால பூஜைக்கு உபயதாரர் அழைக்கப்பட்டு அவருக்கு கோயில் மரியாதை செய்யப்படும். இது தலைமுறை தலைமுறையாக செய்யப்படும்.

முக்கிய திருவிழாக்கள்:
சித்திரை மாதம் தமிழ் வருட சிறப்பு திருமஞ்சனம் மற்றும் பெருமாள் புறப்பாடு. வைகாசி மாதம் 14 நாட்கள் தேர்த் திருவிழா. 9வது திருநாளன்று அனு­ நட்சத்திரத்தில் தேரோட்டம் நடைபெறும்.

ஆனி மாதம்:
கருட சேவை, சயனத் திருவிழா, முப்பழ விழா மற்றும் எண்ணை காப்பு விழா. இதேபோல் ஆடி மாதம் அன்று ஆடிப்பூரத் திருவிழா 10 நாட்கள் கோலாகலமாக நடைபெறும். ஆவணி மாதம் அன்று திருப்பவித்திர திருவிழா மற்றும் உறியடித்திருவிழா கொண்டாடப்படும். புரட்டாசி மாதத்தில் நவராத்திரி விழா 9 நாட்களும், பவுர்ணமி மாதமன்று தாயாருக்கு பாலாபிஷேகம், 5 கருட சேவை, 4 மாசி வீதி புறப்பாடு மற்றும் விஜயதசமி அன்று அம்பு போடுதல் விழாக்கள் பாரம் பரிய முறைப்படி நடைபெறும்.

அதேபோல் ஐப்பசி மாதத்தில் தீபாவளி அன்று மூலவருக்கு தைலக் காப்பு மற்றும் மணவாள மாமுனிகள் திருநட்சத்திர திருவிழா 10 நாட்களும், கார்த்திகை மாதத்தில் திருக்கார்த்திகை மற்றும் திருமங்கை ஆழ்வார் திரு நட்சத்திரத்தில் திருவிழா 10 நாட்கள் நடைபெறும்.

மார்கழி மாதத்தில் திருப்பல்லாண்டு தொடக்கம், பகல் பத்து, வைகுண்ட ஏகாதசி, ராப்பத்து வைபவங்கள் நடைபெறும். தை மாதத்தில் கனுப்பானரி வேட்டை (அனுப்பானடிக்கு எழுந்தருளல்) மற்றும் தை மாதம் முதல் தேதியில் தாயார் பெருமாள் மாலை மாற்றுதல் போன்ற வைபவங்களும், மாசியில் 12 நாட்கள் தெப்பத்திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும். பங்குனியில் பங்குனி உத்திரத்தன்று மதுரவல்லித் தாயார் திருக்கல்யாணம். வசந்த உற்சவம் 5 நாட்கள் நடைபெறும். சுக்ல பட்ச துவாதசி அன்று கஜேந்திர மோட்சம், கோவர்த்தனகிரி புறப்பாடு நடைபெறும்.

புரட்டாசி சனி வார விழா:
ஆண்டுதோறும் புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் கூடலழகர் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதும். புரட்டாசி சனிக்கிழமை கூடலழகரை தரிசிக்க வரும் பக்தர்கள் அவருக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுவார்கள்.

பிரார்த்தனை:
திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியறிவிற்காக பிரார்த்தனை செய்கிறார்கள். இக்கோவிலை 1 மண்டலம் அதாவது 48 நாட்கள் சுற்றி வந்து வேண்டிக் கொண்டால் நினைத்த காரியம் கைகூடும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கையாக இன்றளவும் உள்ளது.

நேர்த்திக்கடன்:
இங்கு தாயாருக்கு பால்குடம் எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

கோவில் தூய்மை:
கோவில் சார்பில் இரு பணியாளர்களும், டிவிஎஸ் நிறுவனம் சார்பில் ஆறு பணியாளர்கள் என மொத்தம் 8 பணியாளர்கள் இணைந்து ஆலயத்தை தூய்மை செய்கின்றனர். ஆதலால் ஆலயம் எந்த நேரத்திலும் தூய்மையாக உள்ளது. மேலும் பிளாஸ்டிக் பைகளுக்கு முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கோயில் வளாகத்தில் ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

குடிநீர்:
ஆலயத்திற்குள் வரும் பக்தர்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கோவிலின் உட்பகுதியில் இரு இடங்களில் சுத்தீகரிக்கப்பட்ட குடிநீர் வைக்கப்பட்டுள்ளது. இதில் 24 மணி நேரமும் தண்ணீர் வரும் நிலையில் கண்காணிக்கப்படுகின்றது.

அணையா விளக்கு:
கூடலழகர் கோவிலில் மொத்தம் ஆறு அணையா விளக்கு உள்ளது.

பாதுகாப்பு:
கோவிலில் காவல்துறையின் பாதுபாப்பு 8 மணி நேர அடிப்படையில் 24 மணி நேரமும் காவலர்கள் பணியில் இருப்பார்கள். இதனால் இங்கு வரும் பக்தர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படுகின்றது. இக்கோவிலின் கும்பாபிசேக விழா அடுத்த ஆண்டு 2020 நடைபெற வாய்ப்புள்ளதாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடைதிறப்பு :
காலை 5.30 மணி முதல் பகல் 12.00 மணி வரை, மாலை 4.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை (சனிக்கிழமைகளில் பிற்பகல் 12.30 – இரவு 10.00 மணி வரை சேவை உண்டு). ஆலய தொலைபேசி எண்: 0452 2338542, 0452 2334015.

குறிப்பு:
இக்கட்டுரையின் பல தகவல்கள் கலையிலங்கு மொழியாளர், முனைவர் பேராசிரியர் இரா.அரங்கராஜன் ஐயா எழுதிய அருள்மிகு கூடலழகர் திருக்கோயில் தல புராணம் மற்றும் தல வரலாற்று புத்தகத்திலிருந்து பெறப்பட்டதாகும். அடுத்த தலைமுறைக்கு கொண்டு சேர்க்கும் அரியப் பணியை மேற்கொண்ட ஐயா அவர்களுக்கும், முழு ஒத்துழைப்பு வழங்கிய கோவில் நிர்வாக குழுவினருக்கும் எங்களது நெஞ்சார்ந்த நன்றிகள்.

Tags
Show More

Hello Madurai

Hello Maddrai Magazine Hello Madurai App Mob: 9566531237, 8754055377 Email: hellomadurai777@gmail.com

Related Articles

Leave a Reply

Your email address will not be published.

fifteen + eleven =

Close