கட்டுரைகள்
Trending

மதுரை முழுவதும்… மாடித் தோட்டம்…

36 வயதினிலே படத்தைப் பார்த்துவிட்டு தம் வீட்டு மொட்டை மாடிகளில் மாடித் தோட்டம் அமைக்கும் எண்ணம் அதிகரித்திருப்பது என்னவோ உண்மைதான். ஆனால் எண்ணம் மட்டும் போதாது, இன்றைக்கு ஒவ்வொரு வீடுகளிலும் மொட்டை மாடி உள்ளது. அதில் ஈரத்துணிகள், வடகம், அப்பளம் ஆகியவை காய வைப்பதற்குத்தானா ? பெரும்பாலான நேரங்களில் வானம் பார்த்து வெற்றாகவே காய்கிறது. இது மிகப் பெரிய இழப்பு. நமக்கு கிடைக்கும் சிறு சிறு இடங்களில் கூட சின்னச் சின்ன செடிகள் வளர்த்து இல்லத்திற்குத் தேவையான காய்கறிகளை நாமே தயார் செய்யலாம் என்றால், மிகப்பெரிய மொட்டை மாடியை சும்மா வைக்கலாமா? என்கிறார் மாடித் தோட்டம் அமைப்பு ஆர்வலர் அர்ச்சனா தெய்வா.

தனியார் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டு, தனக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களில் மாடித் தோட்டம் குறித்து பலருக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருவதோடு, மாடித் தோட்டம் ஆர்வலர் நம்பிராஜனுடன் இணைந்து கேதர்டு 2 கார்டன் எனும் அமைப்பை உருவாக்கி அதன் வழியாக பல்வேறு பள்ளிகள் மற்றும் இல்லங்களுக்குச் சென்று மாடித் தோட்டம் அமைத்து அதன் வளர்ப்பு முறை குறித்து பயிற்சி அளித்து வருகின்றார் அர்ச்சனா தெய்வா. இவர்களுடன் நேச்சுரல் செக்யூர் பவுண்டேசன் நிறுவனர் செல்வம் ராமசாமி மற்றும் கோடக் மகேந்திரா வங்கியின் துணை மேலாளர் துர்கா ஆகியோர் கைகோர்த்து மதுரையின் பல இடங்களில் இதுகுறித்து விழிப்புணர்வு கருத்தரங்கு, பயிற்சி பட்டறைகளை நடத்தி வருகின்றனர்.

மதுரை முழுதும் மாடித் தோட்டம்:
மதுரை முழுவதும் மாடித் தோட்டம் அமைப்பதே எங்கள் நோக்கம். எந்த வகையில் எங்களது கனவு நிறைவேறும் என்று தெரியவில்லை… ஆனால் அதற்கான விதைகளை தற்போது தூவி வருகின்றோம். நிச்சயம் ஒரு நாள் அதன் பலன் கிட்டுமென்ற நம்பிக்கையோடு மாடித்தோட்டம் அமைத்தல் குறித்து விரிவாக ஹலோ மதுரைக்கு கூறியது, கடந்த 5 வருடமாக மாடித் தோட்டம் அமைப்பு குறித்து செயல்பட்டு வருகின்றேன்.

நஞ்சற்ற காய்கறிகளை நாம் உண்ண வேண்டும் என்ற நோக்கில் எங்களது சொந்த நிலத்தில் முதன் முதலாக சிறிய அளவில் தோட்டம் அமைத்தேன். பின்பு எனது வீட்டு மாடியில் சீசனுக்கு ஏற்றார் போன்று காய்கறிகள் மற்றும் கீரை வகைகள் பயிரிட்டு அதனை வீட்டுச் சமையலுக்குப் பயன்படுத்தினேன். இதனை பலரும் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் மதுரையில் 150 வீடுகள், 20 பள்ளிகள் மற்றும் ஒரு அலுவலகம் என மாடித் தோட்டம் அமைத்துக் கொடுத்துள்ளேன்.

மாடித்தோட்டம் அமைக்க என்ன வழி ?
எல்லோர் வீடுகளிலும் மாடி உள்ளது. இதனை உபயோகப்படுத்தி பயனுள்ளதாக அமைய மாடித் தோட்டத்தை நாம் தேர்ந்தெடுக்கலாம். பெரும்பாலும் முதியவர்கள் காட்டும் ஆர்வம் இன்றைய இளைஞர்களிடம் இல்லை. மாடித் தோட்டம் குறித்து அவர்களிடம்தான் அதிகம் விழிப்புணர்வு வேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் உள்ள இளைஞர்கள் தாங்களாகவே முன்வந்து இதனை செய்தால் அனைவரும் நஞ்சற்ற காய்கறிகளை உண்ணலாம். ஆரோக்கியமான வாழ்வை நாமே அமைத்துக் கொள்ளலாம்.

தொடர்ச்சிக்கு என்ன செய்யலாம் ?
முதன் முதலாக மாடித்தோட்டம் அமைக்கும்போதுள்ள ஈடுபாடு தொடர்ந்து செய்வதில் இல்லாமல் போகிறது. இதற்கு முக்கிய காரணம் முதல் முறை கிடைக்கும் பலனை விட அடுத்தடுத்த முறை குறைவதும், பரமரிப்பில் குறைந்த கவனம் செலுத்துவதுதான். இதனை சரி செய்ய ஒரே வழி, மண்ணின் தன்மையை மாற்றுவது. மண்ணில் சத்துக்கள் இருந்தால்தான் செடிகள் நன்றாக வளர்ந்து பலன் கொடுக்கும். ஆதலால் இரு முறைக்கு பிறகு நாம் மண்ணை சுழற்சி முறையில் மாற்ற வேண்டும். அவ்வாறு மாற்றினால் தொடர்ச்சியாக நம் வீட்டுத் தேவைக்கான காய்கறிகளை நிச்சயம் பறிக்கலாம். அதேபோன்று சுத்தமான நம் கண்முன் வளர்ந்த காய்கறிகளை உண்ணும் மகிழ்ச்சியை விட வேறு ஒன்றுமில்லை என்பதை ஒவ்வொருவரும் புரிந்து கொள்ள வேண்டும்.

ஜூரோ பட்ஜெட்:
மாடித் தோட்டத்தைப் பொறுத்தவரையில் மாட்டுச் சாணம், ஆட்டுப்புழுக்கை, மண்புழு உரம் ஆகியவற்றைப் பயன்படுத்தலாம். “மதுரையில் ஒரு மாதம் 66,000 டன் குப்பைகள் வீணாக வருவதாக கார்பரேசன் கமிசனர் சந்திப்” தெரிவித்துள்ளார். ஆகையால் உரத்திற்கு என்று எதையும் நாம் வாங்க வேண்டிய அவசியமில்லை. செலவற்ற வகையில் நமது வீட்டுக் கழிவுகளையே உரமாக மாற்றி மண் பாதி, உரம் பாதி என சேர்த்து விதைக்கலாம். நாளொன்று 1 மணி நேரம் போதும்.

முதன் முதலாக என்ன பயிரிடலாம் ?
ஒருவர் மாடித் தோட்டம் அமைக்க திட்டமிட்டால் முதன் முதலாக கீரை பயிரிடுங்கள். ஏனென்றால் இது எளிதாக கையாளக்கூடியது. விதை விதைத்த 35 நாட்களில் நாம் அறுவடை செய்யலாம். வெந்தயக் கீரை 10 நாட்களில் அறுவடை செய்யலாம்.

பாதுகாப்பான மாடித்தோட்டம் ?
வீட்டின் மேல் தளத்தில் மாடித் தோட்டம் அமைப்பதால் தண்ணீர் கீழே இறங்கும் என்ற கவலை வேண்டாம். தரையின் அடியில் பிளக்ஸ் சீட்டை நன்றாக விரித்து அதன் மேலே பிளாஸ்டிக் டிரே, தேவையற்ற பிளாஸ்டிக் பாத்திரங்கள், தொட்டிகள் என அவற்றில் மண் அல்லது தேங்காய் நார் ஆகியவற்றைப் பயன்படுத்தி விதையிடலாம். இது அதிகப்படியான தண்ணீரை சேமித்துக் கொள்ளும். எளிதாக நாம் வேறு இடத்திற்கு செடியை மாற்றலாம். பிளாஸ்டிக் பைகளுக்கு பதிலாக மூங்கில் கூடைகளில் மண் நிரப்பியும் பயிரிடலாம்.

என்னென்னச் செடிகள் வைக்கலாம் ?
கீரைகள், மூலிகைச் செடிகளான துளசி, ஓமவல்லி, திருநீற்றுப்பச்சிலை வளர்க்கலாம். இதில் துளசி ஒரு நாளில் 20 மணி நேரம் ஆக்ஜிசன் கொடுக்கிறது. வீட்டுக்கொரு துளசிச் செடி வைத்தால் 10 மரத்திலிருந்து வரும் ஆக்ஜிசன் ஒரு செடியிலிருந்து பெறலாம். அதன் பிறகு படிப்படியாக தக்காளி, கத்தரி, பச்சைமிளகாய், வெண்டைக்காய், முள்ளங்கி என பயிரிடலாம். இதில் முள்ளங்கியை வீட்டில் பயிரிட்டால் அதன் கீரையை சுவையாக உண்ணலாம்.

பந்தல் காய்கள், பூச்சித் தாக்குதல் ?
ஆடி மாதம் மட்டுமே பந்தல் காய்கள் காய்க்கும். ஆதலால் சீசன் காலத்தில் மாடியில் பயிரிடலாம். இதேப் போன்று அழகு பூச் செடிகளும் வைக்கலாம். காய்கறிச் செடிகளுக்கு பூச் செடிகள் பாதுகாப்பு அளிக்கும். அதாவது மஞ்சல் நிறப் பூச் செடிகளை இடையிடையே வைத்தால் காய்கறிச் செடிகளுக்கு வரும் பூச்சிகள் பெரும்பாலும் மஞ்சள் நிறப் பூச் செடிகளுக்கு தாவி விடும். இதனால் காய்கறிச் செடிகளில் பூச்சி தாக்குதல் குறையும். மேலும் இயற்கை முறையிலான பஞ்சகாவ்யா, மீன் கரைசல், சாணக் கரைசல் ஆகியவற்றைப் பயன்படுத்தி பூச்சித் தாக்குதலை கட்டுப்படுத்தலாம்.

அப்பார்ட்மென்டில் அமைக்கலாமா ?
வீடுகளை விட அப்பார்ட்மென்ட் மாடிகளில் அதிக இடமுள்ளது. தனி ஆளாக கஷ்டப்படாமல் குழுவாக ஒருங்கிணைந்துச் செய்யலாம். முதலாவதாக கீரை மட்டும் பயிரிட்டாலே போதும். தங்களுக்குள் ஆட்களை தேர்வு செய்து ஆளுக்கொரு நாள் என்ற வீதம் தண்ணீர் ஊற்றி பாதுகாக்கலாம். 45 நாட்களுக்கு ஒரு முறை என்பதால் 10 நாட்கள் வித்தியாசத்தில் பல்வேறு கீரைகளை பயிரிட்டால் வாரம் ஒருமுறை என தொடர்ச்சியாக வேறு வேறு கீரைகளை அறுவடை செய்து அனைத்து வீடுகளிலும் பகிர்ந்து சமைக்கலாம். பின்னர் அனுபவத்துடன் காய்கறிச் செடிகளைப் பயிரிட்டு பலன் அடையலாம் என்றார் அர்ச்சனா தெய்வா.

வெறும் பேச்சளவில் மட்டும் நின்றுவிடாது மதுரையில் மாடித் தோட்டம் குறித்து நேச்சுரல் செக்யூர் பவுண்டேசனுடன் இணைந்து மதுரையில் 6 வகுப்புகள், லேடீஸ் கிளப்பில் 5 வகுப்புக்கள், சென்னையில் 3 வகுப்புகள் என தொடர்ந்து மாடித்தோட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர் இக்குழுவினர். நல்ல செயல்களை நாம் எப்போதுமே கடைசியாகத்தான் செய்வோம் என்ற கதையாகிடாது, உடனடியாக நம் வீட்டு மாடிகள் மற்றும் கிடைக்கும் சிறு சிறு இடங்களில் பயனுள்ள செடிகளை வளர்த்து நம்மைச் சுற்றி சிறிய பசுமையை உருவாக்குவோம்.

நேரமின்மையைக் காரணம் காட்டி, சோம்பேறித் தனத்தை முன்னிறுத்தி நாம் மாடித்தோட்டத்தை புறக்கணித்தால் நாம் மட்டுமல்ல நமது தலைமுறைகளும் நஞ்சுள்ள உணவுகளை உண்ணும் கட்டாய நிலை ஏற்படும். ஆரோக்கியத்தை இழந்த பிறகு ஒவ்வொரு மருத்துவமனையாக ஏறி இறங்குவதை விட, நம் வீட்டு மாடிப்படிகளில் ஏறி இறங்கி நஞ்சற்ற காய்கறிகளை பறித்து உண்ணலாம். ஆதலால் அனைவரும் ஒருமுறை முயற்சி செய்து உங்கள் வீடுகளில் மாடித் தோட்டம் அமைத்து அதன் வளர்ச்சியை தினம் தினம் ரசித்து, அதில் விளைந்த காய்கறிகளைப் பறித்து சமைத்துப் பாருங்கள். அதன் சுவையும், திடமும் உடனே கண்டறிவீர்கள். மதுரை முழுவதும் மாடித் தோட்டம் அமைந்தால் எப்படி இருக்கும் ? ஆகாயத்தில் பசுமை மிதப்பதுபோல் ஆரோக்கியத்துடன் அழகு… இதழ் இதழாய் நம் வீட்டு மொட்டை மாடிகளில் புன்னகை உதிர்க்கும் !!

முக்கிய குறிப்பு:
வரக் கூடிய பருவ மழையை ஒவ்வொரு வரும் நன்றாகப் பயன்படுத்தினால் நிச்சயமாக மதுரையில் உள்ள அனைத்து மாடிகளும், காய்கறித் தோட்டமாக உருமாறும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. அதேபோல் கொரோனா ஊரடங்கு நேரத்தில் நம் வீட்டு மாடிகளில் காய்கறி தோட்டம் அமைப்பது நல்ல பலனைக் கொடுக்கும்.

ஆலோசனை மற்றும் தொடர்புக்கு: 7708424058

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.04.2017
எழுத்து: மு.இரமேஷ்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat