கட்டுரைகள்கல்வி கட்டுரைகள்
Trending

60 ஆண்டுகள் பாரம்பரியப் பள்ளி மதுரை நேத்தாஜி பள்ளி

ஒரு காலத்தில் பள்ளியில் படிக்க ஆசிரியர்கள் வீடு வீடாகச் சென்று உங்கள் குழந்தைகளை எங்கள் பள்ளியில் சேருங்கள் நாங்கள் எல்லாவற்றையும் பார்த்துக் கொள்கின்றோம் என்பது பழைய கதையன்று அது இன்றைக்கும் தொடர் கதைதான். ஆச்சர்யம் வேண்டாம். அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் இன்றைக்கும் இப்படித்தான் வீடு வீடாகச் சென்று உங்கள் குழந்தைகளை எங்களது பள்ளியில் சேருங்கள் என்று அழைப்பு விடுக்கின்றனர். ஆனால் பொதுமக்கள் ஆங்கில வழிக் கல்வி மோகத்தின் பிடியில் இறுகிக் கிடப்பதால் சிபிசி பள்ளி வாசலில் சீட்டுக்காக காத்துக்கிடக்கின்றனர்.

மதுரையில் தனியார் ஆங்கில வழிக் கல்வி பல்கிப் பெருகியுள்ளதால் தமிழ் வழிக் கல்வி பள்ளிக் கூடங்கள் இழுத்து மூடும் நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பது பெருத்த வேதனையாகும். தமிழினி மெல்லச் சாகும் என்றான் பாரதி. அந்நிலை பெரிதினும் பெரிதாகிக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் அறிந்தும் ஆங்கில வழிக் கல்விப் பள்ளியின் வாயிலில் நிற்கின்றோம். அங்கு பயில எவ்வளவு பணம் வேண்டுமானாலும் அள்ளிக் கொடுக்கத் தயாராகவுள்ளோம். பணம் விழுங்கும் பள்ளிக் கட்டிடங்கள் வீதியயங்கும் முளைத்திருக்க… நேர்மையான கல்வியை நாம் எங்கு தேடிக் கண்டு பிடிக்க?

படிக்கின்ற பிள்ளை எங்கு வேண்டுமானாலும் படிக்கும். அது தெரு விளக்கு ஆனாலும் சரி, கண் தெரியா நிலையனாலும் சரி… தனியார் பள்ளியில் படிப்பதுதான் கெளரவம் எனும் போலி அடையாளத்தை அனைவரும் கழற்றி எறிந்து தமிழ் வழிக் கல்விக்கு முக்கியத்துவம் தர வேண்டும். இது ஆங்கில வழி கல்விக்கு எதிரானது அல்ல, மொழிப் புலமை வேறு, கல்வி கற்றல் என்பது வேறு. எல்லா மொழியும் முற்றும் கற்றுணர்ந்த மகா கவி பாரதி கூறினான்… “யாமறிந்த மொழிகளிலே தமிழ் போல் இனிது வேறெங்குமில்லை…” என்று அன்றே…. ஆனால் இன்று தமிழ் வழிக் கற்பிக்கும் பள்ளிகளின் நிலை என்ன? என்று நேர்பட பேசுகிறார் நேத்தாஜி நடுநிலைப்பள்ளி தாளாளர் ராமலெட்சுமி.


பள்ளியின் நிறுவனர் காந்தி,                                              தாளாளர் ராமலெட்சுமி

60 ஆண்டுகள் என்ற பழமையும், பெருமையும், இங்கு பயின்ற மாணவர்கள் பலரும் இந்தியா முழுவதும் நிறைந்து உள்ள கர்வத்துடன் இன்றும் தனது கல்விச் சேவையை செய்து வருகிறது மதுரை ஜெய்ஹிந்த்புரம் நேத்தாஜி நடுநிலைப்பள்ளி. ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள அரசு உதவி பெறும் இப் பள்ளியானது 60வது ஆண்டினை கொண்டாட உள்ளதை அறிந்து நாம் அங்கு சென்றோம். இதோ அது உங்களுக்கும்… ஒரு வேளை வாசிக்கும் நீங்கள் அந்தப் பள்ளியின் மாணவன் என்றால் அதைவிட ஆனந்தம் எங்களுக்கு வேறு இல்லை.

இந்தியா சுதந்திரம் வாங்கிய அடுத்தப் பத்து ஆண்டுகளில் அதாவது 1957ஆம் ஆண்டு துவங்கப்பட்டது இப்பள்ளி. எனது கணவர் காந்தி ராணுவத்தில் வேலை செய்து இங்கு வந்தபோது 1962ஆம் ஆண்டு மூடும் நிலையில் இருந்த இப்பள்ளியை மீண்டும் புதுப்பித்து துவங்கினார். அவரது மறைவுக்கு பின் நான் இப்பள்ளியின் தாளாளராக இயக்கிக் கொண்டு வருகின்றேன்.

நேத்தாஜி நடுநிலைப்பள்ளி நிலை:
மதுரையில் அதிகம் மக்கள் வசிக்கும் பகுதிகளில் ஜெய்ஹிந்த்புரமும் ஒன்று. இங்கு சிறு தொழில் செய்வோர் எண்ணிக்கை பன்மடங்கு. அன்றைக்கு இப்பகுதியில் தமிழ் வழிக் கல்வி பள்ளிகள் மூன்று மட்டுமே இருந்தன. ஆகையால் எங்கள் பள்ளியில் சுமார் 650க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயில அவர்களுக்கு 18 ஆசிரியர்களுக்கும் மேல் கற்றுக் கொடுத்தனர். இன்றைக்கு 11 ஆசிரியர்கள் மட்டுமே பணிபுரிகின்றனர். இது அரசு உதவி பெறும் பள்ளி என்பதால் ஆசிரியர்களுக்கு அரசு ஊதியம் வழங்கப்படுகிறது. 1962ல் 650 மாணவர்கள் படித்த இப்பள்ளியில் இன்று 250 மாணவர்கள் மட்டுமே பயில்கின்றனர்.


ஆசிரியர்களுடன்…

சேர்க்கை குறைவுக்கான காரணம் ?
இன்றைக்கு கூலித் தொழிலாளி கூட ஆங்கில வழிக் கல்வியில் தங்களது குழந்தைகளை சேர்க்க வேண்டும் என்ற ஆர்வம். அரசு பள்ளி சீருடை களை அணியாது, கலர் கலராக ஆடை அணிந்து தன் பிள்ளைகள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என்பதில் விருப்பம். அதுமட்டுமின்றி அரசு பள்ளி என்றால் அது ஏழைக் குழந்தைகளுக்கான பள்ளி என்று ஒதுங்கிடும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அன்றைக்கு இப்பகுதியில் மூன்று பள்ளிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்றைக்கு சுமார் 40க்கும் மேற்ப்பட்ட தனியார் ஆங்கில வழிக் கல்வி பள்ளிகள் உள்ளன. தமிழ் வழிக் கல்வி அரசுப் பள்ளிகள் தவிர்த்து மற்ற அனைத்து தனியார் பள்ளிகளிலும் மாணவர்களின் எண்ணிக்கை வருடத்திற்கு வருடம் அதிகரிக்கிறது என்பதே உண்மை.

தெருவுக்கு இரு பள்ளி:
ஒரு பகுதிக்கு ஒரு பள்ளி என்ற நிலை மாறி தெருவுக்கு இரு தனியார் பள்ளிகள் உள்ளன. பளபளப்பான கட்டிடங்கள், ஷி, , பெல்ட், டை, ஐடி கார்டு, வாகன வசதி, மார்டன் கிளாஸ், ஆங்கிலக் கல்வி, விதவிதமான சீருடைகள் ஆகியவை தனியார் பள்ளிகளில் மட்டுமே உள்ளன. அரசு பள்ளிகளில் இதுபோன்ற உயர்தரமான வசதிகள் ஏதுமில்லை என்று பலரும் நினைக்கின்றனர். இது முற்றிலும் தவறு.


பரிசுகள் வென்ற மாணவ, மாணவிகள்

தனியார் பள்ளிக்கு நிகரான கல்வி:
எங்களது பள்ளி தனியார் பள்ளிக்கு நிகராக மாணவர்களுக்கு தரமான கல்வி கற்றுக் கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெற்ற அனுபவ மிக்க ஆசிரியர்கள் உள்ளனர். ஒழுக்கம், நன்னடத்தை மற்றும் கட்டுப்பாடுடன் கூடிய கல்விப் பயிற்சி. ஒவ்வொரு குழந்தைக்கும் தனிக் கவனம் செலுத்தி திறனை வெளிக் கொண்டு வருதல். கலை நிகழ்ச்சிகள் மூலமாக குழந்தைகளின் தனித்திறமைகளை வெளிப்ப டுத்துதல். மாதந்தோறும் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகிறது.

பள்ளிக் குழந்தைகளின் பாதுகாப்பிற்கு சிசிடிவி கேமரா வசதி. இது தவிர கைவினைப் பயிற்சி, பெற்றோர் ஆசிரியர் கழகம், செஞ்சிலுவைச் சங்கம், சாரணர் அமைப்பு ஆகியவை உள்ளன. மாணவர்களுக்கு காது, மூக்குத் தொண்டை மருத்துவ முகாம், ரத்ததான முகாம். படிப்பில் பின் தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி. திறன் குறைந்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் மூலம் கல்வியில் ஆர்வமேற் படுத்துதல்.

அரசின் நலத்திட்டங்கள் அனைத்தும் உடனடியாக பெற்றுத் தருதல். போதுமான குடிநீர் மற்றும் கழிப்பிட வசதி. மின் வசதி, கணினி வசதி. கல்லூரி வரை தொடர்ந்து பயில வாய்ப்பு, செயல் வழி முறையில் கற்பித்தல். தரமான சத்துள்ள மதிய உணவு என அனைத்து விதமான சிறப்புகளும் இங்கு உள்ளன.

கல்வி மட்டுமின்றி மாணவர்களுக்கு நடனம், நடிப்பு, ஓவியம், தடகளம், விளையாட்டு, யோகா, கராத்தே, செஸ், கேரம், ரோப் மற்றும் சிலம்பாட்டம் போன்ற விளையாட்டுத்துறை களிலும் தேர்ச்சி பெற்ற வல்லுநர்களால் அளிக்கப்படும் பயிற்சியின் வாயிலாக மாவட்ட அளவிலும், மாநிலம் மற்றும் அகில இந்திய அளவிலும் எங்களது பள்ளி தொடர்ந்து பல்வேறு வெற்றிச் சாதனைகளைப் பெற்றுள்ளது. இது தவிர தொலைவில் இருக்கும் குழந்தைகள் மிக எளிமையாக பள்ளிக்கு வர இந்தாண்டு முதல் இலவச வேன் வசதி செய்துள்ளோம்.


பரிசுகள் வென்ற மாணவ, மாணவிகள்

ஏழை மாணவர்களுக்கான கல்வி:
இங்கு பயிலும் அனைத்து மாணவ, மாணவிகளும் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள். சிலர் ஒரு நேரம் மட்டுமே உணவு உண்ணும் நிலையற்றக் குடும்பத்திலிருந்து வந்து பயில்கின்றனர். கல்விக் கட்டணம் ஏதும் இல்லை என்பதால் மட்டுமே இங்கு வரும் மாணவர்கள் அதிகம். இதேபோன்று வீட்டில் குழந்தைகளை கவனிக்க முடியாத, அதாவது வீட்டில் இருவரும் வேலைக்குச் செல்லும் குடும்பத்தினர் தங்களது குழந்தைகளை இங்கு படிக்க அனுப்பிவைக்கின்றனர். இங்கு முதல் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை கல்விக் கட்டணம் ஏதும் வாங்கப்படுவ தில்லை.

ஆசிரியர்களின் ஒத்துழைப்பு:
எங்களது பள்ளி மாணவர்களின் குடும்ப சூழ்நிலையைப் புரிந்து கொண்ட எங்கள் ஆசிரியர்கள் மாணவர்களின் நலன் கருதி தங்களது சொந்தப் பணத்தைச் செலவிடுகி ன்றனர். டிராயிங் போட்டிக்கான தளவாடப் பொருட்கள், பரிசுகள், பேனா, பென்சில் என எல்லாவிதமான உதவிகளையும் செய்கின்றனர். ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பால்தான் இப்பள்ளி இன்றளவும் திறம்பட தொடர்ந்து இயங்கி வருகிறது என்பதை பெருமையுடன் இந்த நேரத்தில் கூறிக் கொள்கின்றேன்.

அரசின் சலுகை ?
எங்கள் பள்ளி ஆரம்பித்த 1957ஆம் ஆண்டு முதல் அரசு உதவி பெறும் பள்ளி என்றபோதும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளுக்கு வழங்கப்படும் கம்பியூட்டர், லேப்டாப் மற்றும் கட்டிடங்கள் புதுப்பித்தல் போன்ற சலுகைகள் எங்களைப் போன்ற பள்ளிகளுக்கு கிடைப்பதில்லை. அதே நேரத்தில் அரசு சார்பில் வழங்கக் கூடிய சீருடை கள், புத்தகங்கள், செப்பல் போன்றவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. இதைப் போன்று ஒரு அரசு பள்ளிக்கு வழங்கக் கூடிய அனைத்துச் சலுகைகளையும் அரசு உதவி பெறும் பள்ளி களுக்கும் வழங்கினால் வறுமையில் பயிலும் மாணவர்களுக்கு இது நிச்சயம் பயன்படும். அதேபோன்று எங்களுக்கும் ஆங்கில வகுப்பு நடத்திட அரசு அனுமதி அளித்தால் இங்கு சேர்க்கையின் எண்ணிக்கை நிச்சயம் உயரும்.

அரசு சார்பில் ஊராட்சி மற்றும் மாநகராட்சி பள்ளிகளில் ஆங்கில வழிக் கல்வி கற்க அனுமதி வழங்கவுள்ளது. அதேபோன்று அரசு உதவி பெறும் எங்களைப் போன்ற பள்ளிகளுக்கும் அனுமதி வழங்கினால் இப்பள்ளிகள் தொடர்ந்து இயங்க அதிக வாய்ப்பு உள்ளது. இல்லை என் றால் ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி இழுத்து மூடும் அவல நிலை ஏற்படும். எனவே, அரசு இதனைக் கருத்தில் கொண்டு, உரிய நடவடிக் கையை விரைவில் எடுக்க வேண்டும் என்பது எங்களைப் போன்ற பள்ளிகளின் கோரிக்கையாகும்.

இன்றைய நிலை ?
ஆங்கில வழிக் கல்வி மோகம் அதிகரித்து வரும் நிலையில் அதற்கு போட்டியாக அரசு சார்ந்த பள்ளிகள் சட்டென மாறுதல் நிச்சயம் நிகழாத ஒன்று. ஆயினும் எங்கள் பள்ளியில் ஒவ்வொரு மாணவருக்கும் முறையான கல்வியை கற்பிக்கின்றோம். பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு கல்வி கற்றுக் கொடுப்பது என்பது மிகச் சவாலான விசயம். ஆனால் எங்களது பள்ளி அதை மிக மிக எளிதாக கையாள்கிறது. மேலும் மாவட்ட, மாநில அளவில் நடைபெறும் பல்வேறு போட்டிகளில் எங்கள் மாணவர்கள் கலந்து கொண்டு வெற்றிப் பெற்றுள்ளனர்.

எங்கள் பள்ளிப் படிப்புடன் பின்தங்கிய மாணவர்கள் தமது கல்வியினை நிறுத்த நாங்கள் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். ஆதலால் எட்டாம் வகுப்பு முடித்தவுடன் அவர்களை மதுரை சேதுபதி மற்றும் மதுரை மேல்நிலைப் பள்ளியில் சேர்த்து விடுகின்றோம். எங்களுக்கு அப்பள்ளி நிர்வாகம் தொடர்ந்து உறுதுணையாக இருந்து வருவதற்கு எங்களது நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம். அதேபோன்று இன்றைக்கு எங்கள் பள்ளி இல்லை என்றால் இங்கு பயிலும் 250க்கும் மேற்பட்ட மாணவர்கள் வறுமையால் வேலைக்குச் செல்லும் நிலை ஏற்படும். இது நிகழாத வண்ணம் எங்களால் இயன்றதை இறுதி வரை செய்வோம்.

ஆசிரியர்களுடன்…

பள்ளிக்கு உதவியும் / தேவையும்:
எங்களது பள்ளிக்கு இப்பகுதி ரோட்டரி கிளப் ஸ்டார் அமைப்பு, புதிய குரல் அமைப்பு மற்றும் ஜெசிஐ மல்லிகை அமைப்பு, ஆயுத சிறகுகள் அமைப்பு மற்றும் சென்னை ஸ்வஸ்திக் பிரிண்டர் ஆகியவைகள் எங்கள் பள்ளிக்கு தேவையான உதவிகளைச் செய்கிறது. இதுபோன்று எங்கள் பள்ளிக்கு உதவிடும் அனைத்து நல் உள்ளங்களுக்கும் எங்களது நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

தற்போது எங்கள் பள்ளியில் சுமார்ட் கிளாஸ் வகுப்பறை தேவைப்படுகிறது. அத்துடன் கல்வி சார்ந்த வீடியோக்களை திரையிட புரஜெக்டர் மற்றும் லேப்டாப் தேவைப்படுகிறது. எனவே, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் எங்களது பள்ளி மாணவர்களுக்கு அதனை வழங்கி உதவலாம். தற்போது இப்பள்ளியில் 5 வயது முதல் 14 வயது வரை கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி பிறப்பு சான்றிதழ் மூலம் பள்ளி யில் சேர்க்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது என்று தனது உரையை முடித்தார் தாளாளர்.

எத்தனையோ இடையூறுகளுக்கு மத்தியில், 1957 ஆம் ஆண்டு முதல் 2017 ஆம் ஆண்டு வரை கல்வித் துறையில் பல்லாயிரக்கணக்கான மாணவ, மாணவிகளை உருவாக்கிய இப்பள்ளிக்கு தேவையானவற்றை இருப்பவர்கள் கொடுத்து உதவிடுதல் மட்டுமே உண்மையான கல்விச் சேவையாகும். 60 ஆண்டு காலம் மதுரை ஜெய்ஹிந்த்புரத்தின் அடையாளமாக விளங்கும் நேத்தாஜி நடுநிலைப் பள்ளியை நாம் ஒருமுறை கை கூப்பி வணங்கி விடைபெற்றோம்.

பழைய மாணவர்

எனது பெயர் முனியசாமி. நான் மட்டுமின்றி எனது குடும்ப உறுப்பினர்களும் முதல் வகுப்பிலிருந்து 8ம் வகுப்பு வரை இப்பள்ளியில்தான் பயின்றோம். ஆதலால் இப்பள்ளி பற்றி நன்கு அறிவேன். இங்கு பயிலவரும் மாணவர்கள் அத்தனை பேரும் வறுமையான குடும்பத்தைச் சேர்ந்த வர்கள். அவர்களின் குழந்தைகளுக்கு இப்பள்ளி ஒரு வரப்பிரசாதம்தான். நான் படிக்கும் போது 750க்கும் மேற்பட்ட மாணவர் கள் பயின்றனர். ஒரு வகுப்பில் 50க்கு கீழ் குறையாத மாணவர்கள் இருந்தனர். ஆனால் இன்றைக்கு இது தலைகீழ். நான் பயின்ற பள்ளி என்பதைத் தாண்டி ஏழைக் குழந்தை களின் கல்விக்கு என்னால் ஆன உதவிகளை புதிய குரல் எனும் அமைப்பின் வாயிலாக இணைந்து தொடர்ந்து கல்வி சார்ந்த உதவிகளைச் செய்து வருகின்றோம் என்றார்.

வெளியீடு: ஹலோ மதுரை மாத இதழ்
ஆண்டு: 01.05.2017
எழுத்து: மு.இரமேஷ்

Spread the love

Reporter Ramesh

15 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிக்கைதுறையில் பணிபுரிந்து வருகின்றேன். சிறப்புக் கட்டுரைகள், சிறப்புச் செய்திகள் எழுத்து வடிவிலும், காணொலியாகவும் பணியாற்றிய அனுபவம் உண்டு. பத்திரிக்கைத்துறையில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகின்றேன். அந்த மாபெரும் கடலில் ஒரு இலையாகவே மிதந்து தொடர்ந்து மாணவனாக கற்று வருகின்றேன். கடந்த மூன்று ஆண்டுகளாக மதுரை மாவட்டத்தில் இயங்கி வரும் ஹலோ மதுரை மாத இதழ் மற்றும் செயலிக்கு நிருபராகவும், புகைப்படக்கலைஞராகவும் பணியாற்றுகின்றேன். அலைபேசி எண்: 9566531237.

Related Articles

error: Copy Right Hello Madurai !!
Open chat