ஆன்மீகம்இந்துகட்டுரைகள்வரலாறு
Trending

மதுரை மாடக்குளம் ஈடாடி அய்யனார் கோவில் வரலாறு

பழமையைக் கொண்டாடும் மா மதுரை அன்றைக்கு மாடக்குளம் தாலுகா என்ற நிர்வாகத்தின் கீழ் இருந்துள்ளது என்பது அனைவருக்கும் ஆச்சரியம்தான். மன்னராட்சி முடிந்து ஆங்கிலேயர் காலத்தில் நிர்வாக வசதிக்காக ஒவ்வொரு பகுதிகளும் தாலுகாக்களாக பிரிக்கப்பட்ட பொழுது உதயமானதுதான் மாடக்குளம் தாலுகா, மாடக்குளத்தின் நிர்வாகத்திற்கு கீழ் அமைந்த பகுதியாக தற்போதைய மதுரை நகரம் இருந்திருக்கின்றது. இதை நிரூபிக்கும் ஆவணங்கள் உள்ளது.

இங்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய முதுமக்கள் தாழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இந்தக் கண்மாய் சிறியதாகவும், பின்னர் மிகப் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. மதுரையின் குடிநீருக்கு ஆதாரமாக விளங்கும் கண்மாய்களில் மிக முக்கியத்துவம் நிறைந்த மாடக்குளம் கண்மாயைக் கூறாமல், அங்கு வீரமாய் வீற்றிருக்கும் ஈடாடி அய்யனாரைப் பற்றி தனித்துக் குறிப்பிட முடியாது. ஆம்… மாடக்குளம் எல்லையைக் காத்து நிற்கும் ஈடாடி அய்யனார் வரலாறு குறித்து அலசிப் பார்க்க ஆசைப்பட்டு அங்கு சென்றோம். நீங்களும் எங்களுடன் வர விரும்பினால் தொடர்ந்து வாசியுங்கள்.. உங்கள் விரல் பிடித்துக் கூட்டிச் செல்வது எங்கள் பொறுப்பு…

அதிகாலைவேளை… மதுரை பழங்காநத்தம் வழியாக, மாடக்குளம் பிரபாகரன் வீட்டிற்குச் சென்றோம். வரவேற்பையும் தாண்டி அவரது குடும்பத்தினர் அன்பில் எங்களை வாரி அணைத்துக் கொண்டனர். சிறிது நேர உரையாடலுக்குப் பின், வாங்க ஈடாடி அய்யனார் கோவிலுக்குப் போகலாம் என்று நம்மை அழைத்துச் சென்றார் மாடக்குளம் பிரபாகரன். அவரது இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் ஈடாடி அய்யனார் கோவிலை அடைந் தோம். திறந்த கண்கள் இமைக்க மறந்தது.

வெளியே நின்ற காவல் தெய்வங்கள் நம்மை பிரம்மிப்பில் ஆழ்த்தியது. மாபெரும் மூன்று குதிரைகளில் ஈடாடி அய்யனாரும், பெரிய கருப்ப சாமியும் சின்னக் கருப்பசாமியும் வீற்றிருக்கும் கம்பீரத் தோற்றம் இமை கூப்பி வணங்க வைத்தது. மூன்று குதிரையும் வானத்திலிருந்து தாவிக் குதித்த தோற்றம் உண்மை என்று நம் கண்களை நம்ப வைத்துக் கொண்டிருந்தது. குதிரை மட்டுமா? இரு வெள்ளை யானைகளில் சங்கிலி கருப்பண், சோனைச்சாமி கதாயுதத்துடன் நம் கண்களைப் பந்தாடியது. பிறகு என்ன? இங்கிருந்தும் இத்தனை நாள் ஈடாடி அய்யனாரை பார்க்கவில்லையே என்ற குறை தீர்ந்து, வழிபட்டு வரலாற்றைக் கேட்க ஆரம்பித்தோம்.


நுழைவு வாயில் கோபுரம்…

மாடக்குளம் என்ற தனது ஊரின் பெயரை தன்னுடைய பெயருக்கு முன்னால் வைத்த மாடக்குளம் பிரபாகரன் (55) கம்பீரமாக கூற ஆரம்பித்தார்… மாடக்குளத்துக்கு மட்டுமல்ல மதுரைக்கே காவல் தெய்வமாக விளங்குபவர் எங்கள் ஈடாடி அய்யனார். சுமார் 500 ஆண்டுகளுக்கு முந்தைய இவருடைய வரலாறு குறித்து , புலவர் பட்டம் பெற்ற தமிழாசிரியரும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். திரைப்படங்களில் சண்டை பயிற்சியாளராக நடித்தவருமான எங்கள் மண்ணின் மைந்தர், நினைவில் வாழும் மா.க.காமாட்சி நாதன் எழுதிய புத்தகம் ஒன்றில் அருள்மிகு ஈடாடி அய்யனார் பெயர் குறித்து எழுதியுள்ள வரலாறு.

பெயர் வரலாறு:
சூரபத்மனுக்கு அஞ்சிய இந்திரன் தன் மனைவியுடன் வந்து சீர்காழியில் தவம் புரிந்து, கயிலைமலை நோக்கித் தேவர்களுடன் செல்லும் பொழுது தனது தேவியாகிய இந்திராணியை அய்யன் திருவருள் காப்பதாக, என்று வேண்டிக்கொண்டு தனியாக விட்டுச் சென்றான். அப்பொழுது தனியாக தவம் செய்து கொண்டிருந்த இந்திராணியை சூரபத்மனின் தங்கை அசமுகி பார்த்துவிட்டு, அண்ணனிடம் பிடித்துக் கொடுக்க எண்ணி அருகில் நெருங்கினாள். இந்திராணி பயத்தில் நடுங்கி அலறி ஐயனைத் (ஐய்யப்பனை) துதித்தாள்.

அது கேட்ட ஐயன் திருக்கோவில் காவலரும் ஏவலருமான வீரமாகாளர் விரைந்து வந்து அசமுகியிடம் எடுத்துக் கூறி இந்திராணியை விட்டுச் செல்லும்படி கூறினர். ஆனால் அவளோ அருகிலிருந்த துர்முகியிடம் இந்திராணியை பிடித்துக் கொள்ளும் படி செய்துவிட்டு, வீரமாகாளருடன் போர் தொடுத்தாள். அங்கிருந்த பெரிய மலைகளையும், மரங்களையும் வேரோடுப் பிடுங்கி எறிந்தாள், அதனை வீரமாகாளர் தூளாக்கியதோடு துன்முகியின் வலது கரத்தை துண்டாக்கி, சிரங்களில் அறைந்து இருவரையும் விரட்டினார். அதன் பின்னர் இந்திராணி இந்திரனுடன் இனிதாக வாழ்ந்தனர். அதாவது அரிஹர புத்திரனான ஐயப்பனுடைய ஆணையால் வந்து அசமுகியை வென்று துன்முகியின் கரத்தினை வெட்டி, இந்திராணியை மீட்டு, இந்திரனுடன் ஒப்படைத்து காத்தருளிய ஐயனை ஈடாடி என உலகம் வழங்கியதாகக் கூறப்படுகிறது (ஈடு+ ஆள்+தி = ஈடாடி).

எனவே இந்த ஈடாடி அய்யனார் அடைக்கலம் என்று வரும் பக்தர்களுக்கு அவர்கள் மீது அன்பு செலுத்தி காத்தருள்வார். இந்திராணியை மீட்டுக் கொடுத்ததன் காரணமாக ஈடாடி அய்யனாருக்கு இந்திரன் தனது மகள்களான பூரணா, புஷ்கலை ஆகிய இருவரையும் மணம் முடித்து வைத்தார். இங்கு இவ்விரு தேவியர்களுடன் அருள்மிகு ஈடாடி அய்யனார் காட்சி தருகின்றார்.


பூரணா தேவி, புஷ்கலா தேவியுடன் ஈடாடி அய்யனார்

பிரபாகரன் தொடர்ந்து கூறுகையில், முன்பு கண்மாயில் நீர் வளம் நிறைந்து இருக்கும். கண்மாய்க் கரை மீது அமைந்திருக்கும் அருள்மிகு ஈடாடி அய்யனார் கோவிலின் நேர் எதிரே ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலத்தில் விவசாயம் செழிப்பாக நடக்கும். மதுரை நகரின் பிரதான நகரப் பகுதிகளாக விளங்கும் பழங்காநத்தம்,பொன்மேனி, எஸ்.எஸ்.காலனி, எல்லீஸ் நகர் , டி.வி.எஸ்.நகர், மற்றும் ஜெய்ஹிந்துபுரம் ஆகியவை இக்கண்மாய்க்கு உட்பட்ட பாசனப் பகுதியாகும். இன்றைக்கு அதில் நூறில் ஒரு பங்கு கூட விவசாயம் நடப்பதில்லை.

அன்றைக்கு விவசாயம் செழித்த பூமியாக இருந்தாலும், முன்னோர்களால் அருமையாக கட்டப்பட்ட இந்த ஆலயம் பராமரிப்பின்றி சுற்றிலும் புதர்மண்டிக் கிடந்தது. குதிரை, யானை ஆகிய சிலைகளிலிருந்து செங்கல் செங்கலாக உடைந்து இருந்தது. சுற்றியுள்ள மதில்கள் எல்லாம் சிதைந்து கிடந்தது. அப்ப… நாங்கள் சிறுவர்களாக… இங்கதான் விளையாடுவோம் . கோவிலுக்குள் தனியாக வருவதற்கு பயமாக இருக்கும்.

முதன் முதலாக புதுப்பிப்பு:
1981ஆம் ஆண்டு மாடக்குளம் பழங்காநத்தம் ஊர் பொது மக்கள் ஒன்று சேர்ந்து ஈடாடி அய்யனாரின் குதிரை சிலையை மட்டும் முதன் முதலாக புணரமைத்தனர். அந்தச் சிலையை முன்னாள் தமிழக வேளாண்மைத்துறை அமைச்சர் டாக்டர்.கா.காளிமுத்து திறப்புவிழா செய்து வைத்தார்.  அதன் பிறகு ஊர் பெரியவர்கள், கோயில் தர்மகர்த்தா, கிராமத்தின் மரபுவழி மரியாதைகாரர்கள், ஈடாடி அய்யனார் திருப்பணிக்குழுவினர்கள் மற்றும் மாடக்குளம் பழங்காநத்தம் கிராமப் பொதுமக்கள் என அனைவரும் கூடிப் பேசி ஒரு மனதுடன் ஈடாடி அய்யனார் கோவிலை முழுமையாகப் புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டன.

கோவிலின் உள் கட்டமைப்பு தோற்றம்…

ஒரு கோயிலை புணரமைத்தல் என்பது எளிதான விசயம் அல்ல. ஆதலால் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பினை எடுத்துக் கொண்டு இரவு பகலாக தூக்கமின்றி பொதுமக்களிடம் வசூல் செய்து கொஞ்சம் கொஞ்சமாக புதுப்பிக்கும் பணியை செய்தோம். 1999 ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த திருப்பணிகçe சுமார் ரூ.20 லட்சம் செலவில் பல போராட்டங்களுக்குப் பிறகு 2007 ஆம் ஆண்டு நிறைவடைந்து. நான் திருப்பணிக் குழுவின் பொருளாளராக இருந்தது, என் வாழ்நாளில் நான் செய்த பாக்கியம்.

மாடக்குளம், பழங்காநத்தம் மற்றும் பொதுமக்கள் இணைந்து மா பெரும் கும்பாபிசேக விழா சிறப்பாக நடத்தப்பட்டது. கும்பாபிசேக விழாவை முன்னிட்டு அன்றைய தினம் 5000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. அன்னதானத்திற்கான பொறுப்பினை நான் ஏற்றுது மன நிறைவைத் தருகிறது. இன்றைக்கு இந்த கோவிலில் நித்தமும் நடை திறக்கப்பட்டு பூஜைகள் நிகழ்வது என்றால் அது இப்பகுதியில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் முக்கிய பங்குண்டு.


ஈடாடி அய்யனாருக்கு தீபாராதனை

இக் கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்குகிறது. அருள்மிகு ஈடாடி அய்யனார் கோவில் அருள்மிகு கருப்பண சாமி கோவில் என்று இரண்டு தனித்தனி நிர்வாகங்களால் நிர்வகிக்கப்படுகின்றது . அருள்மிகு ஈடாடி அய்யனார் கோவில் நிர்வாகத்தை வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தொன்று தொட்டு பாரம்பரியமாக அவர்கள் பொறுப்பின் கீழ் இதனைக் கவனித்து வருகின்றனர். தற்போது இருளாண்டி வேளாளர் மற்றும் அழகர்சாமி வேளாளர் வாரிசுகள் பரம் பரை பூசாரிகளாக உள்ளனர். அதில் ராஜேந்திர வேளாளர் பரம்பரை அறங்காவலராக உள்ளார்.

மூலவரான ஈடாடி அய்யனார் பூரணா தேவி, புஷ்கலை தேவி எனும் இரு தேவியர்களுடன் காட்சி அளிக்கின்றார். விநாயகர், முருகன் கடவுளுக்கு தனி சந்நிதி உள்ளது. முத்துக்கருப்பணசாமி, வேடன் வேடச்சி, கன்னிமார் சாமி, சங்கிலிக் கருப்பு ஆகிய தெய்வங்களும் உள்ளன.


வெள்ளை யானையில் சங்கிலிக் கருப்பு…

காவல் தெய்வங்களான பெரிய கருப்பணசாமி, சின்ன கருப்பணசாமி, பேச்சியம்மன், சோனைச்சாமி, இவர்களுக்கு தனி நிர்வாகம் மற்றும் தனி பூசாரிகள் உள்ளனர். நீலமேகம் பிள்ளை வகையறாவைச் சேர்ந்தவர்கள் பரம்பரையாக பூசாரிகளாக உள்ளனர். இந்தக் கோவிலில் பக்தர்களின் வேண்டுதல்கள் நல்ல முறையில் நிறைவேறும் மற்றும் தங்களது குலதெய்வம் எது என்று தெரியாதவர்கள் அருள்மிகு ஈடாடி அய்யனாரை தங்களது குலதெய்வத்திற்கு ஈடாக நினைத்து வணங்கி வழிபடலாம் என்பது முன்னோர் வாக்கு.


பெரிய கருப்பண, சின்னக் கருப்பண சுவாமி…

நுழைவு வாயில் கோபுரம்:
எனது தாத்தா தங்கையாப் பிள்ளை என்ற நாகு பிள்ளை ஈடாடி அய்யனார் கோவிலுக்கு ராஜ கோபுரம் கட்டித் தருவதாக வாக்களித்தார். ஆனால் அந்த வாக்கினை அவரால் நிறைவேற்ற முடியவில்லை. அந்த சமயத்தில் எக்கச்சக்கமான நிலங்கள் இருந்தும் எங்கள் குடும்பம் வறுமையில் வாடியது. அப்பொழுது என் அப்பாவிடம் ராஜகோபுரம் கட்டினால், குறைகள் தீர்ந்து குடும்பம் செழிக்கும் என்று பலரும் கூறுவதுண்டு. ஆனால் அன்றைய நிலையில் எனது தந்தையால் அதனைச் செய்ய முடியவில்லை.

எனக்கு 20 வயதிருக்கும் என்னுடைய அப்பாவிடமும் அம்மாவிடம் நீங்கள் ராஜகோபுரத்தை எடுத்துக் கட்டுங்கள் என்று புலவர் மா.க.காமாட்சி நாதன் (எம்.ஜிஆர் திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர்) கூற, எங்களால் எப்படி முடியும் என்று என் தந்தையும் தாயும் அவரிடம் சொன்னார்கள், அவர்கள் அருகில் நின்று கேட்டுக்கொண்டிருந்த நான், கோபுரத்தை நான் கட்டுவேன், என்னால் கட்ட முடியும் என்று அப்பொழுது கூறினேன். முடியும் என்ற வார்த்தை உன் வாயில் இருந்து வந்துவிட்டது அவசியம் நீதான் கட்டி முடிப்பாய் என்று புலவர் என்னை ஆசிர்வாதம் செய்தார் .


பால் அபிஷேகம்…

அன்று 20 வயதில் கூறியது 40 வயதில் நிறைவேறியது. என்னால் என் தாத்தா கூறியதுபோல், ராஜகோபுரம் கட்ட முடியாவிட்டாலும் அதற்கு ஈடாக ஈடாடி அய்யனாருக்கு நுழைவு வாயில் கோபுரம் ஒன்றினை அழகுடன் கட்டிக் கொடுத்துள்ளேன். இந்த நுழைவு வாயிலில் அஷ்ட லெட்சுமி, அய்யனார், பெரிய கருப்பு, சின்னக் கருப்பு மற்றும் ஐய்யப்பன் சுவாமி உருவச் சிலைகள் உள்ளது.

இப்பொழுதும் நுழைவு கோபுரம் கட்டியதை நினைத்தால் கனவு போல உள்ளது. எனது தாத்தாவின் வாக்கு நிறைவேற்றப்பட்டதை நினைத்து மகிழ்ச்சி அடைகின்றேன். இன்று என்னால் நுழைவு வாயில் கோபுரம் கட்டப்பட்டதுபோல், நாளை என் மகன் அல்லது பேரன் வாயிலாக ராஜகோபுரம் கட்டும் பலத்தை ஈடாடி அய்யனார் தந்தருள நாளும் வேண்டுகின்றேன்.

ஊர் பொங்கல் விழா:
ஈடாடி அய்யனாருக்கு ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் ஊர் பொங்கல் விழா நடத்தப்படுவது வழக்கம். இந்தத் திருவிழாவினைக் காண நிச்சயம் ஆயிரம் கண் வேண்டும். அன்றைக்கு இரவே கிடையாது என்று சொல்லலாம். இரவு 12 மணிக்கு ஆட்டம், பாட்டத்துடன், கோவிலுக்குச் சென்று, மொட்டையிட்டு, காவல் தெய்வமான சோனை சாமிக்கு கிடா வெட்டி, பொங்கல் வைத்து 3 மணி அளவில் மீண்டும் வீடு திரும்புவோம்.

சிலர் விடியும் வரை அங்கேயேத் தங்கிவிடுவதும் உண்டு. அன்றைக்கு மாடக்குளம், பழங்காநத்தம் மற்றும் இங்கிருந்து இடம் பெயர்ந்துபோனவர்கள் என அனைவரும் குடும்பத்துடன் ஒன்று கூடி சொந்தங்களுடன் ஊர் பொங்கல் விழாவினைக் கொண்டாடுவது வழக்கம். இந்த திருவிழா முடிந்ததும் அருகில் உள்ள பசுமலையில் உள்ள கபாலீஸ்வரி அம்மனுக்கான விழா துவங்கும். இந்த விழாவும் இங்கு வெகு சிறப்பாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகிறது.

மாசி சிவன் ராத்திரி வழிபாடு:
ஈடாடி அய்யனாரை குல தெய்வமாக வழிபடுபவர்கள் மதுரையில் பல்வேறு இடங்களில் உள்ளனர். அவர்கள் அனைவரும் ஒன்று கூடி கொண்டாடும் விழாவானது மாசி சிவன் ராத்திரி ஆகும். பல நூற்றாண்டுகளுக்கு முன்பு வைகை ஆற்றில் அவர்களுடைய பெட்டியை கழுவிக் கொண்டிருந்தபோது அது அடித்து இழுத்துச் செல்லப்பட்டு இறுதியாக மாடக்குளம் கண்மாய்க்கு வந்து சேர்ந்துள்ளது. அப்படி வந்தப் பெட்டிக்குள் மணி, தீபக்கால் உள்ளிட்ட பூஜைப் பொருட்கள் இருந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் அணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டி கிராமப் பகுதியிலிருந்து இந்தப் பெட்டி மிதந்து வந்ததாக தெரியவந்து, அதன்பிறகு இச்சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் கோயில் எழுப்பி இறை வழிபாடு செய்து வருகின்றதாக ஒரு வரலாற்றுத் தகவல் கூறப்படுகிறது. அதன்படி இன்றைக்கும் மாசி சிவன் ராத்திரி அன்று ணைப்பட்டி, சிறுநாயக்கன்பட்டியிலிருந்து கூட்டம் கூட்டமாக சுமார் 50 மாட்டு வண்டிகளில் குடும்பத்துடன் வந்து தங்களது குல தெய்வத்தை வழிபடுவது வழக்கம். அன்றைக்கு ஒரு நாள் மட்டும் கோவிலின் சாவி அவர்களிடம் ஒப்படைக்கப் படும். அந்த வழக்கம் இன்றும் உள்ளது.

அந்த நாளுக்காக அவர்கள் மட்டுமல்ல, நாங்களும் காத்திருப்போம். ஏனெனில் அன்றைக்கு ஈடாடி அய்யனார் கோவில் திருவிழாக் கோலாகலத்தில் ஜொலிக்கும். அணைப்பட்டி பகுதியிலிருந்து வரும் பக்தர்கள் அதிகாலையில் ஒன்று கூடி நிற்கும் காட்சி அழகின் உச்சம். அன்றைய திருவிழாவினை சிறப்பாக முடித்துவிட்டு மறு நாள் கோவில் சாவியை தர்மகர்தாவிடம் கொடுத்துவிட்டுச் சென்றுவிடுவார்கள். மதுரை மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஈடாடி அய்யனாரை வணங்க பொது மக்கள் வந்து செல்கின்றனர் என்று 500 ஆண்டுக்கு முன் தோன்றிய ஈடாடி அய்யனார் வரலாற்றைக் கூறி முடித்தார் மாடக்குளம் பிரபாகரன்.


கன்னிமார் தேவிகளை வணங்கும் காட்சி…

எல்லாவற்றையும் நாம் கேட்டுவிட்டு, மீண்டும் ஒரு முறை எல்லையில் அமைந்துள்ள ஈடாடி அய்யனாரை பார்த்து தலை வணங்கி, ஒய்யாரமாக குதிரையின் மீது வீற்றிருந்த படி சாட்டையை சுழற்றும் ஈடாடி அய்யனாரும், அருவா தாங்கிய பெரிய, சிறிய கருப்பண சாமியும், கதாயுதத்துடன் வெள்ளை யானை மீது அமர்ந்திருக்கும் காவல் தெய்வத்தையும் வச்ச கண்ணு வாங்காமல் விழி பிதுங்கப் பார்த்துவிட்டு மாடக்குளம் கண்மாய் கரை வழியாக நாகமலைப் புதுக்கோட்டைக்குத் திரும்பினோம்.

மாடக்குளம் பிரபாகரன் கூறிய அத்தனையும் பசுமையாக நினைவுக்கு வந்து… வந்து சென்றது… ஒன்றைத் தவிர. அதுவேறு ஒன்றுமில்லை… கண்மாய் கரை இருக்கு… தண்ணீர்… தண்ணீர்… எங்கே…? என்று கரை முழுவதும் தேடியபடி வந்தோம்.கரை நன்கு பராமரிக்கப்பட்டு, கண்மாய்க்குள் கருவேலம் மரம் ஒன்று கூட இல்லாமல் இருந்ததைப் பார்க்கையில் மழைக்காக இயற்கை அன்னை தன் மடியை ஏந்தியது போல் காட்சி அளித்தது. இந்தாண்டு ஈடற்ற மழை கொடுத்து மாடக்குளம் கண்மாய் நிறைய ஈடாடி அய்யனாரை நாம் அனைவரும் வணங்குவோம் !!!

 

எழுத்து: மு.இரமேஷ்குமார்
நிழற்படங்கள்: இரா.குணா அமுதன்
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.07.2017

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Leave a Reply

Related Articles

Back to top button
error: Copy Right Hello Madurai !!
Close
Open chat