கட்டுரைகள்கல்வி கட்டுரைகள்செய்திகள்
Trending

ரெஸ்ட்லெஸ் ரீடர் ரெஃப்லின்

எல்லா வீடுகளிலும் பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை படி… படி… என்று கூறுவது வழக்கம். ஆனால் இங்கே தலைகீழ் படித்தது போதும்… போதும்… என இரவு 11 மணியைத் தாண்டியும் படிக்கும் பழக்கம். ஆம்… ரெஃப்லின் உலகம் புத்தகங்களால் நிறைந்தது. சிறு வயதிலேயே தனது தாத்தா வீட்டு நூலகத்திலிருக்கும் பழைய ஆங்கில புத்தகங்களை பக்கம் பக்கமாக புரட்டிப் படிக்கும் ஆர்வம்… இன்றைக்கு எவரும் எதிர்பார்க்க முடியாத இளம் எழுத்தாளராக உருமாறியுள்ளார் ரெஃப்லின்.

அப்பா எட்வின், அம்மா இன்ப ரெஜிலா இவர்களுக்கு ஒரே மகளான ரெஃப்லின் வயது 12. தனது 2ம் வகுப்பில் Fairy Tales, 4ம் வகுப்பில் ராஜாஜி எழுதிய மகாபாரதம், ய­ர்லக்ஹோம் கதைகள், த்ரிலிங் நாவல்கள் என எல்லாமே படித்து முடித்துவிட்டு அதுபோதாதென அப்பா வாங்கித் தரும் அத்தனை புத்தகங்களையும் ஒரே நாளில் வாசித்து முடித்து விட்டு அடுத்த புத்தகம் என கேட்கும் இச்சிறு வாசிப்புச் சிங்கத்தை முதன் முதலாக எழுதத் தூண்டியது அப்பாவின் நண்பர் கணேசன்.

அப்பா எழுதிய புத்தகங்களுடன்

முதன் முதலாக 2014ம் ஆண்டு Restless Birds எனும் ஆங்கில சிறுகதை தொகுப்பினை குழுந்தைகள் தினத்தன்று வெளியிட்டார். இச்சிறுகதைக்கான படத்தை இவரே வரைந்துள்ளார். இதை பலரும் பாராட்டினர். அதன் தொடர்ச்சியாக டஸ்ட்ஸ் மற்றும் ஆக்ஜிசன் எனும் குறும்படத்தை வெளியிட் டுள்ளார். அதனைத் தொடர்ந்து 2016ம் ஆண்டு த வென்ச்சர்சம் செவன் (The Venturesome Seven) 108 பக்கங்கள் கொண்ட ஆங்கில நாவல் வெளிவந்தது.

இசை, ஓவியம், விளையாட்டு, படைப் பாற்றல், சிந்தனை, படிப்பு என யாவிலும் முதன்மையாகத் திகழும் ரெஃப்லின் நம்மிடம் குழுந்தைத் தனம் மாறாது பேச ஆரம்பித்தார். எனக்கு எப்பவுமே படிக்க பிடிக்கும். ஆனா என்ன வீட்ல படிக்க விட மாட்டாங்க. டி.வி.பார்க்கவும் பிடிக்கும் அதுக்கும் தடா தான். நா இப்படி எழுதுவதற்கு காரணம் எங்க அப்பாதான். அவரும் ஒரு எழுத்தாளர். தன்னோட இளமை வயதில் இரண்டு புத்தகம் வெளியிட்டு இருக்கிறார். அதே தான் எனக்கும் எங்க அப்பாவோட ரத்தம்.


முதல் புத்தகத்தை வெளியீட்ட தமிழச்சி தங்கபாண்டியன்

எந்த புத்தகம் கேட்டாலும் எங்க அப்பா உடனே வாங்கிக் கொடுப்பாங்க. அம்மாவும் அப்படித்தான். கதை புத்தகம் படிப்பதுதான் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். அதிலும் மிஸ்டரி டைப் கதைகள் தான் ரொம்ப இஷ்டம். எவ்வளவு மணி நேரம் ஆனாலும் அந்த கதையை முடிக்காம தூக்கம் வராது. தமிழ் புத்தகங்களை விட ஆங்கில புத்தகங்கள் தான் என்னிடம் அதிகமா இருக்கு. படிப்பது போல விளையாட்டும் பிடிக்கும் என்று புன்னகையுடன் கூறினார் ரெஃப்லின்.

தந்தை எட்வின் கூறுகையில், ரெஃப்லின் எப்பவும் இப்படித்தான் படிச்சுக்கிட்டே இருப்பா. எனக்குத் தெரியாத ஆங்கிலத்தை இவளிடமிருந்துதான் கற்றுக் கொள்கின்றேன். தினமும் ரொம்ப கஷ்டப்பட்டுத்தான் தூங்கவைப்போம். டாடி.. ஒன்லி 5 மினிட்… 5 மினிட்… னு இரவு 12 மணி ஆகும் தூங்க. வீட்டில் எந்த பக்கம் பார்த்தாலும் புத்தகமாகத்தான் இருக்கும். சில நேரம் இந்த ரூம்ல ஒரு புக், அந்த ரூம் ல ஒரு புக்-னு படிப்பா. ஒரு பக்கம் சந்தோசமா இருந்தாலும் அதிகம் புத்தகம் படிக்க தடைதான். அளவுக்கு மிஞ்சினா அமிர்தமும் நஞ்சுதானே.


லயன் சங்கத்தினருடன் ரெஃப்லின்

படிப்புக்கு ஏற்றார்போல் விளையாட்டிலும் கவனம் செலுத்த ஊக்கப்படுத்துறேன். அவளிடம் இருக்கின்ற திறமையை ஒரு சிறு வட்டத்தில் அடைத்துவைக்க விருப்பமில்லை. ஒரு சுதந்திர ஏழுத்துப் பறவையாக பறக்க விடவே ஆசைப்படுகின்றேன். எதுவும் உறுதியா சொல்ல முடியாது. இன்றைக்கு அவளுக்கு என்ன விருப்பமோ அதற்கான வழியை நானும் என் மனைவியும் சேர்ந்து செய்கின்றோம். ஏன்னா எங்க அப்பாவும் ஒரு பெரிய வாசிப்பாளர். அவருக்கு புத்தகம்னா உயிர். நான் அவர் வழியில்… அதே வழியில் ரெஃப்லின் என முடித்தார்.

ரெஃப்லின் அம்மா… சதா படிப்புதான் வேற என்ன சொல்ல. வெளியே போகும்போது அவுங்க அப்பா பைக்கில இருந்தபடியே படிப்பானா பார்த்துக் கோங்க. எல்லாத்தையுமே நா பொறுத்துக்குவேன். சாப்பாடு விசயத்தில் கோவம் தான் வரும். தட்டில் வைச்ச சோறு அப்டியே இருக்கும். அவ கண்டுக்காம படிச்சுகிட்டே இருப்பா. அதிகமா கம்ப்யூட்டர் பார்த்து கண் பார்வை குறைஞ்சிருச்சு. அதனால் டிவி பார்க்க விடுவதில்லை. என்னதான் படிச்சாலும், எழுதினாலும் உடம்பு ரொம்ப முக்கியம்தானே.

குடும்ப உறுப்பினர்களுடன் ரெஃப்லின்

வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.04.2017
எழுத்து: மு.இரமேஷ்

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat