கதைபடைப்புகள்

மனைவி அமைவதெல்லாம்

காலை உணவு உண்டு முடித்துவிட்டு கை கழுவிக்கொண்டிருந்த ராஜியின் கைபேசி ஒலிக்கத்தொடங்கியது…..

என்னங்க….

ராஜிமா நா ஆபிஸ் வந்துட்டேன்டா…..

சரிங்க…..இன்னைக்கு திங்கள் கிழமை நெறியா வேலை இருக்கும் நீங்க போய் வேலைய பாருங்க……

சரிடா…. பை….

பேசி முடித்து பால்கனிக்கு வந்து தான் வளர்க்கும் ரோஜா செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவது உரமிடுவது வாடிய இலைகளை வெட்டிவிடுறதுனு பாத்துட்டு இருந்தா

அப்போது வாசலில் அழைப்பு மணி அடிக்க இந்நேரத்துல யாரா இருக்கும் என்று நினைத்த படி வாசலுக்கு சென்றாள்

வாங்க மாமா எப்டி இருக்கீங்க

நல்லா இருக்கேன்மா நீங்க எப்டி இருக்கீங்க

நல்லா இருக்கோம் மாமா…. அத்தை வரலையா……

இல்லமா…. நா இங்க பக்கத்துல ஒரு விசேஷத்துக்கு வந்தேன் என்னமோ தோணுச்சு உங்கள பாக்கனுன்னு உடனே ராத்திரியே கிளம்பிட்டேன்….. அதான் உங்கட்ட கூட சொல்லல…….

சரி மாமா…. குளிச்சுட்டு வாங்க சாப்பிடலாம்…..

குளிச்சுட்டு பால்கனியில் நின்று சூரியனை வணங்கி வந்தார் மாமா

என்னமா… புதுசா ரோஜா செடிலாம் வளக்குற போல

ஆமா மாமா…. சாப்பிட வாங்க…..

வீடு முழுக்க முன்பு எப்போதும் போல் அன்றி அலங்கார பொருட்கள் நிறைந்திருந்ததையும் நேர்த்தியாக அழகுபடுத்தி வைக்கப்பட்டிருந்ததையும் அவர் கவனிக்க மறக்கவில்லை

தட்டில் ரெண்டு கேப்பை இட்லி வைத்துக்கொண்டு இதெல்லாம் நீயாமா அலங்காரம் பண்ண என்றார்

ஆமாம் மாமா…. யூடூப்பில இன்டிரியர் டெகரேஷன் கத்துகிறேன்…..

சொல்லிக்கொண்டே தட்டில் மூன்று வகையான சட்னியையும் வைத்தாள் சாம்பார் சிறிது ஊற்றினாள்

என்ன இன்னைக்கு டிபன் இவ்ளோ ஸ்பெஷல்லா இருக்கு

ஒரே மாதிரி பண்ணா போர் அடிக்குது மாமா அதான் புதுசா ட்ரை பண்ணேன் இஞ்சி சட்னி இன்னும் கொஞ்சம் வச்சுக்கோங்க உடம்புக்கு நல்லது என்றாள்

சாப்பிட்டுவிட்டு செய்தித்தாள்களில் மூழ்கினார் மாமா….

ராஜி தான் பாதி பின்னி வைத்திருந்த ஸ்வேட்டரை தொடர ஆரம்பித்தாள்

மதியம் ஆனதும் அவள் கைபேசி ஒழிக்க துவங்கியது

என்னங்க

இன்னைக்கு மாங்காய் பச்சடி சொதி குழம்பு சூப்பரா இருந்துச்சுடா

நிஜமாவா

நீ இன்னும் சாப்பிடலையா டா சாப்பிட்டு பாரு தெரியும்

பொய் சொல்லாதீங்க இன்னைக்குத்தான் நானே முததடவ செய்றேன்

நிஜமா தான் டா….

சரி சாப்பிடு பாக்கறேன் ….. மாமா வந்துருக்காங்க ஊர்ல இருந்து…..

அப்படியா ஈவினிங் வந்து பாக்குறேன்டா

சரிங்க வச்சுறட்டுமா

ஓகே டா பை

கைபேசியை வைத்துவிட்டு அறையை நோக்கி நடந்தாள்

மாமா வாங்க சாப்பிடலாம்

நா அப்போவே வந்தேன்மா நீ ஏதோ எழுதிட்டு இருந்த

அது ஒன்னுமில்ல சும்மா ஒரு படம் வரைஞ்சுகிட்டு இருந்தேன் வார்லி னு ஒரு வகை படம் வரைறது நீங்க என்ன கூப்டுருக்கலாம்ல

தொந்தரவு செய்ய வேணாமேன்னு விட்டுட்டேன்

மதிய உணவிலும் புதுமைக்கும் ருசிக்கும் குறைவில்லை

சரி மாமா நீங்க கொஞ்சம் தூங்கி ஓய்வெடுங்க என்று கூறியவள் சுஜாதாவின் கம்ப்யூட்டர் கிராமத்தில் மூழ்கினாள்

எப்போது தூங்கினாள் என்று தெரியவில்லை கடிகாரத்தை பார்த்தாள்

மணி 5:30

அவசரஅவசரமாய் கிளம்பினாள்

மாமா……. மாமா…..

என்னமா

நா பியூட்டீஷியன் கிளாஸ் போறேன் பிளாஸ்க் ல டீ போட்டு வச்சிருக்கேன் குடிங்க மாமா ஒரு மணி நேரத்துல வந்துருவேன் என்று கூறிவிட்டு கிளம்பினாள்

6:30 மணி

வாசலில் அழைப்பு மணி அடித்தது

மாமா கதவை திறக்க சேகர் வந்திருந்தான்

வாங்கப்பா எப்போ வந்தீங்க ஒரு போன் கூட பண்ணல

பாக்கணும்னு தோணுச்சு டா வந்துட்டேன் என்றவர் இது என்னடா கைல என்று சேகர் கையில் இருந்த பேண்டேஜை பார்த்து கேட்டார் சொல்றேன்பா என்று கூறிவிட்டு அறைக்குள் சென்றான்

பிரெஷ் ஆகிவிட்டு வந்து நேரே டைனிங் டேபிள் சென்று பிளாஸ்க்இல் இருந்த டீ யை குடிக்கலானான்

அப்பாவும் மகனும் பல விஷயங்களை பரிமாறிக்கொண்டனர்

இப்போவது சொல்லுடா என்னாச்சு கைல

ஒரு வாரம் முன் நடந்த நிகழ்வை விவரித்தான்

அன்றைக்கு அவன் காலை வழக்கம் போல் அவன் அலுவலகம் கிளம்பினான்

அங்கிருந்து அவன் பல்சரில் செல்ல அரைமணி நேரம் ஆகும்

ராஜி நா வரேன்

சரிங்க

வண்டியில் ஏறி பத்து நிமிடம் ஓட்டிருப்பான் கைபேசி அழைத்தது

சார் ரீட்டா பேசுறேன் – அவன் பிஏ

என்ன

சார் ப்ராஜெக்ட் மீட் ஸ்டார்ட் பண்ண எல்லாம் ரெடி

வரேன்

ஓகே சார்

இந்த நேரத்துலதான் சிக்னல் வேற போடுவாங்க

சிக்னல் லைட்டையே வெறித்து பார்த்துக்கொண்டிருந்தான்

பச்சை விழுந்தது

பல்சரை உதைத்தான்

அடுத்த ஐந்து நிமிடத்தில் அழைப்பு மணி

என்ன ராஜி

ஏங்க டிபன் பாக்ஸ் விட்டுட்டு போயிட்டிங்க

கேன்டீன் ல சாப்பிடுகிறேன்

உடம்புக்கு ஒதுக்காதுங்க

நா பாத்துக்குறேன்

சரி போய்ட்டு பேசுங்க

ஆபிஸ் பார்க்கிங்கில் பல்சரை நிறுத்தினான் அவசரமாக உள்ளே நுழைய எத்தனிக்கும் போது அழைப்பு மணி

என்ன ராஜி

ஆபிஸ் போய்ட்டிங்களா

ஆமா

போய்ட்டு சொல்லுங்கன்னு சொன்னேன்ல

இப்போதான் வந்தேன் – கொஞ்சம் சத்தமாக

ஏன் கத்துறீங்க

மீட்டிங் இருக்கு ராஜி

சரி சரி எப்போ முடியும்

முனு மணி நேரம் ஆகும்

சரிங்க

கைபேசியை துண்டித்தான்

வாசலில் இருந்த கடிகாரத்தில் மணி 09.20, 20 நிமிடம் தாமதமாகிருந்தது

மீட்டிங் ஹாலில் அனைவரும் ரெடியாக இருக்க சேகர் பேச ஆரம்பித்தான்

மணி பன்னிரண்டு அடித்தது சேகர் கைபேசி அழைத்தது

ராஜி

வைப்ரேட் மோடில் போட்டுவிட்டு பேசுவதை தொடர்ந்தான்

பன்னிரெண்டே கால்

மேசையில் இருந்த கைபேசி கீறிட்டது வைபரேட்டில்

ராஜிதான்

கைபேசியை முறைத்து விட்டு சுவிட்ச் ஆப் செய்தான்

மீட்டிங் முடிந்து வெளியே வர மணி ஒன்றரை ஆகியிருந்தது

பயங்கர பசி கேன்டீன் வந்து சாப்பிட்டான்

ஏதோ நியாபகம் வந்தவனாய் கைபேசியினை ஆன் செய்தான்

உடனே ஒலித்தது

ராஜி

என்னங்க ஏன் சுவிட்ச் ஆப் பண்ணீங்க

மீட்டிங் சொன்னேன்ல

இப்போதான் முடிஞ்சுச்சா

ஒன்ரைக்கு

இப்போ ரெண்டாகிருச்சு ஏன் இவ்ளோ நேரம் பேச

சாப்டுட்டு இருந்தேன் – கோவமாக

சாபிட்டங்களா னு கேக்கத்தான் நானும் பண்ணேன்

சாப்பிட்டேன்

என்ன சாப்பாடு

தயிர்சாதம்

அது ஏன் சாபிட்டீங்க கேன்டீன்ல பழையதுத்தான் தயிராக்குவாங்க

ஒரு நாளைக்கு தானே

சரி சாயங்காலம் எப்போ கிளம்புவீங்க

6 மணிக்கு, சரி வைக்கிறேன் லஞ்ச் டைம் முடிஞ்சுச்சு

என்னங்க

கேட்டும் கேக்காத மாதிரி வைத்து விட்டான்

மீண்டும் அரக்க பறக்க வேலைகளில் மூழ்கினான்

மணி 6 அலைப்பேசி சரியாக அழைத்து நேரத்தை உணர்த்தியது

இந்த முறை சைலன்ட் இல் போட்டான்

அனைத்து வேலையும் முடிய மணி 6:45

பல்சரை எடுக்க வந்தான்….

எதேச்சையாக கைபேசியை பார்த்தவன் 4 தவறிய அழைப்புகள் ராஜியேதான்

மீண்டும் அழைத்தான்

என்னங்க எத்தனை தடவ கால் பண்றது

வேலை இருந்துச்சு

எடுத்து சொல்லிருக்கலாம்ல

எடுக்க முடியல

எப்போ வருவீங்க

இப்போதான் கிளம்புறேன் அரை மணி நேரம் ஆகும்

சரி சீக்கிரம் வாங்க

அழைப்பை துண்டித்து பல்சரை உதைத்தான்

பத்து நிமிடம் ஓட்டிருப்பான்…. மீண்டும் அழைப்பு

என்ன ராஜி பல்சரில் ஒரு கையும் அலைபேசியில் ஒரு கையுமாக கேட்டான்

வரும் போது ஒரு லிட்டர் பால் வாங்கிட்டு வாங்க

சரி வை

ஏங்க அப்படியே

இன்னும் என்ன

கொஞ்சம் நல்லெண்ணெய் வேணும்

இதுலாம் முன்னமே சொல்றதுக்கு என்ன

இப்போதான் பாத்தென்க

சரி வாங்கிட்டு வரேன்

எப்போ வருவீங்க

வந்துட்டு தானே இருக்கேன் என்று கத்திக்கொண்டே வண்டியை திருப்ப பேலன்ஸ் பண்ண முடியாமல் சுவற்றில் மோதிய பல்சரில் இருந்து அவனும் கீழே விழுந்திருந்தான்

என்னங்க என்னங்க – கைபேசி அலறியது அந்த மயக்கத்திலும் அவனுக்கு கேட்டது

மருத்துவர் அறையில் இருந்து கையில் கட்டுடன் வந்த சேகரை பார்த்து என்னங்க கட்டு

போன் பேசிட்டே வந்து என் வீட்டு சுவத்துலதான் மோதி விழுந்து மயங்கிட்டாரு ஹெல்மெட் போட்டுருந்ததால தலைல அடி படல என்றார் ஒரு புது முகம்

இவர் தான் இங்க கூட்டிட்டு வந்தாரு என்றான் சேகர்

ரொம்ப நன்றிங்க

நன்றி லா வேணாமா இனிமேலாவது உங்க வீட்டுக்காரரை வண்டி ஓட்டும் போது போன் பேசவேணான்னு சொல்லி வைங்க யார் கூடத்தான் அப்டி பேசுவார்களோ என்றார்

என்கூடத்தான் சார் பேசிட்டு இருந்தாரு

சரியா போச்சு….. வண்டி ஓட்டும் போது ஏன்மா பேசுறீங்க… வீட்டுல சும்மா இருக்கிற எல்லா பொம்பளைங்களும் இப்படி தான் பண்றீங்க….. வேலைக்கு போனா வீட்டுக்கு வந்த அப்பறம் பேசுறதுதானே…. ஏதோ அவசரத்துக்கு பேசத்தான் போன கண்டுபிச்சான் நீங்கல்லாம் ஏன் இப்டி இருக்கீங்கனே தெரியல….. என அவர் பேசிக்கொண்டே போக சேகர் இடை மறித்து சார் அவங்க ஏதோ என் மேல இருக்கிற அக்கறை ல அப்டி பண்ணிட்டாங்க விடுங்க சார்….. நீங்க பாத்து போங்க சார்…

அவர் செல்ல ராஜியை பார்த்தான்

குற்ற உணர்வுடன் தலை குனித்திருந்தாள் ………..

இவ்வாறு நடந்ததை அப்பாவிடம் கூறி முடித்த சேகர் நா போய் ராஜியை கூட்டிட்டு வரேன்னு கிளம்பினான்.

இப்போதான் ஏதோ புரிந்தது போல இருந்தது அவன் அப்பாவுக்கு……

Spread the love

இரஞ்சிதபிரியா.மு

கதை, கவிதை, கட்டுரை போன்றவற்றை பொழுதுபோக்காக எழுதி வருகிறேன்

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat